ஆட்டோ டிரைவராக இருந்து படத் தயாரிப்பாளர் ஆனவர் K.மஞ்சு. கன்னடத்தில் 38 படங்கள் தயாரித்துள்ளார். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதற்படம் “பிரம்மன்”. கமல ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மம்மூட்டி என பலரை தமிழில் முதன்முறையாக அறிமுகம் செய்தவர் இவர்தான். வாய்ப்புத் தேடிய இயக்குநர் சாக்ரடீஸின் கதை பிடித்துவிட, “ஹீரோ யார்” எனக் கேட்டுள்ளார்.
“சசிக்குமார்.”
“அவரது கால்ஷீட் வாங்கிட்டு வாங்க. அதுவரை வெயிட் பண்றேன்” எனச் சொல்லி அனுப்பியுள்ளார் மஞ்சு. பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி போன்ற படங்களில் பணியாற்றியிருந்த இயக்குநர் சாக்ரடீஸுக்கு, சசிக்குமாரைச் சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக அமையவில்லை. சசிக்குமாரின் ஆசிரியர்கள் இருவரை தூது விட்டிருக்கிறார். எடிட்டர் ராஜா முகமதுவும் சசிக்குமாரிடம் பேச 2 வருடக் காத்திருப்பு ஒருவழியாக முடிந்துள்ளது.
“சசிக்குமார் ஒரு இரும்புக் கோட்டை போல! மற்றவர்களுடன் அதிகம் பேசாதவர். தனக்கென வைத்திருக்கும் ஒரு குழுவில் மட்டுமே இயங்கக் கூடியவர். என்னடா இந்த மனுஷன பார்த்து கதையை சொல்லவே விட மாட்டேங்கிறார்னு நினைச்சேன். ஆனா பழகிய பின்தான் தெரிந்தது, அவரும் ஒரு இயக்குநராக இருந்து யோசிச்சிருக்கார்.
நான் போனப்ப ஜீன்ஸ்லாம் போட்டுக் கொண்டு, நாம் படத்தில் பார்க்காத சசிக்குமாரைப் பார்த்தேன். அழகான ஹீரோவைலாம் மாத்திடுவார் பாலா. அதுமாதிரி சசிக்குமாரை ஸ்டைலிஷாக மாற்றணும்னு ஆசைப்பட்டு அவரிடம் சொன்னேன். உடல் எடையைக் குறைத்துக் கொண்டு ஸ்மார்ட்டாக வந்து நின்னார்.
சசிக்குமார் இல்லைன்னா நான் இல்லை. இந்தப் படமும் இல்லை. சசிக்குமாரை நான் brandஆக உபயோகிச்சேன். வருடத்திற்கு 250-300 கோடியை ஆந்திர சினிமாவில் டி.எஸ்.பி.யை நம்பி முதலீடு செய்றாங்க! அவர் இந்தப் படத்தில் இருக்கார்னா சசிக்குமார்தான் காரணம்” என தனக்கு அடையாளத்தைத் தந்த சசிக்குமாரையும் மஞ்சுவையும் மிக மிகச் சிலாகித்து நீண்ட நன்றியைத் தெரிவித்தார்.
“நான் இரும்புக் கோட்டைலாம் இல்லீங்க. ஒரு படம் பண்றப்ப, அதை முடிக்காம இன்னொரு படத்தைப் பற்றி யோசிக்கிறதில்லை. எங்க சார் பேசுறப்ப நான் ‘ஈசன்’ படம் இயக்கிட்டு இருந்தேன். அது முடிஞ்சதும்தான், சரி நடிக்கலாம்னு முடிவு பண்ணி சுந்தரபாண்டியன், குட்டிப்புலி இப்போ பிரம்மன் என வந்திருக்கேன். இயக்குநர் என்பவன் க்ரியேட்டர். படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மன். அவன் யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது. அதனால்தான் நான் கதை கேட்பதைத் தவிர்த்து வருகிறேன்.
நான் வெற்றி தோல்வி பார்த்துட்டேன். ஆனா தயாரிப்பாளர் மஞ்சுவுக்காகவும், இயக்குநர் சாக்ரடீஸுக்காகவும் இப்படம் வெற்றி பெறணும்னு ஆசைப்படுறேன்” என்றார் சசிக்குமார்.