Search

ஹரிதாஸ் (1944)

(முக்கிய நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், என்.சி.வசந்த கோகிலம், புளிமூட்டை ராமசாமி)

Haridas Movie 1944

‘ஹரிதாஸ்’ திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் ஒரு தனிப் பெருமையும், நீங்காத புகழும் உண்டு.

இப்படத்தின் கதை ‘பக்த விஜயம்’ என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டது. 16-10-1944 இல் வெளிவந்த இத்திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் அந்த வருட தீபாவளி உட்பட 3 தீபாவளிகளைக் கொண்டாடி, 110 வாரங்கள் ஓடி ஒரு மாபெரும் சரித்திரம் படைத்தது.

ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் தயாரிப்பான ‘ஹரிதாஸ்’ இரண்டாவது உலகப்போர் மும்மரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால், அப்போதைய அரசுக் கட்டுப்பாட்டின் காரணமாக நீளம் குறைந்த படமாகத் தயாரிக்கப்பட்டது. மொத்த நீளம் 10995 அடிகள் தாம். இது அக்கால நடைமுறைப்படி மிகச் சிறிய படம்.

இந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். கோவலன் (1934), தூக்கு தூக்கி (1936), சகுந்தலை (1940), சாவித்திரி (1941) போன்ற மிகச் சிறந்த படங்களை வெற்றிகரமாகத் தயாரித்து புகழுடன் விளங்கிய நிறுவனம். இந்தப் படங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக அமைந்துவிட்ட படம் ‘ஹரிதாஸ்’.

ஹரிதாஸ் ஒரு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன். அவனுக்கு காலா காலத்தில் ஒரு திருமணமும் செய்து வைத்துவிட்டனர் அவனது பெற்றோர். ஹரிதாசின் மனைவியின் பெயர் லட்சுமி.

ஹரிதாசுக்கு ஒரு நண்பன். கண்ணன் என்று பெயர். சபலபுத்தியுடைய ஹரிதாசுக்கு ஒருநாள் ரம்பா எனும் நாட்டியக்காரியை அறிமுகம் செய்து வைக்கிறான். ரம்பாவின் அழகில் மயங்கிய ஹரிதாஸ், ரம்பாவே கதியென அவளது வீட்டிலேயே தங்கி உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறான்.

தாய், தந்தை வீட்டில் இல்லாத ஒருநாள் ரம்பாவை நாட்டியமாடுவதற்காக தன் வீட்டிற்கே அழைத்து வந்து விடுகிறான் ஹரிதாஸ். இது அவனது மனைவி லட்சுமிக்குப் பிடிக்கவில்லை. மேலும் ரம்பா ஒரு தாசி எனவும் அறிந்து, கோபம் கொண்ட லட்சுமி ரம்பாவையும் அவளது குழுவினரையும் அடித்துத் துரத்தி விடுகிறாள். லட்சுமியைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது ரம்பாவிற்கு.

சூழ்ச்சி செய்து, முதலில் ஹரிதாசின் பெற்றோரை, ஹரிதாசே வீட்டை விட்டு வெளியேறும்படிச் செய்து விடுகிறாள். இப்போது தட்டிக் கேட்க, அவனது பெற்றோர்கள் அங்கு இல்லை என்கிற தைரியத்தில் ஹரிதாஸ் தான்தோன்றியாக ரம்பாவின் வீட்டிலேயே நாட்களைக் கழிக்கிறான். குடியும், சூது விளையாட்டும் அவனுடன் ஒட்டிக் கொள்கிறது. அனைத்துச் செல்வங்களையும் ரம்பாவிடம் இழக்கிறான். ஹரிதாஸிடம் இப்போது வீடு ஒன்று தான் மீதி. அதையும் நயவஞ்சமாக எழுதி வாங்கி விடுகிறாள் ரம்பா.

ஒருநாள் அவனது வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் இழந்த ஹரிதாஸையும், அவனது மனைவியையும் வீட்டை விட்டே துரத்தி விடுகிறாள். மனைவியை அழைத்துக் கொண்டு, கால்நடையாகவே பயணித்து, ஒரு வனப்பகுதி வந்து சேருகிறான் ஹரிதாஸ்.

