Shadow

லாஸ் வேகஸ்

லாஸ் வேகாஸ்

எந்த முகூர்த்தத்தில் எங்கள் ஊருக்கு ‘ஆல்பனி’ என்று பேர் வைத்தார்களோ தெரியவில்லை, வருடத்தின் முக்கால் வாசி நாட்களுக்கும் மேலாய்க் கொட்டும் பனியும், நடுங்கும் குளிருமாய் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் டிசம்பர் மாதப் பனியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

போன வருட டிசம்பர் மாத பனியிலிருந்து சில நாட்களாவது தப்பிக்க என்ன செய்யலாமென யோசித்த போதுதான், குளிர் குறைவான லாஸ் வேகஸ் பயணத்திட்டம் உதித்தது. கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்த மகளுக்கு இந்தப் பயணத்திட்டம் பிடித்துப் போக மகனுக்கு அத்தனை இஷ்டமில்லை.

”ஏம்ப்பா, சரியா டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் அன்னிக்கே கிளம்பனுமா? எனக்கு கிறிஸ்துமஸ் கிப்ஃட் இல்லையா?? அடுத்த நாள் போகலாமே….” என சுணங்கியவனிடம், “இதுதான் இந்த வருட கிறிஸ்துமஸ் பரிசு” என்று சொன்னதில் மிகவும் கடுப்பாகி விட்டான். ஒரு வழியாகப் பேசி, உனக்கான கிஃப்ட்டை இந்தவருடம் சாண்டா ஆன்லைனில் (!!) அனுப்பி வைப்பார் என்று நம்ப வைத்து சமாதானப்படுத்தினோம்.

அடுத்த கட்டமாய் பயண முஸ்தீபுகள், திட்டமிடல்கள் என நாட்கள் பரபரப்பாய் ஓடியது. குளிர் குறைவாக இருக்குமென்றாலும் உஷாராக வின்ட்டர் ஜாக்கெட், குல்லா, ஷூ, கையுறை எடுத்துச் செல்வதெனத் தீர்மானித்தேன். விமான பயணச் சீட்டு, ஹோட்டல் அறை முன்பதிவுகள் என ஒவ்வொன்றாய்ப் பட்டியலிட்டு செய்து முடித்து அதிகாலையில் ஆறுமணி விமானத்திற்கு 4.45 மணிக்கே வாடகைக் காரை வீட்டுக்கு வரச்சொல்வது வரை செய்து தயாரானோம்.

ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க, நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குழந்தைகளுக்கும் கணவருக்கும் காலை உணவைத் தயார் செய்துவிட்டு, இன்னொரு முறை விமான டிக்கெட், முன்பதிவு செய்த வாடகைக்கார், ஹோட்டல் தகவல்களை எல்லாம் சரிபார்த்து நிம்மதியானேன். ‘கடவுளே, இந்தப் பயணம் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்க வேண்டும்’ என மனம் வேண்டிக் கொண்டது.

வாடகைக் கார் சரியான நேரத்தில் வர, அரைகுறை தூக்கத்திலிருந்த குழந்தைகளுடன் கிளம்பினோம். ‘அப்பாடா, இந்த குளிரில் இருந்து ஒரு மினி எஸ்கேப்!!’ என்கிற நினைப்பே ஆனந்தமாய் இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து ஆறேழு நிமிடங்களுக்குள் ஆல்பனி விமான நிலையத்தை அடைந்து விடலாம்.

அந்த அதிகாலை நேரத்தில் விமான நிலையத்தில் கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமான ஃபார்மாலிட்டீஸ் முடிந்து விமானம் ஏறும்பொழுது பத்திரமாக லாஸ் வேகஸ் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று மனம் பதைபதைத்தது. ஏனெனில் இதற்கு முன்பு ஏற்பட்ட சில விமான பயண அனுபவங்கள் அப்படியானவை.

