Shadow

வன்கொடுமையும் வரதட்சணையும்

வன்கொடுமை சட்டம் தலித்துகளாலும் வரதட்சணை சட்டம் பெண்களாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதை நீக்க வேண்டும். அல்லது நமக்கு தேவையானபடி மாற்றம் செய்ய வேண்டும்.எந்த சட்டம் நியாயமாக பயன்படுத்தப்படுகிறது? சாதாரண பங்காளி தகராறுக்கு சிவில் கேஸ் போட்டா உள்ள வைக்க முடியாது. கொலை முயற்சின்னு கிரிமினல் கேஸ் தான் பலர் போடுறாங்க. விபத்து நடந்தா விபத்துன்னு கேஸ் பதிக்காம கொலைன்னு கேஸ் குடுக்குறாங்க. இந்த சட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நீக்கி விடலாமா? இவற்றை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்காததன் கள்ளத்தனம் என்ன?

வன்கொடுமை சட்டம் யாராலும் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்று சொல்லவில்லை. அவ்வாறு நியாயமாக இதை சுட்டிக்காட்டுபவர்கள், வச்சாத்தி, தருமபுரி போன்ற சம்பவங்களுக்கு அவர்கள் ஒரு கண்டனமாவது தெரிவித்தார்களா? இல்லை. சரி, பரவாயில்லை. இந்த சட்டத்தின் மூலம் என்ன செய்ய முடியும்? அதிக பட்சமாக அரஸ்ட் பண்ண முடியும். அதிலும் காவல் துறை. காவல் துறை ஆதிக்க சாதியை எப்படி நடத்தும், தலித்தை எப்படி நடத்தும்னு எல்லாருக்குமே தெரியும். ஆனால் வன்கொடுமை என்பது என்ன? சக மனிதனின் வாயில் மலத்தை திணிப்பது, குப்பை தின்ன செய்வது முதல் வன்புணர்வு, தீ வைத்து கொளுத்தல், கொலை என்று எல்லாம் நடந்திருக்கிறது. அதை எந்த மானமுள்ள அந்த சாதியை சேர்ந்த மனிதனாவது எதிர்த்து கேட்டானா? அப்போது அது சாதி சார்ந்த சமூகப் பிரச்சினை அல்ல. செய்த மற்றும் பாதிக்கப்பட்ட தனிமனிதர்களுக்கு இடையே நடந்த பிரச்சினை. அதை வன்கொடுமையாக காவல்துறையில் புகார் செய்யும்போது மட்டுமே அது சாதி பிரச்சினையாக தவறாக பயன்படுத்துவதாக காட்டப்படுகிறது. மொத்த சாதியும் சேர்ந்து செய்தவனை காப்பாற்ற புறப்பட்டுவிடுகிறது. இங்கே பாதிக்கப்பட்டவனுக்கு உடைமை இழப்பு, மனித உரிமை இழப்பு முதல் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது. ஆனா செஞ்சவனுக்கு அரஸ்ட் மட்டும் தான். இவ்வளவும் நடக்கும்போது வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்த சமூகம் ஒருத்தன் போயி கம்ப்ளயின்ட் குடுத்தா மட்டும் முழிச்சுக்குது. கூப்பாடு போடுது. அப்போ இதுவரை நீங்க செஞ்ச கொடுமை, உங்கப்பன் செஞ்ச கொடுமை எல்லாம்கேள்வி கேட்க துப்பில்லாத உனக்கு இப்போ கூப்பாடு போடா தோணுறது எதனால்? நீ பாதிக்கப்படுகிறாய் என்பதால். அதற்கும் பன்மடங்கு மேலான பாதிப்புகளை ஏற்கனவே உன்னுடன் சேர்த்து உன் பரம்பரையே நடத்திவிட்டது.

இதே தான் வரதட்சணை சட்டத்திலும் நடக்கிறது. இந்த சட்டத்தை எடுக்கனும்னு போராடுறவங்க பல பெண்கள் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டு எரிக்கப்படும்போது நியாயமாவது கேட்க வந்தார்களா? அப்போ அது அவர்களின் குடும்ப பிரச்சினை ஆகி விடுகிறது. இந்த கருமத்துக்கு சங்கம் வேற ஆரம்பிக்குறாங்க. அதே சங்கம் நிஜமாவே வரதட்சினை வாங்கி கொடுமை படுத்தும் ஆண்களை தட்டி கெட்டதா? இல்லை இனிமேல் தான் கேட்குமா? அது தான் குடும்ப விஷயமாச்சே, அதல தலையிட முடியுமா? இது பத்தாதுன்னு ‘நாடக’ கல்யாணத்துல இருந்து ‘பெண்களை’ காப்பாத்த பொறப்பட்டுருக்காணுக மானங்கெட்ட நாய்க. சரி, நீங்களா உங்க பெண்ணுக்கு மாமா வேலை பாத்து ஒருத்தனை புடிக்குறீங்கன்னு  வையுங்க, அவனை எதை காட்டி ‘கூப்பிடுறீங்க’? சொத்தும் சாதியும் தானே?

