
படத்தில் யாரும் யாரிடமும் எந்த யாசகமும் பெறவில்லை. பின் படத்திற்கு ஏன் இந்தத் தலைப்பு எனத் தெரியவில்லை.
அனைவருக்கும் தேடிச் சென்று உதவிச் செய்யும் நாயகன், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் கேட்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை.
கொஞ்சம் தாடியுடன் அதிகம் சிரிக்காத சூர்யாவாக நடித்துள்ளார் நாயகன் மகேஷ். வேலைக்கு இன்ட்டர்வியூக்குச் செல்லும் பொழுதுகூட, அவரது உடையிலும் முகத்திலும் பெரிய மாறுதல் ஏற்படுவதில்லை. சிரிக்கும் ஒன்றிரண்டு காட்சிகளில்கூட சோர்வாகவே காணப்படுகிறார். ‘அங்காடித் தெரு’ படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம்தான் என்றாலும்கூட, வலுவாக பார்வையாளர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது சந்தேகம்தான். இதற்கே அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
ஷாலனியாக அறிமுக நாயகி நிரஞ்சனா நடித்துள்ளார். கேரளத்திலிருந்து இன்னுமொரு வரவு. கண்டதும் காதலில் விழும் வழக்கமான நாயகியாக முதல் பாதியில் வந்துவிட்டு காணாமல் போய்விடுகிறார். பின் இரண்டாம் பாதியில் மீண்டும் தலைகாட்டுகிறார். இவரது வருகையால், மெஸ்சேஜ் படமாக முடிய வேண்டியது காதல் படமாகத் தோற்றமளிக்கிறது.
படத்தில் நடித்த அனைவரையும்விட அதிகமாக ஸ்கோர் செய்வது நாயகனின் அக்காவாக நடித்துள்ள ஜானவிதான். படத்தின் மையக்கருவை தன் தோளில் சுமப்பவர் என்றுகூடச் சொல்லலாம். வசனத்தின் தேவையின்றியே அவர் தனது முகபாவனைகளின் மூலம் அவரது குணத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். ஆனால் அவர் தனது வாழ்க்கையைப் பற்றிப் பேசும்பொழுது மட்டும், பேச்சு வழக்கிலிருந்து மாறி இயக்குநரின் எழுத்து நடையைப் பிரதிபலிக்கிறார். சில காட்சிகளில்தான் வந்தாலும், ஜானவியின் காதலராக வருபவரின் கதாபாத்திரம் அருமையாக உள்ளது.
‘கண்ணாடி மனமே’, ‘செந்தாழம் பூவே’ ஆகிய பாடல்கள் சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் கேட்க நன்றாக இருக்கிறது. கே.வி.ஆனந்திடம் பணியாற்றிய வே.பாபுவின் ஒளிப்பதிவு படத்தின் மூடை சரியாக பிரதிபலிக்கிறது.
எழுதி இயக்கியிருப்பவர் துரைவாணன். அமீரிடமும், எம்.சசிகுமாரிடமும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை இணைத்து கதையை உருவாக்கியுள்ளார். கதையிலும், கதாபாத்திரத் தேர்விலும் காட்டிய சிரத்தையை கதையின் போக்கை வடிவமைப்பதில் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. மழை பெய்கிறது. நாயகன் பின்னால் நாயகி செல்கிறார். தடுக்கிக் கூட விழுந்தாற்போல் தெரியவில்லை, நாயகன் மீது நாயகி சரிந்து இடிக்கிறார். உடனே பாடல் தொடங்கி விடுகிறது. அதே போல், நாயகனுக்கு ஏமாற்றத்தாலும் வருத்தத்தாலும் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. சோதனை செய்யும் டாக்டர், “பயப்பட ஒண்ணுமில்லை. இவருக்கு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி வந்திருக்கு. சரியாகிடும்” எனச் சொல்கிறார். (அந்த டாக்டர் முதல் கொண்டு நாயகனின் குடும்பத்தில் யாருமேவா விடாது கருப்பு நெடுந்தொடரோ, சந்திரமுகி படமோ பார்த்திருக்க மாட்டார்கள்?)
எதிர்பாராத திருப்பத்துடன் படம் சுபமாக முடிவது ஆறுதலளிக்கிறது.