நாற்பத்தைந்து பேர் அமர்ந்து செல்லக் கூடிய சிறிய விமானம். எனக்கு வழக்கமான ஜன்னல் சீட். மகனும், மகளும் அதே வரிசையில் எங்களுக்கு வலப்புறமாக இருந்த இருக்கைகளில் அமர, விமானமும் கிளம்பியது.

பைபை ஆல்பனி..

விமானத்தோடு என் மனமும் சிறகடிக்க ஆரம்பித்து விட்டது.

பனிபடர்ந்த Catskills மலைகள், குன்றுகள், உறைந்த ஏரிகள், ஆறுகள், குளங்கள், பனிச்சறுக்குப் பாதைகள், இலைகள் இல்லா மரங்கள், எவர் க்ரீன் மரங்கள், பெரியப் பெரிய வீடுகள், குழந்தைகள் விளையாடும் பொம்மை கார்கள் போல ஊர்ந்து செல்லும் வண்டிகள் என்று பல காட்சிகள். மேலிருந்து பார்க்கும் பொழுது ஆல்பனி எவ்வளவு அழகு!

ஆல்பனியைத் தாண்டி நியூஜெர்சி மேல் பறக்க ஆரம்பித்த போது, ம்ம்ம்ம் நியூஜெர்சி அத்தனை அழகில்லைதான். மரம், செடிகளுடன் வீடுகள் வீடுகள், எங்கு நோக்கினாலும் வீடுகள்தான். அடுத்த சில நிமிடங்களில் தட்டையான சுவாரசியமில்லாத நிலப்பரப்பின் மேல் விமானம் பறக்கத் துவங்கியது. கண்களை மூடித் தூங்க நினைத்தாலும் மனம் வேடிக்கை பார்க்கவே விரும்பியது.

குழந்தைகளும், கணவரும் காலையில் விட்ட தூக்கத்தைத் தொடர ஆரம்பித்திருந்தார்கள், நான் மற்ற சக பயணிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

எங்களுக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் நடுத்தர வயதினர். அனேகமாய்ப் புதிய காதலர்களாய் இருக்க வேண்டும். அந்த அதிகாலை நேரத்துக்கு அந்தப் பெண் கூடுதலாகவே மேக்கப்பில் இருந்தார். அந்தப் பெண் மேலிருந்து தன் கைப்பையை எடுத்துத்தரச் சொல்ல அவர் எந்த பை என கேட்டுக் கொண்டிருந்தார். சமீபத்தில்தான் சந்தித்துக் கொண்டிருப்பார்களெனத் தோன்றியது.

அந்தப் பெண் தன் கைப்பையில் இருந்து வித விதமான பிரஷ்களை எடுத்து அனாயாசமாக ஏதேதோ பூசி ஏற்கனவே போட்டிருந்த மேக்கப்புக்கு மேக்கப் போட்டு தன்னை அழாகாக்கிக் கொண்டார். ம்ம்ம். ஒருவேளை இந்தப் பெண் மேக்கப் இல்லையென்றால் எப்படி இருப்பாரோ என யோசிக்க ஆரம்பித்து.. நமக்கெதுக்குவம்பு என யோசிப்பதை நிறுத்திக் கொண்டேன்.

மனிதர், அந்தப் பெண் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பணம் கட்டி காலை உணவையும் பிறகு கிரெடிட் கார்ட் தேய்த்து டிவி நிகழ்ச்சிகளை.. கைகளைக் கோர்த்தபடியே அவரவர் இருக்கை டிவிக்களில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹ்ம்ம்..

அவர்கள் வரிசையில் இருந்த மற்றொரு ஜோடி திருமணம் ஆகி பல வருடங்கள் இருக்கும் போலிருந்தார்கள். கணவர் குழந்தைகளுக்கு காலை உணவை எடுத்துக் கொடுத்துவிட்டு உட்கார, அந்தப் பெண் கணவர் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அந்தக் கணவரும் பொறுப்பாய் தன் மனைவிக்குத் தோள் கொடுத்தபடி உட்கார்ந்திருந்தார்.

