Shadow

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

சந்தானம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். மேலும் தெலுங்கிலும், ஹிந்திலும் பெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொள்கிறான் சக்தி. அவ்வீட்டு வாசற்படியைத் தாண்டினால், அவரை வெட்டி கூறு போட அரிவாள்களுடன் பல ஆட்கள் தயாராகக் காத்திருக்கின்றனர். சக்தி எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

சக்தியாக சந்தானம். ‘டக்கரு.. டக்கரு..’ என ஆர்ப்பாட்டமாக திரையில் தோன்றுகிறார். அவர் அறவங்காடு எனும் கிராமத்திற்குப் போகும் வரை சந்தானத்தின் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது. அதுவும் அதிக கலகலப்பில்லாமல்.. சொல்லப் போனால், சகித்துக் கொள்ள பொறுமையும் கோருகிறது. முக்கியமாக சோலர் ஸ்டார் இராஜகுமாரன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வரும் காட்சிகள் எல்லாம் கடியின் உச்சம்.

அறவங்காடு எனும் கிராமத்திற்கு சந்தானம் சென்றவுடன்தான் படம் உண்மையிலேயே தொடங்குகிறது. பின் சந்தானம் கதையின் நாயகனாக மாறி விடுகிறார். பின் கதைக்குத் தேவையானவர்களை முன்னிறுத்திவிட்டு, படம் முடியும்வரை அடக்கி வாசிக்கிறார். இடைவேளைக்கு முன், தன் உயிருக்கு ஆபத்துள்ளது என உணரும் காட்சியில் சந்தானம் கச்சிதமான முக பாவனையில் வியர்த்து வியக்க வைக்கிறார்.

சந்தானத்தின் மொக்கை பன்ச்சுகளால் கவரப்பட்டு, அவருக்கு ‘டைம் பாஸ்’ என பெயர் சூட்டிக் காதலிக்கத் தொடங்கி விடுகிறார் வானதியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி. சிரித்த முகமாக வளைய வருபவருக்கு, கதையின் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் மிகக் குறைவே! எனினும் க்ளைமேக்ஸில் பாகிஸ்தான் தீவிரவாதியைத் திருத்திவிடும் விஜயகாந்த்திற்கு நிகராகப் பின்னிப் பெடலெடுக்கும் காட்சி ஆஷ்னா சாவேரிக்கு உள்ளது. அந்தக் காட்சியின் பொழுது, நாயகன் எந்தப் புல்லைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார் என்ற கேள்வி மண்டையைப் போட்டுக் குழப்புகிறது.

நாயகியின் தந்தையாக நாகி நீடு நடித்துள்ளார். ஒரிஜினல் தெலுங்குப் படத்திலும் இவரே தான் அந்தப் பாத்திரத்தைச் செய்திருப்பார். படத்தின் மிகப் பெரிய பலமாக இவரது நடிப்பை சொல்லலாம். கனிவும் கம்பீரமும் ரெளத்திரமும் கலந்த பார்வை அவருக்கு. அவரது பார்வையே அனைத்தையும் பேசிவிடுகிறது. இவரைத் தவிர்த்து வேறு எவரை இந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தாலும், படம் தரும் தாக்கம் குறைவாகவே இருந்திருக்கும். இவரை நடிக்க வைக்க, தயாரிப்பாளராக சந்தானம் எடுத்த முடிவு கண்டிப்பாகப் பாராட்டத்தக்கதே!

படத்தில் டி.ஆர். தொனியில் பேசி நடிக்கும் கதாபாத்திரமாக சைக்கிள் ஒன்று வருகிறது. ஆனால் படத்திற்கோ, படத்தின் கதைக்கோ எள்ளளவும் உதவவில்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நாயகியின் வீட்டில்தான் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வீட்டை, செட் போட்டுக் கொடுத்த கலை இயக்குநர் A.R.மோகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சித்தார்த் விபினின் பிண்ணனி இசை படத்தின் ஓட்டத்திற்கு மிக உதவியுள்ளது. சற்றே நீளமான க்ளைமேக்ஸை, இயக்குநர் ஸ்ரீநாத் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.