Shadow

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்

VSOP Tamil Review

தனது 25வது படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார் ஆர்யா. அது, பாஸ் (எ) பாஸ்கரன் போன்றதொரு வெற்றிப் படமாக இருக்கவேண்டுமென விரும்பி மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்துள்ளார் ஆர்யா.

வாசுவும் சரவணனும் ஒன்றாகப் படித்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றாகவே வளர்ந்து தொழில் செய்யும் மிக மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் அவர்களின் மனைவிகளுக்கோ தங்கள் கணவரின் நண்பரைப் பிடிக்காமல் போய் விடுகிறது. நண்பனா? மனைவியா? என்ற இக்கட்டில் இருந்து நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

ராஜேஷ் மீண்டும் சந்தானத்தை முழுக்க முழுக்க நம்பி களமிறங்கியுள்ளார். இரண்டு நண்பர்கள், அதிலொரு நண்பனுக்கு “ஆழகான வெள்ளை நிற பெண்” மீது கண்டதும் காதல் வந்து, அவள் பின்னாலே சுற்றுவதென ராஜேஷ் தனக்கு மிகவும் பிடித்த கதையை விடாமல் இம்முறையும் பற்றிக் கொண்டுள்ளார். இம்முறை சந்தானமே படாதபாடுப்பட்டே ராஜேஷைக் காப்பாற்ற முயல்கிறார். ஒரு கட்டத்தில் சோர்வாகி, ‘விஷயமே இல்லாம தொடர்ந்து கலாய்ச்சே ஒப்பேத்துறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?’ என ஒப்புதல் வாக்குமூலமும் தருகிறார் சந்தானம்.

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்ற மெஸ்சேஜோடு ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் சோலோ நாயகனாகப் பரிணமித்த சந்தானத்தின் காலைப் பிடித்து இழுத்துள்ளார் ராஜேஷ். அந்தப் படத்தின் மெஸ்சேஜ்க்கு உதவிய வித்யூலேகா ராமனை, இப்படத்தில் வேண்டிய மட்டும் சந்தானத்தைக் கொண்டே நையப்புடைத்துவிட்டார் ராஜேஷ். ராஜேஷின் திரையுலகத்தில் மிக அழகான பெண்கள் மட்டுமே ஆராதிக்கப்படுவதும், மற்ற பெண்கள் கலாய்க்கப்படுவதும் நகைச்சுவை என்ற பெயரில் தொடர்கதையாகிவிட்டது.

படத்தின் கொண்டாட்டத்திற்கு வசனம் மட்டுமே முழுமுதல் காரணமாக விளங்குகிறது.