நானும், கீழே நகர்ந்து கொண்டிருந்த பூமியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பஞ்சுமூட்டைகளாய் கடந்து செல்லும் வெண்பனி மேகங்கள் மனதை கொள்ளை அடித்தன. வட கிழக்கிலிருந்து ‘மிட்-வெஸ்ட்’-இல் பயணம் செய்யும் பொழுதுதான் அமெரிக்காவின் விளைநிலங்களையும், பனி இல்லாத இடங்களையும் காணமுடிகிறது.

Swarnalatha Kuppa

பிரம்மிக்க வைக்கும் பரந்து விரிந்த சீரான நிலப்பரப்பு!!

அங்கொன்றும் இங்கொன்றுமாக நீல வண்ணத்தில் ஆறுகளும், மைல் கணக்கில் நீளும் சாலைகளுமாய்க் கொடுத்து வைத்த தேசம்!

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. காலை விடியலிலிருந்து மதியநேரத்தை நோக்கி நேரம் செல்லவும், ‘அம்மா.. பசிக்குது’ என்கிற மகனின் வசனம் கேட்கவும் சிந்தனை கலைந்தேன்.

விமானப் பயணத்தின் சுவாரஸ்யம் குறைந்து இதோ இன்னும் சிறிது நேரத்தில் தரையிறங்கி விடுவோமென நினைத்துக் கொண்டிருந்த போது, Utah மாநிலத்தின் மேல் பறக்கிறோம் போலிருக்கு என்றார் கணவர். எங்கு நோக்கினும் செந்நிறப்பாறைகள்! அதையடுத்த சிறிது நேரத்தில் பனி மூடிய மலைகளுடன் கொலராடோ மாநிலம்.

ஹேய்ய்ய்ய்ய்.. அதோ, ஹூவர் டேம். மேலிருந்து சில படங்களை என் காமெராவில் பதிவு செய்துகொண்டேன். விமானம் தாழ்வாகப் பறக்க ஆரம்பிக்க, சாலைகளில் பறந்து செல்லும் வண்டிகள், பெரியப் பெரிய ட்ரக்குகள், மனிதர்கள், நீச்சல் குளங்களுடன் மெக்சிகன் ஸ்டைலில் கட்டிய வீடுகள்.. ஆம், கடைசியில் வந்தே விட்டது – லாஸ் வேகஸ்.

கண்ணைக் கூசச்செய்யும் பகல்நேரம். இப்படிச் சூரிய தரிசனம் கண்டு எவ்வளவு நாட்கள் ஆயிற்று!!

சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கிவிடும் என்றும், விமானத்தில் பயணித்ததற்கு நன்றி என வழக்கமான சம்பிரதாயங்களை பைலட் செய்து கொண்டிருந்தார். சீட்பெல்ட் போட்டுக் கொள்ளுங்கள் இறங்கப் போகிறோம் என்று குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘தட்தட்தட்தட்’ என்று ஒரு பெரிய குலுக்கலுடன் தரையைத் தட்டி, வேகம் குறைந்த விமானம் அதற்குரிய இடத்திற்கு ஊர்ந்து சென்றது.

வெளியில் வந்தால் குளிர் முகத்தில் அறைய, ஆல்பனியில் இருக்கிறோமோ இல்லை வேகஸிலா?? குளிர் பின்னி எடுத்தது ஏமாற்றமாக இருந்தாலும், ‘பளிச்’ வானம் ஆறுதலாக இருந்தது. விமான நிலையத்தில் கூட்டமோ கூட்டம். இருக்காதா பின்னே?? டிசம்பர் மாத லீவில் பலரும் பயணிக்கும் இடமாயிற்றே!!

வாடகைக்கார் எடுக்க வேறிடத்திற்குச் செல்லவேண்டும் என்பதால் அதற்கான shuttle பஸ்சுக்காக காத்திருந்து பயணித்தோம். கொஞ்சம் பெரிய விமானநிலையம்தான். வாடகைக்கார் எடுக்கும் இடத்தில் திருவிழா கூட்டம். நாங்கள் வந்து சேர்வதற்குள் எங்களுக்கென முன்பதிவு செய்திருந்த காரை யாருக்கோ தாரை வார்த்து கொடுத்துவிட்டு, ‘இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும்.. காத்திருங்கள்’ என்றார்கள். பிறகு வேறொரு காரை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குக் கிளம்பினோம்.

