
இன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். ஏனென்றால், ஆனந்த விகடன் நிறுவனத்தின் புதிய இம்ப்ரிண்ட் ஆன “விகடன் கிராஃபிக்ஸ்” இன்று அறிமுகம் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் புத்தகம் நிச்சயமாக வாசிப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்று நம்பலாம்.
‘காவல் கோட்டம்’ நாவலிற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன் அவர்களின் கதைக்கு, வண்ணமயமாக உயிரூட்டி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஓவியரான பாலசண்முகம்.
காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்ற மாறவர்மன் குலசேகர பாண்டியன். அவனுக்கு இரண்டு மனைவிகள். முறையே இரண்டு மகன்கள். மூத்தவன் சுந்தர பாண்டியன் இருக்க, இளையவன் வீர பாண்டியனே சிறந்தவன் என்று தந்தை கருத, அதனால் மூத்த மனைவியின் மகன் செய்யும் சதித் திட்டங்கள் நாட்டையே நிலைகுலைய வைக்கிற அளவிற்குப் போகிறது. அந்த சதித் திட்டங்களை எல்லாம் எப்படி வீர பாண்டியன் சமாளிக்கிறான் என்பதை வீரம், அன்பு, பாசம், காதல் என்று நவரசங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட கதையே சந்திரஹாசம்.
நான்கு மாதங்களுக்கு முன்பாக விகடன் அலுவலகத்திற்கு சென்ற போது, ஆசிரியர் குழு இதைப்பற்றி ஆர்வமாக சிலாகித்துப் பேசினார்கள். அப்போது முதல், இந்த இதழ் எப்போது கைக்கு வரும் என்று எதிர்பார்க்க வைக்கும் விதமாக சிறப்பாக விளம்பரம் செய்யப்பட்டு வந்து, இதோ இன்று முதல் டீசர் ஆரம்பம்.
இளைய தளபதி விஜய்யின் புலி படத்தின் இடைவெளியில் இந்த சந்திரஹாசத்தின் விளம்பரம் இணைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, அனைவரின் கவனத்தையும் இது கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்தப் புத்தகத்தை நீங்கள் இப்போது முன்பதிவு செய்யலாம். 150+ பக்கங்களைக் கொண்ட இந்த அருமையான முழுவண்ண புத்தகத்தை முன்பதிவு மூலமாக பெற 999/- செலுத்த வேண்டியிருக்கும். புத்தகத்தின் விலை 1499/-.
முந்துங்கள். அக்டோபர் மாத இறுதிக்குள் முன்பதிவு செய்தால், ஒரு அட்டகாசமான காணொளி புத்தகம் இலவசம்.
ஒரு அட்டகாசமான வரலாற்றுப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவிருக்கும் விகடன் குழுமத்திற்கும், தீவிர காமிக்ஸ் இரசிகரான விகடன் குழும எம்.டி. அவர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
முன்பதிவு செய்ய: http://books.vikatan.com/index.php?bid=2325
– கிங் விஸ்வா