Shadow

ஸ்கைஃபால் விமர்சனம்

Skyfall

Bond.. James Bond. 23 படங்கள். 50 வருடங்கள். உலகை வசீகரித்துக் கொண்டிருக்கும் Ian Fleming-இன் இறவாக் கதாபாத்திரம்.

ஏதாவது ஒரு நாட்டிற்குள் தனியொருவராய் நுழைந்து, வில்லனின் ஆராய்ச்சிக் கூடத்தை நிர்மூலமாக்கும் வழக்கமான  007 படமல்ல இது. ஓர் அட்டகாசமான துரத்தும் காட்சியுடன் தொடங்கினாலும் படம் முழுவதும் ஏராளமான ஆச்சரியங்கள். ஒரு சிறு துரும்பைக் கூட உடைக்காமல் படத்தின் வில்லனை கைது செய்து விடுகிறார் 007. சிறையில் இருந்து தப்பிக்கும் வில்லனின் வியூகத்தை 007 எப்படிச் சமாளிக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

டேனியல் க்ரெய்க். ஏற்கனவே இரண்டு படங்களில் ஜேம்ஸ் பான்ட்டாக நடித்திருந்தாலும்.. சீன் கேனரி, ரோஜர் மூர், பியார்ஸ் பிராஸ்னன் என முந்தைய ஜேம்ஸ் பான்ட்கள் மக்கள் மனதில் பெற்ற இடத்தைப் பெற முடியவில்லை. ஆனால் ‘ஸ்கைஃபால்’ மூலம் டேனியல் க்ரெய்க், தான் ஜேம்ஸ் பான்ட் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானவர் என்பதை நிருபித்துள்ளார். ஜேம்ஸ் பான்ட் படங்களில் மிக முக்கியமான அம்சமே அவர் உபயோகிக்கும் வித்தியாசமான சாதனங்கள் தான். இப்படத்தில் அப்படி எந்தவொரு சாதனத்தையும் தனது சாகசத்திற்குச் சாதகமாக அவர் உபயோகிக்கவில்லை. பழங்கால வேட்டைத் துப்பாக்கியைக் கொண்டு வியூகம் வகுக்கிறார். தனது முதிர்ச்சியையும், திறமை தளர்வையும் பக்குவமாக ஏற்றுக் கொள்கிறார். எனினும் தனது முயற்சியை கைவிடாது வேதாளத்தைப் பிடிக்கும் விக்கிரமாதித்தனை போல ஜேம்ஸ் பான்ட் முயன்று முடிக்கிறார்.

எம். ஜேம்ஸ் பான்ட் உளவாளியாக இருக்கும் MI6 என்னும் நிறுவனத்தின் தலைவர். 95ஆம் ஆண்டு முதல் ஜூடி டென்ச் இந்தப் பாத்திரத்தில் நடித்து வந்தாலும், இந்தப் படத்தின் கதையை ஜூடி டென்ச்சை மையமாக வைத்துப் புனைந்துள்ளனர். அவர் ‘எம்’மாக நடிக்கும் கடைசிப் படம் என்பதை கதையோடு அழகாகப் பொருத்தியுள்ளனர். ராவூல் சில்வா என்னும் முன்னாள் உளவாளியாக ஜேவியர் பார்டம் படத்தின் வில்லனாக மிரட்டியுள்ளார். தன்னைக் காட்டிக் கொடுக்கும் ‘எம்’-மைப் பழி வாங்கியே தீர வேண்டுமென்ற லட்சியாவேசத்தில், MI6 உளவமைப்பையே ‘ஹேக்’ செய்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். தொழில்நுட்ப வளர்ச்சியின் அபாயத்தைத் தொட்டும் தொடாமல் சொல்லும் இயக்குநர் மென்டீஸ்,  தொழில்நுட்பத்திற்கு எதிராக ஜேம்ஸ் பான்ட்டின் சாகசத்தை களம் இறக்குகிறார். முந்தைய ஜேம்ஸ் பான்ட்களுக்கு கிட்டாத வரம் என்றே இயக்குநர் மென்டீஸைச் சொல்ல வேண்டும். ஜேம்ஸ் பான்ட்டின் கடந்த காலம், எம் எடுக்கும் முடிவுகள் என வசனங்கள் மூலம் காட்சிகளைச் செம்மையாகச் சுவாரசியப்படுத்தியுள்ளார். 

படத்தின் முடிவுக் காட்சிகளில் உலகின் ஏதோ ஒரு மூலையில், யாரோ அழகி ஒருத்தியுடன் சல்லாபித்துக் கொண்டிருக்க வேண்டிய ஜேம்ஸ் பான்ட்.. புதிய டீம், புதிய தலைவர் (எம்) என அடுத்த சாகசத்திற்கு உடனடியாகத் தயாராகி விடுகிறார். இன்னும் 50 வருடங்கள் போனாலும்.. ஜேம்ஸ் பான்ட்டிற்கான எதிர்பார்ப்பும், காத்திருப்பும் மாறாது என்பது மட்டும் திண்ணம்.

Leave a Reply