இதற்கிடையில், Utah விலிருந்து எங்கள் நண்பர் பாகீயும் வேகஸுக்கு வந்து சேர்ந்துவிட்ட தகவலைச் சொல்ல, பல வருடங்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்கும் ஆவலுடன் கிளம்ப, லாஸ் வேகஸ் ‘ஹியர் வி கம்’ என்று ஆனந்தமாகத் தெருவில் நுழைந்த போது, முதல் முறையாக 1999இல் லாஸ்வேகஸுக்கு வந்த நினைவுகள் நிழலாடின. ஊர் ரொம்பத்தான் மாறிவிட்டது. அன்று இவ்வளவு கட்டடங்கள் இல்லை.

பகல் வேளையிலும் வண்ணவண்ணமாய் ஜொலிக்கும் விளக்குகளுடன் மின்னும் உயர உயரமான கட்டடங்கள்!! குழந்தைகள் பசியுடன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வர ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். நண்பர் பாகியும் அதே ஹோட்டலில் தான் தங்கியிருந்தார். நாங்கள் தங்கியிருந்தது லாஸ்வேகஸ் பொலிவாடில்.

‘குழந்தைகள் நன்கு வளர்ந்துவிட்டார்கள். நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள்!’ என்று பரஸ்பரம் பேச ஆரம்பிக்க, ‘அப்பா எனக்குப் பசிக்குது’ என்று மகன் பொறுமை இழக்க, அருமையான மதிய உணவு சாப்பிட்டோம்.

மதிய உணவை முடித்தவுடன் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு, பாகீயின் வண்டியிலேயே ஒருமணி நேர பயணத் தொலைவில் இருக்கும் Red Rock Canyon பார்க்கக் கிளம்பிவிட்டோம். வழியில் இருந்த வீடுகள் எல்லாம் பாலைவன பனைமரங்களுடன் அழகாகவும் வித்தியாச கலை அம்சத்துடனும், நேர்த்தியாகவும் கட்டப்பட்டிருந்தன. அகன்று விரிந்த சாலைகள். கண்ணுக்கெட்டும் தூரத்தில் மரங்களே இல்லாத மலைகள்.

Swarnalatha Kuppa

ஆல்பனிக்கும், நெவாடா மாநிலத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்! அங்கோ மரங்கள் அடர்ந்த மலைகள். இங்கோ, கனிமவளம் நிரம்பிய வறண்ட மலைகள். வழியெங்கும் செந்நிறத்திலும், பழுப்பு நிறத்திலும் மணற்குன்றுகள். பல இடங்களில் வண்டியை நிறுத்தி அந்தக் குன்றுகளில் ஏறி இறங்கினோம். ஆள் அரவமற்ற இடங்களில் பயணிப்பது சுகம் என்றாலும், கொஞ்சம் ஆபத்தானதும் கூட. பயணிகளின் வசதிக்காக ஆங்காங்கே அந்த இடங்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லும் தகவல் பலகைகள்.

ரெட்ராக் கேன்யன் ஆரம்பித்த இடத்திலிருந்தே பல வகையான வண்ணங்களில் மலைகள் தெரிய ஆரம்பித்து விட்டது. ஓரிடத்தில் பாறாங்கற்களில் ஏறும்கூட்டத்தைப் பார்த்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு குழந்தைகளும் குதூகலமாக நடக்க ஆரம்பித்தார்கள். வறண்ட செடிகள், முட்புதர்கள், பாம்புகள் இருக்குமோ என்ற பயத்துடன் வழுக்கும் பாறைகளில் ஏறி இறங்கி படங்கள் எடுத்துக் கொண்டோம். செங்குத்தான பாறைகளில் rock climbers மேலேமேலே என்று வழுக்கி வழுக்கி ஏறிக்கொண்டிருக்க, ஒரு கூட்டம் சுற்றி நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதுதான் ரியல் அட்வென்ச்சர். அங்கிருக்கும் பதிமூன்று மைல் மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டே வருபவர்களும், நடந்து செல்பவர்களும் என்று வழியெங்கிலும் சிறுசிறு கூட்டமாய் மக்கள். குளிருக்கும் குறைவில்லை.

