தனது தந்தையின் மருத்துவச் செலவுக்கு கந்து வட்டியில் பணம் வாங்குகிறான் கார்த்திக். பணத்தை கெடுவுக்குள் கட்டாததால் கந்துவட்டிக்காரனால் மிரட்டப்படும் கார்த்திக், பணத்துக்காக என்ன செய்கிறான் என்றும், அதன் சங்கிலித் தொடர் விளைவுகளாக என்ன நேர்கிறது என்பதும்தான் படத்தின் கதை.
படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை. எப்படியாவது ரசிகர்களை ஈர்த்து விட வேண்டுமென வைத்த தலைப்பு போலும்! மூன்று மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருகிறேன் என்று சொன்ன கார்த்திக்கிடம், “வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என நினைச்சேன். ஏமாத்திட்டியே!” என்கிறான் கந்துவட்டிக்காரன் படம் தொடக்கத்திலேயே. இந்த வசனம் தான் படத்துக்கும் தலைப்புக்குமான ஒரே தொடர்பு. ஆனால் நாயகன் அவ்ளோ வெள்ளையும் கூடக் கிடையாது.
படத்தில் இரண்டு கதைகள் ஒரு புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. ஒன்று, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசம்; மற்றொன்று, அதிகாரமும் பண பலமும் மிக்க பெரியவரின் தேடல். தன் வரை நீண்ட சங்கிலித் தொடர் ப்ளாக்-மெயிலின் ஆரம்பப் புள்ளி யாரென்றும், ஏனென்றும் அறிய விரும்புகிறார். மேலிருந்து கீழாக பெரியவர் துப்புத் துலக்குவதில் ஒன்றை அறிகிறார். சங்கிலியின் மேல் பக்கமுள்ள உச்சநீதி மன்ற வக்கீல், ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, கட்டட கான்ட்ராக்டர் ஆகியோர் தாங்கள் ப்ளாக்-மெயில் செய்யப்படுவதிலும் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். சங்கிலியின் கீழ் பக்கம் உள்ளவர்களோ, தனக்கென எதுவும் வேண்டாதவர்களாக உள்ளனர்.
பெரியவராக ஆடுகளம் நரேன். பொருந்தா ‘விக்’குடன் அவர் வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லையெனினும், க்ளைமேக்ஸில் ஜெயப்ரகாஷுடன் அவர் பேசும் வசனங்கள் அருமையாக உள்ளன. நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்ரகாஷ், வழக்கம் போல் தந்தை கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்துள்ளார். கதாநாயகி பூஜாவாக ஷாலினி வட்னிகட்டி நடித்துள்ளார். கதாபாத்திரங்கள் அனைவரையுமே எதார்த்தமாகப் படைத்துள்ளார் எழுதி இயக்கியுள்ள A.L.அபிநிந்திரன். பணம் கேட்டு வருபவர்களை, ஆங்கிலம் பேசி விரட்டும் கான்ட்ராக்டர்களான 5 ஸ்டார் கிருஷ்ணாவும், T.M.கார்த்தியும் (‘நேற்று இன்று நாளை’ படத்தில் வரும் பார்த்தா) கலகலக்க வைக்கின்றனர்.
படத்தின் இன்னொரு விடயம், அபிநிந்திரனின் பிரதான கதாபாத்திரங்கள் அனைவரிடமுமே ஒரு விசேஷக் குணமுள்ளது. ஒருவருக்கு ஒருவர் நேசமாக இருப்பதோடு, தங்களுக்குள் எந்த ரகசியமும் வைத்துக் கொள்ளாமல் மனம் திறந்து பேசுபவராக உள்ளனர். ஒருவரைப் பிடிக்காவிட்டாலும், காட்டிக் கொடுக்காத வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார் பழனி (இவர் பொன்னியின் செல்வன் மேடை நாடகத்தில் பார்த்திபேந்திர பல்லவராக நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது).
நாயகனின் நண்பனாக வருகிறார் பாலசரவணன். நண்பருக்காக, தெரிந்தவருக்காக, நன்றிக்கடனுக்காக என அனைவருக்குமே ப்ளாக்-மெயில் செய்ய உதவுகிறார். அதாவது யாரை ப்ளாக்-மெயில் செய்கிறாரே, அவருக்கே மற்றொருவரை ப்ளாக்-மெயில் செய்ய உதவுகிறார்.இப்படிக் கதையில் சின்னஞ்சிற் சுவாரசியங்கள் ஏராளம். ஆக, முதலில் அந்நியமாகத் தோன்றும் நாயகன் பிரவீன் குமார், கதையின் போக்கால் மெல்ல பரீட்சயமானவராகி விடுகிறார். தொய்வில்லாமல் படத்தை ரசிக்க ஆண்டனியின் படத்தொகுப்பு உதவுகிறது.
படத்தின் கருவிற்கு, நெருக்கமானதொரு தலைப்பினைச் சூடியிருக்கலாம் படக்குழு. ஏனெனில், ‘நேசத்திற்குரிய ஓர் உறவினை அருகில் கொண்டிருப்பது பெருங்கொடுப்பிணை’ என அழுத்தமாகச் சொல்கிறது படம்.