ரியோ என்பது பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜெனிராவைக் குறிக்கும்.
ப்ளூ என்னும் நீலநிற ஆண் கிளியை லிண்டா என்னும் பெண் தனது சிறுவயது முதலே வளர்த்து வருகிறார். பறவையியல் வல்லுநரான டுலியோ, லிண்டாவை அணுகி, அவரையும் ப்ளூவையும் ரியோவிற்கு அழைக்கிறார். நீலநிற கிளிகளில் கடைசியாக வாழும் பெண் கிளியான ஜ்வெலையும், ஆண் கிளியான ப்ளூவையும் ஒரே கூண்டில் விடுகின்றனர். பறவைகளைக் கடத்தும் கடத்தல்காரர்கள், ஜ்வெலையும் ப்ளூவையும் கடத்திவிடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பி தங்களது வாழ்க்கையைத் தொடங்குகின்றனர் ப்ளூவும் ஜ்வெலும். அவர்களுக்குப் பிறக்கும் மூன்று கிளிகளுடன், ரியோ படத்தின் முதல் பார்ட் நிறைவடையும்.
3டி படமாக வந்திருக்கும் ரியோ-2 முதல் பார்ட்டில் வரும் பறவைகளையே கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளது. ஒரு பறவையை அமேசனில் விடச் செல்லும் லிண்டாவும் டுலியோவும், நீலநிற கிளியின் இறகொன்றைப் பார்க்கின்றனர். நீலநிற கிளிகள் கூட்டமாக காட்டில் வாழ்ந்து வருகின்றன என்ற செய்தியை, ப்ளூவும் ஜ்வெலும் தொலைக்காட்சியில் காண்கின்றனர். தங்கள் இனத்தைத் தேடி, 2000 கி.மீ. பறந்து குடும்பத்துடன் அமேசான் காட்டிற்கு நண்பர்களுடன் பறக்கின்றனர். அங்கே தனது இனத்தைப் பார்த்து விடுகின்றனர். நகரத்திலேயே வாழ்ந்து வந்த ப்ளூவிற்கு காட்டு வாழ்க்கை ஒத்து வருகிறதா என்றும், காட்டை அழிப்பவர்களிடன் சிக்கும் லிண்டா – டுலியோவின் கதியென்ன என்றும் படம் சுபமாய் முடிகிறது.
காட்டில் பறவைகளின் குதூகலமான வாழ்க்கையும், அவைகளின் வண்ணமயமான நடனத்தையும் 3டி-இல் பார்க்கப் பரவசமாய் உள்ளது. படத்தில் ஈர்க்கும் அம்சங்கள் ஏராளம். பிங்க் நிற தவளையின் காதல், எறும்பு திண்ணியின் நாக்கை ரியோ-1 இல் வரும் வில்லன் பறவையான நைகெல் பயன்படுத்தும்விதம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக திரையில் ஆமைகள் தோன்றினாலே மக்கள் கைதட்டத் தொடங்கிவிடுகின்றனர்.
அமேசானில் கதை நடக்கிறது எனும்பொழுது, படத்தில் அனகொண்டா இல்லாமலா? சாத்தானுடன் ஒப்பிடப்படும் பாம்பைக் கொண்டே, இயக்குநர் இப்படத்தில் தர்மத்தை நிலைநாட்டுவது நல்ல நகைமுரண். படத்தின் சுவாரசியங்களில் ஒன்று அனகொண்டாவிற்கு லாலிபாப் பிடிக்காது என்பதே! அதே சமயம், அங்கு வாழும் சின்னஞ்சிறு குரங்கிற்கோ லாலிபாப் என்றால் உயிர். கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் சென்று களிக்க ஏற்றதொரு படம்.
‘ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ்’இன் ஒன்பதாவது படமிது. 2002 இல் இவர்களது முதல் படமான ‘ஐஸ் ஏஜ்’ முதல் பார்ட் வெளிவந்த பின், முழு நீள அனிமேஷன் படமெடுக்கும் கம்பெனியாக ப்ளூ ஸ்கை மாறியது. ‘எபிக்’ வரையில் சாதாரணமாக லோகோ போட்டுக் கொண்டிருந்தவர்கள், ‘ஐஸ் ஏஜ்’ புகழ் அணிலான ஸ்க்ரேட் ஏக்கோன் (Acorn) பழத்தைச் சேகரிக்கும் முயற்சியில் பிளவு உண்டாக்கும் அனிமேஷனைப் போட்டு, அது மெல்ல புது லோகோவில் முடிக்கின்றனர்.
வன்முறையோ, மற்ற எந்த அச்சுறுத்தலோ இல்லாமல், காடுகளை அழிக்கக் கூடாது என்ற கருத்தையும் சொல்கிறது படம். அமேசானில் காடழிப்பு வருடத்திற்கு 28% உயர்ந்துள்ளதாக பிரேசில் அரசாங்கம் போன வருடம் நவம்பரில் தெரிவித்தது ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது.