Shadow

வேலா வளர்த்த தீ

வேல ராமமூர்த்தி

எழுத்தாளர் ஒருவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு ஒரு நாவலை எழுதினால், அதைப் படிப்பவன் கதி அதோகதிதான் போல!

குற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களை கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் போட்டு விடுகிறார். இது சரியா தவறா என நிதானித்து யோசிக்க விடாமல் கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் ஓட விடுகிறார். இருட்டுக்குள் ஓடும் அத்தகைய ஓட்டம்தான் அவர் வெளிச்சமிட்டுக் காட்டும் வாழ்க்கை முறை. அவ்வாழ்க்கையில் கரணம் தப்பினால் மரணம். அப்படி நேரும் சிறு பிசகால்தான் கொம்பூதியைச் சேர்ந்த சோலை என்பவனின் குரல்வளை அறுந்து, அவன் கொடூரமாக இறக்க நேருகிறது.

வேயன்னா

நாவலின் பெயரே கதையின் களத்தைக் கோடிட்டுக் காட்டிவிடும். மதயானையையொத்த மனிதர்கள் நடமாடும் களமது. கள்ளர் கிராமமான கொம்பூதியின் தலைவர் பெயர் வேயன்னா. அவரது கண்ணசைப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களிடம் சிக்கி, பெருநாழியில் கச்சேரி (போலிஸ் ஸ்டேஷன்) நடத்தும் வெள்ளையர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சம் அன்று. நாவலைப் படிக்கும் பொழுது, வேல ராமமூர்த்தியைத்தான் வேயன்னாவாக உருவகித்துக் கொள்ள முடிகிறது. அதற்குக் காரணம் பின்னட்டையிலுள்ள வேல ராமமூர்த்தியின் கம்பீரமான புகைப்படமோ அல்லது ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் அவரை வீரத்தேவராகப் பார்த்ததோ காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையான வேயன்னாவோ வேல ராமமூர்த்தியின் தந்தை ஆவர். வேயன்னா பிரஸிடெண்ட்டாக இருந்த பெருநாழியிலுள்ள குடிநீர் கிணற்றை அனைத்துச் சாதியினரும் உபயோகிக்க வழிவகை செய்துள்ளார். அதைப் பொறுக்காதவர்கள், கிணற்றில் மலத்தை அள்ளிப் போட்டுள்ளனர். நாவலில் வரும் வேயன்னாவின் தீரத்தையும் தாண்டி, நிஜ வேயன்னா சற்றும் சளைக்காமல் மூன்று நாட்களுக்குள் கிணற்றை முழுவதும் தூர் வாரி மீண்டும் உபயோகத்துக்குக் கொண்டுள்ளார். இந்த நாவலை வேல ராமமூர்த்தி தன் தந்தை வேயன்னாவுக்குக் காணிக்கையாக்கியது அவ்வளவு பொருத்தமானதொரு முடிவு.

1957 இல் நடந்த முதுகளத்தூர் கலவரத்துக்கு முன், ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருந்த இரண்டு பூர்வீகக் குடிகளுக்கிடையே நிலவிய அன்பையும் அன்னியோனியத்தையும் காத்திரமான படைப்பாக்கியுள்ளார் வேல ராமமூர்த்தி. இந்நாவல் ‘கூட்டாஞ்சோறு (2007)’ எனும் தொடராக ஜூனியர் விகடனில் வந்த பொழுது, இரு சாதிக்குள்ளும் சம்பந்தம் செய்வதாக முடித்திருப்பார் போலும். அதை ‘பூர்வீக ரத்த தடயங்கள்’ எனும் எஸ்.ஏ.பெருமாளின் முன்னுரையில் இருந்து அறிய முடிகிறது. ஆனால், நாவலில் அன்னமயிலையும் வேயத்துரையையும் சேர்க்காமல் பிரித்து விடுகிறார். அது மட்டுமின்றி 2014இல் எழுதப்பட்ட புது என்னுரையில், மற்ற சாதிக்காரர்கள் மட்டும் ‘தலித்’துடன் சம்பந்தம் செய்யத் தாவியா குதிக்கிறார்கள் எனக் கேள்வியும் எழுப்புகிறார். இதைப் பற்றி கவிஞர் ராஜ சுந்தரராஜன் எழுதுகையில், ‘தொடராக எழுதிய காலத்தில் அப்படியொரு கற்பனாவாதம் இருந்ததாகவும் இப்போது திருத்தப்பட்டதாகவும் தெரிந்துகொண்டேன்’ என்று பதிந்துள்ளார். மாற்றத்தை முன்னெடுக்க கற்பனாவாதம் ஒரு தொடக்கமாக இருந்திருக்கலாம் என்ற மனக்குறை எழுவதைத் தடுக்க முடியவில்லை.

மாம்பழத்தான் குருவி

நாவலின் தகதகப்பில் இருந்து இடையிடையே நம்மைக் காப்பது ஒரு மானும், அதை வளர்க்கும் வஜ்ராயினியுமே! மையக் கதையிலிருந்து விலகும் இந்த கிளைக் கதை மாய எதார்த்த வகையைச் சார்ந்தது. அந்தக் கதையில் வரும் பேராசை மாந்திரீகரான நாகமுனி மிகவும் பொல்லாதவன். எந்த அளவு மூர்க்கமானவன் எனில், திருநங்கையான ஹஸார் தினாரைத் தன்னைப் போலவே கதைசொல்லியையும் நாவல் முழுவதும் அவன், இவன் என்றே விளிக்க வைத்துவிடுகிறான். இல்லையெனில் அவள், இவள், அவர் என்றழைத்து ஹஸார் தினாருக்கு வேல ராமமூர்த்தி கண்டிப்பாக மதிப்பளித்திருப்பார் என்றே தோன்றுகிறது. சில சமயம் எழுத்தாளரை அவரது கதாபாத்திரங்களே தம் வசம் பண்ணி விடுகின்றன என்பது உண்மைதான் போலும்.

நாவலின் வில்லன் போல் சித்தரிக்கப்படும் ஊர் ‘பெருநாழி’. வேல ராமமூர்த்தியின் சொந்த ஊரின் பெயரும் அதுவே! 1974இல் அவரின் முதல் கதை செம்மலரில் பிரசுரமாகியுள்ளது. பெருநாழியில் பெண் எடுத்த திண்டுக்கல் முஸ்லிமொருவர், நம்ம மாமனார் ஊர் பற்றிய கதையெனக் கொண்டுவந்து பெருநாழியில் கொடுத்துள்ளார். அதைப் படித்த பெருநாழிக்காரர்கள், எழுதினவன் ஊருக்குள் வந்ததும் அவனைக் கொன்றுவிட்டு, ஊர் பொதுவில் வழக்கைப் பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானம் போட்டுள்ளார்கள். 40 வருடங்களாகத் தொடர்ந்து தன் எழுத்தின் மூலம் சுய சாதி விமர்சனத்தை”யும்” செய்து வருகிறார். ‘தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம்’ என்கிறார் வேல ராமமூர்த்தி. சாதி நெருப்பை மூட்டி, அதில் குளிர் காய நினைப்பவர்கள்தான் அவர் சாட்டையின் இலக்கு. 2007 இல் மீண்டும் பெருநாழியை உரண்டைக்கு இழுக்கிறார். ஆனால் ஊரின் மீதும், தம் மக்கள் (இரு சாதியினர்) மீதும் பெரும் பாசம் கொண்டவர் வேல ராமமூர்த்தி. அதனால்தான் உப கதையாக, பெருநாழியின் வரலாறையும் பெயர் காரணத்தையும் நாவலுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.

தொடர் கதை எழுதுவதிலுள்ள சிக்கல், எங்கேனும் தொடர்புகள் அறுபட்டுவிடும். குண்டடிபட்டு சம்பங்கி ஆற்றங்கரையில் ஒதுங்கும் வேயன்னாவுக்கு, இருபது வருடங்கள் கழிந்த பின் வெள்ளைக்காரனின் துப்பாக்கி எனும் ஆயுதம் எப்படி இயங்குமென்பது தெரியவில்லை. இந்த நாவல் முடிக்கும்பொழுது இரண்டு முரணான உணர்ச்சிகள் ஒரு சேர எழுந்தன. ஒன்று மகிழ்ச்சி; இன்னொன்று வருத்தம். தீண்டாமையை அனுஷ்டிக்கும் பெருநாழியில் நல்லவேளையாக பிறக்கவில்லை. ஆகையால் வேயன்னாவின் வளரிக்கு இலக்காகாமல் தப்பினோமே என்ற மகிழ்ச்சியும், கொம்பூதியில் பிறந்து வேயன்னாவின் தலைமையில் எருதுகட்டுக்குப் போக முடியலையே என்ற வருத்தமும்தான் அது.

– தினேஷ் ராம்

பி.கு.: டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இந்நாவலின் முன்னட்டை ஓவியத்தை வரைந்தது எவரென்ற விவரம் புத்தகத்துக்குள் இல்லை. அட்டை வடிவமைப்பு மிக அருமையாய் உள்ளது.

பிற்சேர்க்கை: கவிஞர் ராஜ சுந்தரராஜனின் மறுமொழி:

//இதைப் பற்றி கவிஞர் ராஜ சுந்தரராஜன் எழுதுகையில், ‘தொடராக எழுதிய காலத்தில் அப்படியொரு கற்பனாவாதம் இருந்ததாகவும் இப்போது திருத்தப்பட்டதாகவும் தெரிந்துகொண்டேன்’ என்று பதிந்துள்ளார். மாற்றத்தை முன்னெடுக்க கற்பனாவாதம் ஒரு தொடக்கமாக இருந்திருக்கலாம் என்ற மனக்குறை எழுவதைத் தடுக்க முடியவில்லை.//

அது அப்படி இல்லை. மறத்தி ஓரொருத்தியையும் அக்கா, தங்கச்சி, ஆத்தாவாகப் பார்க்கிறவர்களாகவே பள்ளர்கள் இருந்தார்கள். ஆகவே அது சாத்தியமில்லை. காமராஜர் காலத்துக்குப் பிறகு வன்மம், பகை எனக் கண்ணிருண்டதே அல்லாமல், முறைதவறி ஒன்றும் நடந்ததில்லை என்றே நம்புகிறேன். (காமராஜருக்குப் பிறகு, அ.தி.மு.க. அந்த ஜாதிப் புகைச்சலை வளர்ப்பது கேடுகெட்ட ‘வோட்டு’ அரசியல்.) 🙁