எத்தனை ‘நல்ல’ கல்யாணத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்காங்க? விவாகரத்தாகி, கொடுமைகளுக்கு ஆளாகி? அவர்களை சமூக ரீதியாக நல்லபடியாக வாழ ஏதாவது செய்தார்களா? அதெல்லாம் அவங்க சொந்த பிரச்சினை. வரதட்சினை வாங்குறது கலாச்சாரம். அதை சட்டரீதியாக எதிர்க்கிறது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல். என்ன ஒரு ஜனநாயக ரீதியான சமத்துவமான முடிவு!! நாடக கல்யாணம் பண்ணி ‘அகப்படும்’ பொண்ணுகளை காப்பாத்த சங்கம் போட்ட ‘ஆம்பிளைகள்’ தன் சாதியிலேயே கல்யாணம் பண்ணி வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட, விவாகரத்து பெற்ற, பிரிந்து வாழும் பெண்களுக்கு என்ன செய்தார்கள்?
 
இங்கே உற்று நோக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் ‘நாடக கல்யாணத்தால் ஏமாறும்’ பெண்கள் குலத்தை காக்க புறப்பட்டிருக்கும் நாயகர்கள், தலித் பெண்களை ஈவ்டீசிங் எனப்படும் பாலியல் தொல்லை முதல், வலிந்து வன்புணர்வு வரை செய்யும் தம் சாதி ஆண்களை சட்டரீதியாக தண்டிக்க கூட வேண்டாம், ஏன் என்று ஒரு சுட்டு விரலாவது கண்டனமாக நீண்டிருக்குமா என்றால், அது தான் இல்லை. அது அவர்களின் தார்மீக உரிமை அல்லவா? 

அது ஏன் இந்த கூட்டம் ‘ஏமாறும் பெண்களை’ மட்டுமே காப்பாற்ற புறப்பட்டிருக்கிறது? ஆண்கள் யாரும் ஏமாறுவதே    இல்லையா? பார்க்கப்போனால் காதல் தோல்வி என ‘பெண்களை நம்பாதே’ வகை புலம்பல்கள் ஆண்களிடம் இருந்தே அதிகம் வருகின்றன. பிறகு ஏன் பெண்கள் மேல் மட்டும் அக்கறை? சாதியமைப்பின் ஆணிவேர் பெண்ணடிமைத்தனம். ஒரு சதியில் இருப்பவன் தனக்கு கீழாக கருதப்படும் சாதியில் இருந்து ஆண் மூலமாக கலப்பு ஏற்படுவதை பெரிது படுத்துவதில்லை. ஆனால் பெண் மூலமாக ஏற்பட்டதோ, அவ்வளவு தான். தன சாதி மானம் பீரிட்டு கிளம்புகிறது. ஏன்? பெண் என்பவள் அடிமையாக இருக்க வேண்டியவள். தனக்கு கீழாக கருதப்படும் சாதி ஏற்கனவே அடிமையாக இருப்பது. தன்  அடிமை தன் இன்னொரு அடிமைக்கு அடிமையாக இருக்க முடியுமா? முதலாளிக்கு அல்லாவா அடிமையாக இருக்க முடியும்? மேலும் பெண் சுதந்திரமாக முடிவெடுக்க ஆரம்பித்து விட்டால் ஒரே தலைமுறையில் சாதி அமைப்பு வேர் அழுக ஆரம்பித்து விடும் அல்லவா? அம்பேத்கர் இருந்தாரோ தப்பித்தோமோ.. இல்லையென்றால் ஓட்டுரிமை பறிப்பு முதல் தேவதாசி/சதி வரை எல்லாமே இன்னும் இருந்திருக்கும். அதனால் தான் பார்ப்பன தலைமை மட்டுமே இருக்கும் நம் அரசியல் ஊடகமான பள்ளி பாட புத்தகங்களில் தொடர்ந்து அம்பேத்கர் அவமானப்படுத்தபடுவதும் அம்பேத்கரும் பெரியாரும் இருட்டடிப்பு செய்யப்படுவதும் இன்றும் நடைபெறுகிறது. 

இந்த சாதி ஆதரவு களவாணிப் பயல்கள் தீர்மானங்களை பார்த்தோமானால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க முடியும். இவர்களனைவரும் பெண்கள் சொத்துரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் போட்டிருப்பவர்கள். ‘நிலவுடைமை’ பாதிக்கப்படுகிறதாம். சொத்துரிமை சட்டம் பரம்பரை சொத்துக்கு மட்டுமே செல்லும். சுயமாக சம்பாதித்த சொத்துக்கு செல்லாது. தான் உழைத்து சம்பாதிக்காத பாட்டன் சொத்து தனக்கு மட்டுமே வேண்டும், உடன் பிறந்தவளுக்கு தர மாட்டேன். என்ன ஒரு தன்மானம்? என்ன ஒரு ஆண்மை? சங்கம் வைத்து தனக்கு குறைந்த பட்சம் இவ்வளவு ரூபாயாவது பிச்சை போட வேண்டும் என்று தீர்மானம் போடும் பிச்சைக்காரர்கள் தேவலாம். 

