Shadow

ர விமர்சனம்

Ra Tamil Review

– ஒரு பேய்ப் படம்; இல்லை அமானுஷ்யப் படம்; இல்லை இல்லை சாத்தான் பற்றிய படம். தலைப்பின் பெயர் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை.

கல்யாணம் ஆனவுடனே ரென்யா மர்மமான முறையில் இறந்து விடுகிறாள். அவளுடன், அவள் கணவன் அஜய் பேச எடுக்கும் முயற்சி விபரீதமாகி, அவனைச் சுற்றி படு அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன. எதனால் அவை நிகழ்கின்றன என்பதுதான் படத்தின் கதை.

அஜயாக அஷ்ரஃப். பெரும்பாலான காட்சிகளில் இவர் மட்டுமே திரையில் இருக்கிறார். அதுவும் அசையாமல் வருத்தப்பட்டப்படியோ வெறித்தப்படியோ இருக்கிறார். எனினும் திரைக்கதையின் ஓட்டத்தால் அஷ்ரஃப், இந்த சவாலை சுலபமாகக் கடக்கிறார். அஜய்க்கு, ஒரு வரம் கிடைக்கிறது. யாராலும் அவனைக் கொல்ல முடியாது; அதே போல் உயிர் போகும் விபத்து எதுவும் அவனுக்கு நிகழாது. இப்படி சூப்பர் ஹீரோவாக அவனுக்கு வாய்ப்புக் கிடைச்சும், வழக்கமான தமிழ் சினிமாகளில் வரும் மொக்கை வில்லன் போல் நடந்து கொள்கிறான் அஜய். நாயகியாக அதிதி செங்கப்பா. காட்சிகள் குறைவெனினும், நிறைவாக நடித்துள்ளார். அகால மரணமடையும் இவர், முதல் பாதி படத்தின் மிரட்டலுக்குக் காரணமாக உள்ளார்.

படத்தின் பலம் அதன் தொழில்நுட்ப நேர்த்தி. ஒளிப்பதிவாளர் R.சரவணனும், ஒலிப்பதிவாளர் ராஜ் ஆர்யனும் மிரட்டியுள்ளனர். அதற்கு இணையாக விஷூவல் எஃபெக்ட்ஸும். படத்தைக் காத்து நிற்கும் திரைக்கதை, சட்டென வரும் பொருந்தாத க்ளைமேக்ஸால், முழுப்படமாக நிறைவினை அளிக்கத் தவறிவிடுகிறது.

சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற வாக்கியத்தின் பொருளுணர படத்தின் க்ளைமேக்ஸ் கண்டிப்பாகப் பார்க்கணும். மனிதர்களுக்கு பேராசை என ஃபீல் செய்யும் நாயகன் எடுக்கும் அபத்தமான முடிவு அடுத்த பாகத்திற்கான விதையாக அமைகிறது. படத்தின் முதல் பாதி அமானுஷ்யக் காட்சிகள் நன்றாக வந்துள்ளன. ஆனால் ரசிகர் எதிர்பார்ப்பதை தரக்கூடாது என்ற முனைப்போடு இரண்டாம் பாதி திரைக்கதையை நகர்த்தியுள்ளனர்.

‘ர’ போன்று சற்றே வித்தியாசமான படங்கள், ஹாலிவுட் அல்லது கொரியன் அல்லது ஏதோ ஒரு உலகப் படத்தின் தழுவலெனத் தொடர்ந்து அவதூறைச் சுமந்து வருகிறது. அந்த சீனை இங்கச் சுட்டார்கள், இந்த சீனை அங்கச் சுட்டார்கள் என ரசிகர்கள் அதிகம் கஷ்டப்படக் கூடாதென, Filmography என படம் முடிந்து மேலெழும் கிரெடிட்டில், Insidious, Stir of Echoes, Dead Silence ஆகிய படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு விடுகின்றனர். மூலப் படைப்பிற்கு, இத்தகைய குறைந்தபட்ச மரியாதையையாவது இனி தமிழ் சினிமா தொடர்ந்து இதுபோல் செய்யுமென நம்புவோமாக!