மாலை நேரச் சூரிய வெளிச்சத்தில் பாறைகளின் நிறம்மாறி மேலும் அழகூட்ட, வானில் கருமேகங்களுடன் வானவில் வர்ண ஜாலத்துடன் மேகங்கள் நடனமாடும் அற்புதக்காட்சியை குளிரில் கண் குளிரப் பார்த்து ரசித்தது வாழ்வில் மறக்க முடியாதது.

ரெட்ராக் கேன்யனை விட்டு வெளியில் வரும் பொழுதே இருட்டி விட்டிருந்தது. எங்களின் மற்றுமொரு நண்பர் குமார் தன் குடும்பத்தினருடன் லாஸ் ஏஞ்சலஸிலிருந்து வந்திருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு எங்கு சந்திப்பது என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பினோம். நிறைவான அனுபவம்.

‘அப்பா பசிக்குது’ என்று மகன் பாட, எங்களை அறையில் விட்டுவிட்டு பாகீயும், கணவரும் சென்று உணவை வாங்கிக் கொண்டு வந்தார்கள். என்ன கூட்டம் தெரியுமா?? ‘ஏதோ கிடைச்சதை வாங்கிட்டு வந்திருக்கோம்’ என்று கூற, மறுபேச்சில்லாது சாப்பிட்டு முடித்தோம். அத்தனை பசி 🙂

உணவை முடித்த கையோடு, தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். லாஸ் வேகஸ் மெல்ல மெல்ல தன் இரவு வாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. விளக்குகளின் வெளிச்சத்தில் தெருக்கள் மின்ன, பெரியப் பெரிய உணவகங்கள், உலகின் பிரசித்திப் பெற்ற இடங்களை மினியேச்சர் செய்து காண்போரை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்க, சூதாட்டங்களுக்கும், உற்சாக பானங்களுக்கும், கேளிக்கை நடனங்களுக்கும் குறைவில்லாத இடங்கள், இதுதான் , இதற்குத்தான் அடித்துப் பிடித்து உலகெங்கிலும் இருந்து மக்கள் இங்கு வருகிறார்கள்.

லாஸ் வேகஸ்

இரவு நேரம் ஆகஆக லாஸ் வேகஸின் சுயரூபம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. திரும்பின பக்கமெல்லாம் பிரம்மாண்டமும், பணத்தைவாரி இறைத்து அழகுணர்ச்சியுடன் கட்டப்பட்டிருந்த சூதாட்ட விடுதிகளும் வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைவரையும் தன் மாயையில் கட்டிப் போடுகிறது.

‘நாம் பார்ப்பவை எல்லாம் கனவா? நினைவா?’ என்று நினைக்கத் தூண்டியது அந்த நேரத்து லாஸ் வேகஸ்.

லாஸ் வேகஸில் புகழ் பெற்ற Bellagio ஆடம்பர ரிசார்ட்டில் குமார் குடும்பத்தினரைச் சந்திக்கலாம் என்று பேசி இருந்தோம். வழியில் புகழ் பெற்ற நீருற்று நடனம். Jingle bells jingle bells பாடலுக்கு வண்ணங்களுடன் நீருற்று ஆடி அசைய, இமைக்காமல் மக்களும் ரசித்து மகிழ்ந்தார்கள். நல்ல குளிர்! மக்கள் அனைவருமே ஏதோ நியூயார்க்கில் இருப்பது போல் தலை முதல் கால் வரை போர்த்தியபடி உடையணிந்திருந்தார்கள். இது எங்களுக்குப் பழகியதுதான். ஓங்கி உயர்ந்து ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த்து Bellagio கட்டிடம்.

