Shadow

வளரும் கலைஞர்கள்…

சிம்ம வாகனி

கடந்த 2014 ஆம் ஆண்டில் தமிழில் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவற்றில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை நான்குதான். துணை இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட, ஏனோ இயக்குநர்களாக பெரிய அளவில் பெண்கள் வரவில்லை என்பது ஏமாற்றம்தான். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி.

கோச்சடையான் – நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவின் முதல் ‘மோஷன் கேப்சர்’ படம் ஒரு தமிழ்படம், அதிலும் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் என்கிற வகையில் கோச்சடையான் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான மைல்கல். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் செளந்தர்யா அஸ்வின். இனி இந்திய சினிமாவின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம் அங்கே செளந்தர்யாவின் பெயரும் குறிப்பிடப்படும் என்பதில் நமக்கு பெருமைதான்.

;”>செளந்தர்யா அஷ்வின்வரலாற்றில் இந்த இடத்தைப் பிடிக்க செளந்தர்யா கொடுத்த விலைதான் கொஞ்சம் அதிகம். 1948 இல், எஸ்.எஸ்.வாசன் ‘சந்திரலேகா’ படத்திற்காக நிறைய செலவு செய்தார். ஆனால் அவர் அப்படி செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்குப் பின்னாலும் கடின உழைப்புடன் கூடிய திட்டமிடல் இருந்தது. அந்தக் காலத்திலேயே சந்திரலேகா படம் ஜப்பான் மொழியிலும் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் தரத்தின் மீதான நம்பிக்கை எஸ்.எஸ்.வாசனை ஆங்கிலம், டேனிஷ் என பல சர்வதேச மொழிகளில் டப் செய்யவைத்தது. சந்திரலேகா இன்றளவும் ஒரு கிளாஸிக் எனக் கொண்டாடப்படுகிறது.

ஆனால் கோச்சடையான்?

ரஜினி என்கிற ஒற்றை பிம்பத்தை திரையில் காட்டினால் போதும், படத்தின் வெற்றிக்கு வேறெதுவும் தேவைப்படாது என்கிற மிதப்பில் கதை, திரைக்கதை, தொழில்நுட்பம் என எல்லா ஏரியாவிலும் ஒரு இயக்குநராக சௌந்தர்யா அஸ்வின் தோற்றுப் போயிருக்கிறார் என்பதுதான் கசப்பான உண்மை. வெறும் ஆர்வம் மட்டுமே வெற்றிகளைத் தந்துவிடாது. அதற்கான தேடலும் உழைப்பும் ஒருங்கினைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்பதை இந்தப் படம் அவருக்கு உணர்த்தியிருக்கும். இத்தனை கோடி பணத்தைக் கொட்டி ஒரு ப்ளாஸ்டிக் பொம்மை அசைவதைக் காட்டியிருக்கிறார் என ஒரு சாமானிய ரஜினி ரசிகனைப் புலம்ப விட்டதுதான் இந்தப் படத்தின் மூலம் செளந்தர்யா சாதித்தது.

இந்தப் படத்திற்கு செலவான தொகைக்கு நாலைந்து நல்ல படங்களை எடுத்திருக்க முடியும் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும் என்கிற கசப்பான பாடத்தை இந்தப் படத்தின் முடிவில் செளந்தர்யாவும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் உணர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு அங்குலமும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவோடு ஒப்பிடுகையில் கோச்சடையான் விழலுக்கு இறைத்த வெந்நீர்தான்.

பூவரசன் பீப்பீ – 2009 இல் வெளியாகி வெற்றிக் கொடி கட்டிய ‘பசங்க’ படத்தின் பாதிப்பில் அதைப் போன்ற படங்கள் அப்போது வராமலிருந்தது. அதற்குக் காரணமும் உண்டு. வணிக சினிமாவில் ஹீரோவும் ஹீரோயினும் இல்லாமல் படம் எடுப்பது தமிழ்ச் சூழலில் சாத்தியமில்லை என்பதால் யாரும் அத்தகைய விஷப்பரிட்சையில் இறங்கவேயில்லை. ஐந்தாண்டுகள் கழித்து 2014 இன் முதல் வெற்றிப் படமான ‘கோலி சோடா’, ‘பசங்க’ படத்தில் நடித்த அதே பசங்களை சுற்றிய கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹலிதா ஷமீம்பசங்களைச் சுற்றிய மற்றொரு மாறுபட்ட கதைக்களம்தான் அறிமுக இயக்குநர் ஹலிதா ஷமீமின் பூவரசன் பீப்பீ. முழு ஆண்டு தேர்வை முடித்து விடுமுறையில் இருக்கும் மூன்று ஆறாம் வகுப்பு மாணவர்களைச் சுற்றிய கதைக்களன். வணிக சினிமா ஆட்கள் தொடத் தயங்கிய ஒரு களத்தில் தைரியமாய் இறங்கியதற்காக மட்டுமே இயக்குநருக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும்.

