
பொம்மைப் படங்கள் என கொஞ்சம் கேலியாக அழைக்கப்படும் சித்திரக் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமா? “ஆம்” என்பவரே இங்கு அதிகம்.
ஆனால் அப்படியில்லவே இல்லை, காமிக்ஸ் என்பது அனைத்து வயதினருக்குமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக “கிராபிக் நாவல்கள்” பற்றியதொரு கலந்துரையாடலை யாவரும்.காம், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் காமிக்ஸ் உலகம் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினர்.
“ஃப்ரான்ஸில் 95% பேர் காமிக்ஸை விரும்பிப் படிக்கிறாங்க. லேண்ட் மார்க் போல, அங்க ஒரு 6 மாடிக் கட்டடம் முழுவதும் காமிக்ஸ்க்கு என தனியாக வச்சிருக்காங்க. உள்ள போனீங்கன்னா, காமிக்ஸ் படிச்சு தனியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குப் போனாலே மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
அதே போல், ஜப்பானிலும் 95% பேர் மாங்கா (ஜப்பானிய மொழியில் காமிக்ஸ்)-க்கு அடிமைகள். நம்மூர்ல எப்படி வாஷிங் மெஷின்க்கு பக்கத்தில் நடிகையை நிற்க வைத்து விளம்பரம் செய்வார்களோ, அப்படி காமிக்ஸ் வரையும் ஆர்டிஸ்ட்டை நிற்க வைத்து விளம்பரம் செய்வார்கள். காமிக்ஸ் ஆர்டிஸ்ட்டை ஜப்பானில் அப்படிக் கொண்டாடுகிறார்கள்” என உலகளவில் ஒன்பதாவது கலையாகப் (9th art) புகழப்படும் காமிக்ஸ்க்குள்ள வரவேற்பினைக் குறித்துப் பகிர்ந்தார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.
‘ஒன் பீஸ் (One Piece)’ எனும் இந்த ஜப்பானிய மாங்கா (காமிக்ஸ்), 38 கோடி வால்யூம் புத்தகங்கள் விற்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரை, ஏதேனும் ஒரு மாங்கா (காமிக்ஸ்) 10 லட்சம் பிரதிகள் மட்டும் விற்றிருந்தால், அதொரு தோல்விப் புத்தகமென நிறுத்தி விடுவார்கள் என்றொரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்தார் கிங் விஸ்வா.
“ஒரு மாங்கா (காமிக்ஸ்)-இல், இரண்டு சாமுராய்கள் சண்டை போட்டுக் கொள்வது போல் வரையப்பட்டிருந்தால், அதைப் பார்க்கும்போது நம் கண் முன் நிகழ்வது போலவே இருக்கும். பொதுவாக காமிக்ஸ் படிப்பவரின் பார்ட்டிசிபேஷனை நிறைய கோரும். காமிக்ஸ்களில் நிறைய பேனல்கள் இருக்கும். சினிமாவிலோ ஒரு பேனல்தான். காமிக்ஸில் வரும் ஒரு பேனலுக்கும், இன்னொரு பேனலுக்கும் இடையில் விடுபட்டதை நம் மனம் நிரப்பிக் கொள்ளும்” என்றார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.
“வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு. அதை வெர்பல் வேர்ல்ட் (Verbal World) எனச் சொல்வோம். ஆனால் காமிக்ஸ்களில் இமேஜஸ்தான் முக்கியம். காமிக்ஸ் உருவாக்க இங்கேயும் முயற்சி செய்றாங்க. ஆனா அதெல்லாம் வெறும் மிமிக்ஸ்தான். நமக்கு ஏன் மிமிக்? நேரடியாக அமெரிக்க கிராபிக் நாவல்களையே படிச்சிடலாமே! நம்ம மண்ணின் கதைகள் காமிக்ஸ்களாக உருவாக்கப்பட வேண்டும். ராமாயணம், மகாபாரதம் போன்ற கிளாஸிக் கதைகளையே கிராபிக் நாவல்களாக உருவாக்கலாம். எழுபதுகளின் இறுதியிலேயே இங்க அமர் சித்ரா கதா காமிக்ஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அது அவ்வளவு உவப்பானதாக இல்லை. காரணம் அவங்க வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் தர்றாங்க. ஆனால் லாங் ஷாட், வைட் ஷாட் என சினிமாவிடமிருந்து கிராஃபிக் நாவல் நிறைய எடுத்துக் கொண்டுள்ளது. சினிமாவுக்கும் நிறைய கொடுத்துள்ளது” என்றார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.