சூதாடிகளின் சொர்க்கபுரி Bellagio. நுழைவாயில் முதற் கொண்டு வழியெங்கும் பளிங்குச் சிலைகள். எந்த லோகத்தில் இருக்கிறோம் என்ற பிரமிப்பு நீங்காமலே வலம் வந்து கொண்டிருந்தோம். முப்பத்தியாறு மாடிகளைக் கொண்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரூம்களுடன் சாப்பிடும் வசதியும் சூதாட்ட விடுதிகளுடனும் வார்த்தையில் விவரிக்க இயலாத ஓர் அதிசயம்.

ஊரின் மிக அழகிய பெண்கள் அனைவரும் அங்கேதான் இருக்கிறார்களோ என நினைக்கும் வகையில் ‘சிக்’கென உடையணிந்து செயற்கையான ப்ளாஸ்டிக் புன்னகையோடு கோப்பைகளில் மதுபானங்களை ஏந்தியபடி வலம்வர, அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே குடிப்பவர்களும், கூட்டமாக மேஜைகளைச் சுற்றி blackjack, poker விளையாடுபவர்களும், அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் அங்கேயும் அழகுப் பதுமைகள் பல இடங்களில் சீனத்து அழகிகளைப் பார்க்க முடிந்தது.

வாலிபர்கள், வயதானவர்கள், கவர்ச்சியான தோற்றத்தில், உடைகளில் தங்களின் எதிர்பாலினரைக் கவர தங்களினால் ஆன அத்தனை அசட்டுத்தனங்களுடன் சுற்றிக் கொண்டிருந்தனர். மொத்தத்தில் அந்த இடம் இரவைப் பகலாக்கி மக்களின் பணத்தையும் மனத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தது.

எங்கும் பணத்தை அள்ளி வீசியிருந்தார்கள். ஆடம்பரமும் அழகும் வழிந்தோடியது. அந்த ஒரு கட்டடத்திற்கு மட்டும் எத்தனை வழிகளோ? சுற்றிச்சுற்றி நடந்து வந்து கொண்டே இருந்தோம். நேரம் ஆக ஆகக் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இரவில் ஆட்டம் போடும் நகரம் என்றால் சும்மாவா??

சூதாடும் இடங்களுக்கோ, மதுபானங்கள் பரிமாறும் இடங்களுக்கோ குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை இருப்பதால், அங்கேயே ஒரு பொது இடத்தில் குமாரைச் சந்தித்தோம். அவரைப் பார்த்து ஏழெட்டு வருடங்களாகி இருந்தது. அவருடைய பெண்குழந்தைகள் அழகாகச் சுட்டியாக நன்றாகப் பேசினார்கள். குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு பாகீ மற்றும் குமார் குடும்பத்தினருடன் நாங்கள் Utahவில் வாழ்ந்த காலங்களின் பழைய கதைகளைப் பேசி மகிழ்ந்தோம்.

நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் திடீரென்று அட்லாண்டிஸ் நாடகத்தை அற்புதமாக நடத்தினார்கள். மொத்த கூட்டமும் ‘ஆ’வென்று வாயைப் பிளந்து கொண்டு பார்க்க, ஒரு ஹாலிவுட் படத்தை நேரில் கண்ட பரவசம் அனைவர் முகத்திலும்.

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்களின் நியூயார்க் நேரப்படி அதிகாலை மூன்று மணி. குழந்தைகள் களைப்பாக, ஹோட்டலுக்குத் திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்து, அடுத்தநாள் எங்கே செல்வது, எங்கு சந்திப்பது என்று முடிவெடுத்து விடைபெற்றோம்..

லாஸ் வேகஸ் தன் இரவைக் கோலாகலத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க, நீண்ட காலத்திற்குப் பின்னர் நண்பர்களைச் சந்தித்து அளவளாவிய மகிழ்ச்சியோடு அறைக்குத் திரும்பினோம்.

– லதா