காக்காவை விரட்ட கருப்பு பாலிதீன் பையைப் பறக்க வைக்கும் எளிய அறிவியல் என சின்னச்சின்ன சுவாரசியங்களை படத்தின் நெடுகே கையாண்டிருப்பது பாரட்டுக்குரியதுதான் என்றாலும், ஏழாம் வகுப்புக்குப் போகிற பையன்கள் காதலுக்காகவும் காதலிக்காகவும் ஃபீல் பண்ணுவது நெருடுகிறது. காதலில்லாமல் படம் எடுக்க முடியாது என்கிற பொதுப்புத்தியில் ஹலிதாவும் சிக்கிக் கொண்டது ஏமாற்றமே! வணிக சமரசங்கள் என்கிற பெயரில் யதார்த்தங்களை மீறுவது படத்தின் உயிரோட்டத்தையே சிதைத்து விடும் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு உதாரணமாகிப் போனது.

மாலினி 22 பாளையங்கோட்டை – ‘22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இதை இயக்கியவர் தமிழ்த் திரையுலகின் முன்னாள் கதாநாயகியான ஸ்ரீப்ரியா. பாலியல் வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண்ணின் உக்கிரமான எதிர்வினையே இந்தக் கதை. மற்றொரு பழிவாங்கும் கதை என இந்த படத்தைக் கடந்து போய்விடாத படிக்கு தீவிரமான தர்க்கங்களையும், விவாதங்களையும் ஒரிஜினல் மலையாளப் படம் உருவாக்கி இருந்தது.

ஸ்ரீப்ரியாமலையாளத்தில் திரைக்கதையை எழுதியவர்கள் ஆண்கள்; இயக்கியதும் ஒரு ஆண். தமிழுக்குத் தகுந்தாற்போல் படத்தின் க்ளைமாக்ஸை மட்டும் கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.

கதையின் நாயகி நித்யா மேனனின் ஜெயில் மேட்டாக வரும் ஜானகி அற்புதமான கதாபாத்திர தேர்வு. கோவை சரளாவின் நகைச்சுவை (!?) எல்லாம் சகிக்கவே முடியாத ரகம். எது நகைச்சுவை எனத் தெரியாதது கூட குற்றமில்லை, ஆனால் நகைச்சுவை என்கிற பெயரில் கோவை சரளாவின் பாத்திரத்தை மலிவாகக் காட்டி படத்தின் மையச் சரடையே கேலிக்கு உள்ளாக்கியிருக்கார் ஸ்ரீப்ரியா .

நெருங்கி வா முத்தமிடாதே – ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ புகழ்(!) லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இரண்டாவது படம் இது. அவருடைய முதல் படமான ‘ஆரோகணம்” மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய படம். ஒரு பெண்ணின் மன உணர்வுகளை இயல்பாகவும் யதார்த்தமாகவும் சொல்ல முடியும் என்கிற எண்ணத்தை உருவாக்கிய படம். மிகவும் குறைந்த செலவில், குறைவான நாட்களில் தயாரிக்கப்பட்ட தரமான படம் என்பது அவர் மீதான எதிர்பார்ப்புகளை அதிகமாக்கியிருந்த்து.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்திருச்சி – காரைக்கால் போகும் ஒரு லாரியைச் சுற்றித்தான் மொத்த படத்தின் கதையும் நகர்கிறது. தீவிரவாதம், த்ரில்லர், பதுக்கல் என சகலமும் கலந்த கலவையான மெயின் கதையுடன் கூடவே இரண்டு கிளைக்கதைகளும் உண்டு. ஒன்று சமூகத்தில் நிலவி வரும் சாதி வேற்றுமையைக் காட்டும் காதல் கதை; மற்றொன்று வன்கலவிக்கு உள்ளாகும் ஒரு தாயுக்கும், அவரது மகளுக்கும் இடையே நிலவும் உறவுச் சிக்கல். படத்தின் மையச் சரடு இவையில்லை எனினும் இதையெல்லாம் பேச தமிழில் ஒரு பெண் இயக்குநர் உள்ளார் என்பதே மிக ஆறுதலான விஷயம்.

தமிழ் சினிமாவின் பெண் இயக்குநர்கள் போக வேண்டிய தூரம் மிக அதிகம். ஆணாதிக்கம் நிறைந்த ஒரு துறையில் பெண்கள் தங்கள் முத்திரையைப் பதிப்பது சிரமம்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக ஒரு நூறாண்டு காலம் பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அதிகம்தானே!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் இன்னமும் ஆரம்பகட்ட சோதனை நிலையில்தான் இருக்கின்றனர் என்பது வருத்தமான யதார்த்தம். இந்த நிலை எதிர்காலத்தில் மாறலாம். மாறவேண்டும்.

– சிம்ம வாகனி