
குலவிச்சை கல்லாமல் பாகற் படும் என்ற பழமொழி படம் முழுவதும் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. “அப்பா போலீசு, தாத்தா போலீசு. உன் உடம்பில் போலீஸ் ரத்தம் ஓடுது” என்ற வசனத்தால் வாய்புலற்றப்படுகிறது. பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்தின் நகைச்சுவைக்கு உதவி உள்ளது.
10 வருடத்திற்கு முன் லிங்குசாமியின் “ரன்” படத்தில் நடித்த மாதவனைக் காணவில்லை. இப்டத்தில் மாதவன் உப்பி போய் பெரிதாய் உள்ளார். மாடு இளைத்தாளும் கொம்பு இளைக்காது என்பது போல அவரின் புன்னகை மட்டும் மாறாமல் இருக்கிறது. ஆர்யாவின் பெயரை தான் முதலில் திரையில் போடுகின்றனர். ஆர்யாவிற்கே பாடல்களும், சண்டைக் காட்சிகளும் அதிகமுள்ளது. ‘அவன் இவன்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் ஆர்யா இரண்டு நாயகன் உள்ள கதையில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, பட்டியல், உருமி என அவர் நடித்த இரண்டு நாயகன் படப் பட்டியல் நீள்கிறது. தமிழ்த் திரையுலகின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு வித்திடும் ஓர் உதாரணமாக இத்தகைய முயற்சிகளைக் கொள்ளலாம். ஆனால் தமிழ்ப் படத்தின் ஆரோக்கியம் புது முயற்சிகளில் தான் அடங்கியுள்ளது. அரைத்த மாவை அரைக்கும் கதைகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அது ஒரு பகல் கனவாகவே இருக்கும். சமீரா ரெட்டி, அமலா பால் என இரண்டு நாயகிகள். சமீரா ரெட்டியின் பெயர் அமலா பாலின் பெயரை முந்தி திரையில் தோன்றுகிறது.
பையா படக் குழுவினரை முடிந்த அளவு அப்படியே உபயோகப்படுத்தியுள்ளார். தமிழ் இயக்குனர்களின் புதுக் கலாச்சாராமான திரையில் ஒரு காட்சியிலாவது தோன்றி விடுவதில் இவரும் சேர்ந்துக் கொண்டார். இசை யுவன் ஷங்கர் ராஜா; படத்தொகுப்பு ஆன்டனி. கோ படத்து ஜீவாவையும், மங்காத்தா படத்து அஜீத்தையும் அழகாக காட்சிகளில் இணைத்து சுவாரசியப்படுத்தி உள்ளார் ஆன்டனி. ‘பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்..’ என்ற யுவனின் பாடல் படத்திற்கான தூண்டிலாய் உபயோகப்பட்டுள்ளது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் தனித்து சொல்ல ஏதுமில்லை. அமெரிக்க மாப்பிள்ளை ஆக நகைச்சுவைக்காக ஒருவரை இணைத்துள்ளனர். பின்னிருக்கையில் அமர்ந்து ‘சீட்-பெல்ட்’ அணியும் அமெரிக்க ரிட்டர்னின் நற்பழக்கத்தைக் கூட நகைச்சுவையாக காட்டப்படுகிறது. என்னக் கொடுமை இது!? படத்தில் இன்னொரு மகா கொடுமையும் உள்ளது. ‘எனக்கு வலிச்சாலும் பரவாயில்லை. நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சவன் ஒருத்தவனும் உயிரோடு வெளில போகக் கூடாது’ என்ற சமீரா ரெட்டியின் வீராவேச வசனம். என்னப் பயங்கரமான கொலைவெறி கொடுமையாக உள்ளது பாருங்கள்.இரண்டாம் பாதியில் பயங்கொள்ளிக்கு வீரம் வந்தவுடன் படத்தி்ன் களகளப்பும் பயந்து திரையை விட்டோடுகிறது. பிறகு வழக்கம் போல் வில்லன் வெல்லப்படுகிறார். அறிமுக வில்லனாக அஷுடோஷ் ராணா. நாசர் சிற்சில காட்சிகளில் தோன்றினாலும் நிறைவாய் நடித்துள்ளார்.
வேட்டை – தர்க்க ஓட்டைகளால் ரசிகர் மேல் ஆடப்படுகிறது.