இதன் மூலமாக சட்ட விரோதமாக இருக்கும் வரதட்சிணையை உரிமையாக மாற்றலாம். வரதட்சினை சட்ட விரோதமா இருப்பினும் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கல்யாணம் என்றால் பெண்ணுக்கு என்ன போடுகிறார்கள் என்பது மிக சாதாரணமாக இன்னும் கேட்கப்படுகிறது. மாப்பிள்ளைக்கு பைக்/கார் வாங்கும் ‘கலாச்சாரம்’ இன்றும் முக்கியமாக படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாலும் கூச்சமின்றி கடைபிடிக்கப்படுகிறது. இங்கே மாப்பிள்ளை ‘நியாயமானவராக’ வாய்மூடி இருப்பார். பெண் வீட்டார் ‘அவர்களாக’ வலிந்து எல்லாம் தருவார்கள். பெண்ணுக்கு நூறு பவுன் போட்டேன் என்று பறைசாற்றுவது இன்று ‘கவுரவமாக’ இருக்கிறது.

இவ்விரண்டு சட்டங்கள் மட்டுமல்ல, எல்லா சட்டங்களுமே தவறாக பயன்படுத்தப்படுகிறது. சாதாரண பங்காளி தகராறுக்கு சிவில் கேஸ் போட்டா உள்ள வைக்க முடியாது. கொலை முயற்சின்னு கிரிமினல் கேஸ் தான் பலர் போடுறாங்க. விபத்து நடந்தா விபத்துன்னு கேஸ் பதிக்காம கொலைன்னு கேஸ் குடுக்குறாங்க. இந்த சட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நீக்கி விடலாமா? இவற்றை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்காததன் கள்ளத்தனம் என்ன?

இதெல்லாம் இதுநாள் வரை சொன்னதை கேட்ட அடிமைக்கூட்டம் சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்து சொந்த காலிலே சுயமரியாதையுடன் பிழைக்கிறார்களே என்ற வயித்தெரிச்சல். இது தலித்துகளுக்கும் பொருந்தும் பெண்களுக்கும் பொருந்தும். கார்ப்பரேட் வந்து பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்ற பின்னர் விவாக ரத்து அதிகமாகி விட்டதாம். குடும்ப அமைப்பு சிதைகிறதாம். ஒரு படிச்ச பரதேசி சொல்லுது. உண்மை தான். ஒருத்தரை பொருளாதார ரீதியாக அடிமை படுத்தினால் தான் குடும்பம் மற்றும் சாதி என்கிற அரசியல் கட்டமைப்புகள் இருக்க முடியும்.
 
அப்படி ஒருத்தர் அடிமையாக இருந்து அந்த கட்டமைப்பை காக்க வேண்டிய அவசியம் என்ன? இக்கட்டமைப்புகள் மனிதனுக்காகவா, இல்லை மனிதன் இக்கட்டமைப்புகளுக்காகவா? இது எல்லா மனித பிறவிகளுக்காகவும்  அமைக்கப்பட்டதா, அல்லது ஒருவரின் உழைப்பை உறிஞ்சி இன்னொருவர் சுகமாக இருக்க அமைக்கப்பட்டதா? அப்படி தான் இருக்கும் என்றால் தலித்துகளும் பெண்களும் அக்கட்டமைப்புக்குள் இருக்க வேண்டிய அவசியம் என்ன? வலி, தன்மானம், சுதந்திரம் போன்றவை அனைவருக்குமானது இல்லையா? 

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லாத வரையில் குடும்பம் என்கிற அரசியலமைப்பு சீராக செயல்பட்டு வந்தது. தலித்துகளுக்கு அரசியல்/பொருளாதார சுதந்திரம் இல்லாத வரையில் சாதி கட்டமைப்பு பிரச்சினைகள் இல்லாமல் செயல்பட்டு வந்தது. பிரச்சினை இல்லை என்பதற்காக இவ்வமைப்புகள் சிறந்தது என்று கூற முடியுமா? ஆம் என்று கூறுபவர்கள் அந்த அதிகார/பொருளாதார பலத்தை சுழற்சி முறையில் கொண்டுவர் தயாரா? பிரச்சினை இல்லாமலிருக்கும் என்று ஆகிவிட்டது. யாராவது ஒருத்தர் அடிமையாக இருக்க வேண்டும். அதுக்கு அன்பு  அல்லது விசுவாசம்னு பேரும் வெச்சுக்கலாம். வன்கொடுமை சட்டத்தை எல்லா சாதிக்கும் பொதுவாக்க கோரும் உயர்சாதிக்காரர்களே, ‘குடும்ப விளக்கை’  போற்றி பேணும்  ஆண்களே – தயாரா?

– பாரதி

Leave a Reply