Search

லைஃப் ஆஃப் பை விமர்சனம்

Life of pi

ஒரு புலியை உங்களால் நேசிக்க இயலுமா? அதுவும் அதனிடம் தனியாக சிக்கிக் கொள்ளும் பொழுது? ‘பை’ என்ற பெயருடைய 16 வயது சிறுவன் அப்படித் தான் சிறு கப்பலில் புலி ஒன்றுடன்  பசிஃபிக் பெருங்கடலின் மத்தியில் தனியனாய் சிக்கிக் கொள்கிறான்.

சுரஜ் ஷர்மா. 16 வயது ‘பை’யாக நடித்துள்ளார். கதை சொல்லி இர்ஃபான் கானாக இருந்தாலும் சுரஜ் தான் படத்தின் நாயகன். இந்தக் கதாபாத்திரத்திற்காக சுமார் 3000 பேர்களில் இருந்து சுரஜை வடிகட்டி எடுத்துள்ளார் இயக்குனர் ஆங் லீ. சுரஜும் பொறுப்பை உணர்ந்து படத்தை தன் முதுகில் அழகாக சுமந்துள்ளார். ஆனந்தியை பின்தொடர்ந்து செல்லும் சுரஜ்,  அவள் அபிநயிப்பது போல் அபிநயித்து, அதன் பொருளை வினவி, “காட்டுக்குள்ள ஏன் தாமரை!?” என அப்பாவியாக கேட்பதில் இருந்து படத்தின் இறுதி வரை தனி ஆவர்த்தனம் நடத்துகிறார். மேகங்கள் அதிர்ந்து, அதிலிருந்து ஒளிக் கீற்று தோன்றி,  மழை பெய்வதைக் கண்டு கடவுளைக் கண்டேன் என குதூகலிக்கிறார். புலியுடன் ஓர் உணர்வு மயமான பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதற்கு அடிபணிய பயிற்சியும் அளிக்கிறார். உடல் இளைத்து, பரட்டைத் தலையுடன் எலும்பும் தோலுமாக பட்டினியில் வாடும் பொழுதும் புலி மீதான நேசத்தை தன் கண்களில் பிரதிபலிக்கிறார்.

முக்கியமாக நாம் திரையில் வியக்கும் பெரும்பாலான காட்சிகள் ஸ்டுடியோக்குள் எடுக்கப்பட்டதே. கதையில் வரும் இன்னொரு உயிரற்ற கதாபாத்திரம் பசிஃபிக் பெருங்கடல். அதாவது கதையின் களம். அச்சுறுத்தும் புலியையும், ஆர்ப்பரிக்கும் கடலையும் அவதானித்து நடிக்க வேண்டும். இடப்பக்கம் உள்ள படத்தைப் பார்த்தால் புரியும். சுரஜ் ஷர்மா மிக கச்சிதமாக தன் வேலையினை செய்துள்ளார். ‘பை’யின் தாயாக வருகிறார் தபு. கிருஷ்ணர் மண் தின்ற கதையை தன் மகன்களுக்கு தமிழில் (ஆங்கிலப்பட மூலத்தில்) சொல்கிறார். இர்ஃபான் கான், ரேஃப் ஸ்பாலிடம் தன் கதையை சுவாரசியமாக விவரிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. சுரஜ் ஷர்மாவைப் போல் தன்னை நிருபிக்க பெரிதாக காட்சிகள் ஏதுமற்று கதை சொல்லியாகவே தோன்றி மறைகிறார்.
புக்கர் பரிசு வாங்கிய “லைஃப் ஆஃப் பை” என்னும் யான் மார்டலின் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது இப்படம். அமெரிக்க அதிபர் ஓபாமா, “கடவுளின் இருப்பிற்கும், நேர்த்தியான கதை சொல்லலுக்கு இப்படமே உதாரணம்” என இயக்குனருக்கு பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். படம் கடவுளைப் பற்றி நிறைய பேசுகிறது. 12 வயது ‘பை’ இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என மூன்று மதங்களையுமே ஒரே நேரத்தில் கடைப்பிடிக்கிறான். அதனால் கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானத்தை சிபாரிசு செய்கிறார் ‘பை’யின் தந்தை. ‘பை’ அவனது தந்தையின் விலங்கியல் பூங்காவில் இருக்கும் புலியை அருகில் காண விழைகிறான்.
“புலி மனிதனோட எதிரி” என்று பயமுறுத்துகிறார் அவனது தந்தை.
“நான் அதோட கண்ணில் அதன் ஆத்மாவைப் பார்த்தேன்” என்கிறான் 12 வயது ‘பை’.
“அதோட கண்ணில் நீ பார்ப்பது உன் ஆன்மாவின் பிரதிபலிப்பு”.
இப்படி வசனங்களால் பல இடங்களில் படத்தின் சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறார் இயக்குனர் ஆங் லீ. கதைப்படி ‘பை’யின் குடும்பம் பாண்டிச்சேரியில் இருந்து கனடாவிற்கு கப்பலில் செல்கின்றனர். அவர்கள் பாண்டிச்சேரியில் இருக்கும் பொழுது, சிவாஜியின் “வசந்த மாளிகை” திரைப்பட சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பதாக காட்டுகின்றனர். படம் நிகழும் காலத்தை உணர்த்த இயக்குனரின் மெனக்கெடலுக்கு சான்று.

படத்தின் இன்னொரு நாயகன் ரிச்சர்ட் பார்க்கர். அச்சு அசல் புலி போலவே தோற்றமளிக்கும்.. அதாவது அந்தக் கணினி வரையியல் புலி். சிறு கப்பலுக்குள் இருந்து திடுமென பாயும் புலியை, முப்பரிமாணத்தில் பார்க்கும் எவரும் ஒரு நொடி புலி தன் மேல் தான் பாய்ந்ததாக நினைத்துக் கொள்வார்கள். இயக்குனர் படத்தை இழை இழையாக செதுக்கி உள்ளதற்கு இன்னொரு உதாரணம் படத்தில் வரும் ஒரு தீவு. ஆயிரக்கணக்கான கீரிப்பிள்ளைகள் வாழும் மண்ணே இல்லாத அமானுஷ்ய மிதக்கும் தீவு. படத்தில் தோன்றும் அனைத்தும் அழகாய் உள்ளன. புயல், மழை, இராட்சஷ அலைகள், கடல் நீர், செவ்வானம், புலி, உராங்குட்டான், நீல நிற ஜெல்லி மீன்கள் என அனைத்தையும் சிறு அங்குல இடைவேளையில் கண் முன் கொண்டு வருகிறார். மாபெரும் கடலில் சிறு துரும்பாய் படம் பார்ப்பவரை இயக்குனர் உணர வைத்து விடுகிறார்.
லைஃப் ஆஃப் பைகண்களுக்கு செம்மையான விருந்தளிக்கும் முப்பரிமாணப் படம். 
Leave a Reply