மேலும், ஏன் தமிழில் காமிக்ஸ்கள் உருவாவதில் சுணக்கம் ஏற்பட்டது என்றதையும் சுட்டிக் காட்டினார். “காமிக்ஸில் எழுத்தாளரை விட ஓவியருக்கு புகழ் அதிகம் கிடைக்கத் தொடங்கியதால், எழுத்தாளர்களுக்கு காமிக்ஸ்க்காக கதையெழுத மனமில்லாமல் போய்விட்டது. நிறைய எழுத்தாளர்கள் கதைகளோடு வரணும். ஓவியருடன் இணைந்து இணக்கமாக நிறைய காமிக்ஸ்கள் உருவாக்க வேண்டும்” என்று அழுத்தி வலியுறுத்தினார். ‘நோவா’ என்று குமுதத்தில் வந்த சயன்ஸ் ஃபிக்ஷன் காமிக்ஸை, எழுத்தாளர் சுஜாதாவோடு இணைந்து ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமிக்ஸ் என்றால் என்ன? கிராஃபிக் நாவல் என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இவை பெரும்பாலோருக்கும் உள்ள குழப்பமே.! அதைத் தெளிவுபடுத்தும் விதமாக, “சின்ன சின்ன கட்டங்களுக்குள் ஒருங்கமைக்கப்படும் சித்திரங்கள் என காமிக்ஸைச் சொல்லலாம். கோர்வையான கலை (Sequential Art) என விளக்கம் அளிக்கின்றார் அமெரிக்க கார்டூனிஸ்ட் வில் எய்ஸ்னர். நாம் சித்திரக்கதை என்று சொல்வதைத்தான் பிரட்டனில் காமிக்ஸ் என்கிறார்கள். ஃபிரான்சில், இதழ்களில் தொடர் கதைளாக வருவதை காமிக்ஸ் என்பார்கள். அதையே தொகுத்து புத்தகமாகப் போடும்பொழுது ஆல்பம் என்பார்கள். அமெரிக்காவிலோ, 22 பக்கங்களுக்குள் சிறைபடுத்தப்பட்ட ஒரு முழுமை பெறாத கதையை காமிக்ஸ் என்பார்கள்.
முழுக் கதையையும் கொண்ட காமிக்ஸ் புத்தகமே கிராஃபிக் நாவலாகும் என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீவ் ஹாலந்த். தொடர் கதைகளாக வரும் காமிக்ஸ் ஒரே புத்தகமாக வந்தால் அது கிராஃபிக் நாவல்” என்று விளக்கமளித்தார் கிங் விஸ்வா. “கிராஃபிக் நாவல் சூப்பர் ஹீரோக்களுக்கானது மட்டுமில்லை. இலக்கியம், புனைவு, அபுனைவு என எல்லா ஜானரும் அதில் அடங்கும்” என்றார் ஓவியர் மருது.
“இந்த வருட தீபாவளி முதல், பிரபல தமிழ்ப் பத்திரிகையில் நேரடி தமிழ் காமிக்ஸ்கள் வரப் போகிறது” என்ற இனிப்பான செய்தியோடு கலந்துரையாடல் முடிந்தது.
– ஆர் டின்
பி.கு.1: காமிக்ஸ் 9வது கலையெனில், முதல் எட்டு கலைகள் என்னென்ன? அவை: 1. கட்டடம் 2. சிற்பம் 3. ஓவியம் 4. நடனம் 5. இசை 6. கவிதை 7. திரைப்படம் 8. தொலைக்காட்சி 9. சித்திரக்கதை ஆகும்.
