Search

யாருடா மகேஷ் விமர்சனம்

Yaaruda mahesh
படத்தின் ட்ரெயிலர் தான் படத்தின் மூளதனமே!! (‘ல’ குறில் அல்ல நெடிலே!! மூளையின் மழூஉ.)
பொறுப்பற்ற ஞாபக மறதிக்காரனான ஷிவா சிந்தியாவைக் காதலிக்கிறான். கல்யாணம் செய்துக் கொள்கிறான். அவர்களுக்கு குழந்தையும் பிறந்து விடுகிறது. மகேஷ் என்பவரிடமிருந்து சிந்தியாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. யார் “அந்த” மகேஷ் என்றும், அவனை சிவா கண்டுபிடித்தானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. 
இந்தப் படத்தில் வரும் அனைத்தும் “குறியீடுகள்” என்ற வாசகம் எழுத்தாகவும், அதை மேஜர் சுந்தரராஜன் குரலில் படித்தும் காட்டுகின்றனர். படத்தின் தொடக்கத்தில் இருந்தே இயக்குநரின் சேட்டை தொடங்கி விடுகிறது. கூட்டமாக நிற்பவர்களில் ஒருவர் மீது மட்டும் ஏன் கல் விழுகிறது என தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி கதையை அனிமேஷனில் தொடங்குகின்றனர். அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக முயற்சி செய்துள்ளனர். முதல் பாதி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்று திடுக்கிடும் திருப்பத்துடன் முடிகிறது. நாயகன் போலவே, ‘யாருடா மகேஷ்’ எனப் பார்வையாளர்களையும் யோசிக்க வைத்து விடுகின்றனர். படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் டி-ஷர்ட் வாசகங்கள். 
“Im virgin but its my old t-shirt.”
“Atlast I did it.”
என திரைக்கதையின் முக்கியமான கூறுகளை டி-ஷர்ட் வாசகங்களாக உபயோகப்படுத்தி உள்ளனர்.
நாயகன் சிவாவாக சந்தீப். ஏற்கெனவே தெலுங்கு படங்கள் சிலவற்றில் நடித்தவர். நாயகி சிந்தியாவாக டிம்பிள். திரைக்கதையின் ஓட்டத்தில் இருவரது நடிப்பும் பெரிதாக உறுத்தவில்லை. வன்முறையே இல்லாத படம், ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் வாங்கியதற்கு காரணம் ஜெகன். வொட்-த டக், டிவிடி பையா என இழுத்துச் சொல்வது, இரட்டை அர்த்தத்திலும் நேரான அர்த்தத்திலும் பேசுவது என சந்தானம் இல்லாத குறையைப் போக்கியுள்ளார் ஜெகன். சமீபத்திய தமிழ்த் திரைப்படத்தின் கட்டாய வழக்கத்தை அனுசரித்து, நாயகன் குடித்து விட்டுப் பாடும் பாடலும் மறக்காமல் வைத்துள்ளனர்.
முன் பாதியில் வரும் அனைத்துப் பாத்திரங்களையுமே மகேஷாக பின் பாதியில் காட்டுகின்றனர். மானாட மயிலாட நிகழ்ச்சியை, கலா மாஸ்டரை, விஜயகாந்தை, தனுஷை, செல்வராகவனை என நிறைய பேரைப் படத்தில் சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளனர். உதாரணம், “பாலா படத்து வில்லன் போலவே இருக்கான். எங்கயாவது கடிச்சு வச்சிடப் போறான்” என ஜெகனுக்கு ஒரு வசனம் வருகிறது. தமிழ்த் திரைப்படங்களில் எப்பொழுதும் வருவது போல, கல்லூரி ஆசிரியராக நடித்திருக்கும் லொள்ளு சபா சுவாமிநாதனை வழிசல் பார்ட்டியாக காட்டியுள்ளனர். அவரும் தனது வழக்கத்தினை மாற்றாமல், “டாமிட்” என சிவாஜியை இமிடேட் செய்கிறார். லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், ஸ்ரீநாத் முதலியவர்கள் சிற்சில காட்சிகளில் தலை காட்டி விட்டு படத்தை நிறைவாக முடித்து வைக்கின்றனர். 
வேறெங்கும் கிளைகள் இல்லாத இயக்குநர் மதன்குமார், முதல் பாதி தொய்வினைக் குறைத்திருந்திருக்கலாம். முக்கியமாகப் பாடல்கள் சலிப்பை வரவைக்கின்றன. ட்ரெயிலர் தந்த தாக்கத்தை படம் தரவில்லை.



Leave a Reply