
ஒரு விளம்பரத்திற்காக மட்டும் பீட்சா – 2 என உபயோகப்படுத்தியுள்ளனர்.
எதிர்மறை சக்திகள் (Negative energy) சூழ்ந்த ஒரு மாளிகையில் தங்குபவர்கள், அவர்களுக்கே தெரியாமல் எதிர்காலம் குறித்துக் கணிக்க வல்லவர்களாக மாறுகின்றனர்.
எதிர்மறை எண்ணங்களை கருவாக எடுத்துள்ள இயக்குநர் தீபனைப் பாராட்டியே ஆக வேண்டும். அதுவும் இது அவரது முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலை இயக்குநர் மாயனின் உழைப்பு படம் முழுவதும் விரவியுள்ளது. அவரது உழைப்புடன் படத்தின் ஒளியமைப்புச் சேர்ந்து, வில்லாவிற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால் படத்தில் எந்த அமானுஷ்யமும் இல்லை என்பது தான் அதன் சிறப்பம்சமே! எல்லாவற்றிற்கும் காரண காரியங்களை ஏற்றுக் கொள்ளும்படி அமைப்பதில் இயக்குநர் தீவிரமாக முயன்றுள்ளார்.
எதையும் வலிந்து திணிக்காமல் ரசிகர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார் தீபன். எடுத்துக்காட்டிற்கு படத்தின் முடிவு. நாயகன் தனக்கே தெரியாமல் தன் கலை வடிவத்தில் நாயகயின் மரணத்தை எவ்வாறு பதிந்துள்ளார் என்பதை மிக நுட்பமாக சித்தரித்துள்ளார். ப்ளாஷ்-பேக் என்று தனியாக எதுவுமில்லாமல், எண்ண அலைகளை உருவமாகக் காட்டிக் கதையைப் புரிய வைக்கின்றனர். அடுத்தென்ன என்ற சுவாரசியமோ, திடுக்கிடும் திருப்பமோ படத்தில் இல்லை. ஆனால் இயக்குநர் ஒரு சிறந்த கதைசொல்லியாகக் கலக்கியுள்ளார்.