பி.கு.2: பரிந்துரைகள்
>> A Graphic Novel: A CONTRACT WITH GOD AND OTHER TENEMENT STORIES By Will Eisner
அமெரிக்கப் படங்களுக்கு எப்படி ஆஸ்கார் விருது மதிப்பிற்குரிய விருதோ, அப்படி காமிக்ஸ் புத்தகங்களுக்கு “எய்ஸ்னர் விருது”. 1988 ஆம் ஆண்டு முதல், வில் எய்ஸ்னர் பெயரில் விருதுகள் தருகின்றனர். ஒரு கலைஞன் (1917 – 2005) உயிரோடிருந்த பொழுதே பெறும் மிகப் பெரிய அங்கீகாரம் இது.
>> A Documentary about Osamu Tezuka
மாங்காவின் (காமிக்ஸ்) கடவுள் எனப் புகழப்படும் இவர் தன் வாழ்நாளில் சுமார் 150,000 பக்கங்களுக்கு மேல் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> ஜப்பானிய அனிமேஷன் படம்: SPIRITED AWAY By Hayao Miyazaki
ஹயாவோ மியாசாக்கி, மாங்காவின் பிதாமகரான ஒசாமு தெஸூகாவைப் பின்பற்றி காமிக்ஸ் வரைய வந்தார். ஆனால் அவரது சாயலைத் தவிர்க்க முடியவில்லை என தான் வரைந்தவற்றை எல்லாம் அழித்து விட்டு அனிமேஷன் பக்கம் போனவர். அவரது படங்கள் எல்லைகள் கடந்து கவனிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ‘டப்’ செய்யப்படும் பொழுது, ‘நோ கட்ஸ்’ என அவர் கறாராக இருந்ததால் டிஸ்னி நிறுவனம் அவர் மீது கடுப்பில் இருந்தது. ஸ்பிரிடட் அவே எனும் படத்தை வாங்கி ஆங்கிலத்தில் டப் செய்த டிஸ்னி நிறுவனம், போதிய விளம்பரம் செய்யாமல் அப்படத்தை இருட்டடிப்பு செய்தது. ஆனால், அப்படம் ஆஸ்கார் விருது வாங்கி டிஸ்னியை மன்னிப்புக் கோர வைத்தது.
>> ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அறிமுகம் செய்து வியந்தோதிய கலைஞர்கள்: Matisse, Flex Raymond, Alex Toth, Alphonse Mucha, Anders Zorn, John Howe (Lord of the Rings), Arthur Rackman, Aubrey Beardsley, Bernie Wrightson (Frankstein), Bill Plympton, Bob Peak, Burne, Hogarath, Calder, Carl Barks, Charles Dana Gibson (அழகான அமெரிக்கப் பெண்களை ஜிப்ஸன் ஓவியப் பெண் போல் இருக்கிறாய் எனச் சொல்வார்கள் – டைட்டானிக் ஹீரோயின் ரெஃபரன்ஸ் இவர் ஓவியமே!), Charles M. Schutz, Charles Marion Russell, Chester Gould, Dean Cornwell, Disney, Edmund Dullac, Frank Frazetta, Francis Bacon, Frank Miller (300, Sin City), Fredrick Remington, George Herriman, Gustave Dore, H.R.Giger, Hal Foster, Hayao Miyazaki, Heinrich Kley (Fantasia), Herge, Ralph Steadman, Henri de Toulouse, J.C.Leyendecker, Jack Davis, Jack Kirby, Moebius/Jean Giraud, Jim Henson, Jiri Trnka, Joe Kubert, John Buscema, John Singer Sagent, Man Ray, Marc Davis, Mary Blair
>> A Book: EISNER/MILLER
சீனியரான வில் எய்ஸ்னருக்கும், ஜூனியரான ஃப்ராங்க் மில்லருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்.
நாள்: 26 – 09 -2015
நேரம்: மாலை 6
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்