ஒரு சாதுவிடம், அழகான பெண்கள் மூவர், ஒருநாள் ஆசி பெறுவதைக் காண்கிறான். அவர்கள் தங்களை கங்கை, சரஸ்வதி, யமுனை எனவும், சாபத்தில் அவர்கள் உருவம் பாழாகி, பின் இந்த சாதுவை பூஜித்து வந்ததால் சாப விமோசனமடைந்து பழைய நிலைக்குத் திரும்பியதாகவும் கூற அதை நம்ப மறுக்கிறான் ஹரிதாஸ். அந்நேரம் அந்த சாதுவும் அங்கு வருகிறார். அவரைக் கேவலமாகப் பேசுகிறான் ஹரிதாஸ். அந்தப் பெண்களுடன் தொடர்புபடுத்தி, சாதுவை அவமானப்படுத்துகிறான். ஹரிதாசை எச்சரிக்கிறார் சாது. அதை அலட்சியம் செய்த ஹரிதாஸ், சாதுவைத் தனது காலால் எட்டி உதைக்க முற்படுகிறான். கோபமடைந்த சாது, அவனது இரண்டு கால்களையும் இல்லாமல் செய்து விடுகிறார். ஹரிதாஸ் முடமாகி விடுகிறான்.

தவறை உணர்ந்த ஹரிதாஸ், சாதுவிடம் மன்னிப்புக் கேட்கிறான். அவன் தனது தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து, அவர்களது நன்மதிப்பைப் பெற்றால், சாபம் நீங்கி விடுமெனக் கூறி மறைகிறார் அந்தச் சாது. உண்மையில் அவர் சாது வேஷத்தில் வந்த கடவுள் கிருஷ்ணர்.

ஊனமுற்ற ஹரிதாஸ், தனது தாயும் தந்தையும், ஒருநாள் பக்தகோஷ்டிகளுடன் துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டே செல்வதை ஒரு குன்றின் உச்சியிலிருந்து கவனிக்கிறான். ‘அப்பா, அம்மா’ என எவ்வளவோ சத்தமுடன் குரல் கொடுத்தும் அவர்கள் காதுக்கு அது விழவில்லை. மனமொடிந்த ஹரிதாஸ் குன்றின் உச்சியிலிருந்து உருண்டு கீழே விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்து கீழே விழும் பொழுது சாதுவின் அருளால் அங்கோர் வைக்கோல் போர் உருவாகி அதன் மேல் விழுகிறான். கவனித்து விட்ட பக்தகோடிகள் அங்கே ஓடி வருகிறார்கள். ஹரிதாஸின் தாய் தந்தையரும் அதிலிருக்கின்றனர். மறுபடியும் சாதுவின் அருளாசியில் அவனது இரண்டு கால்களும் மீண்டு வர, தாய் தந்தையரை வணங்கி, அவர்களுக்கு ஆசிரமம் அமைத்து, நல்லவனாக மாறி அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருகிறான்.

தந்தையின் காலை, அவர் உறங்கும் பொழுது பிடித்து விட்டுக் கொண்டிருந்த நிலையில், அவனை சோதனை செய்ய அங்கே சாது தோன்றி அவனை அழைக்கிறார். பணிவிடை முடியாமல் வர இயலாது என திடமாகக் கூறி விடுகிறான் ஹரிதாஸ்.

மகிழ்ச்சியடைந்த சாது, தன் உருவத்தைக் களைந்து கோபாலராக மாறி சங்கு சக்ரத்துடன் காட்சியளித்து அனைவரையும் ஆசிர்வதிக்கிறார். படம் இனிதே நிறைவு பெறுகிறது.

‘சிவகவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, எம்.கே.தியாகராஜ பாகவதரை, புகழின் மற்றுமொரு சிகரத்திற்கு இட்டுச் சென்ற படம் ‘ஹரிதாஸ்’.

‘சிவகவி’யைப் போலவே இப்படத்தின் பாடல்களும் அமோக வெற்றியைப் பெற்றன. படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ஹரிதாஸாக நடித்த பாகவதர், ஒரு வெண் புரவியின் மேலமர்ந்து, ‘வாழ்விலோர் திருநாள்’ எனப் பாடியபடியே தோன்றுவார், கண்ணடிப்பார். அப்போது தியேட்டரில் ஏற்பட்ட ஆரவாரத்தை நேரில் அனுபவித்த அனுபவம் இந்தக் கட்டுரையாளருக்கு உண்டு. ஆண்கள் பரவசமடைவது இருக்கட்டும். பாகவதர் அக்காட்சியில் இளம்பெண்களைத் துரத்தும் காட்சியைக் கண்டு, படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் அடைந்த பிரமிப்பையும், பரவசத்தையும் அக்காலப் பெரியவர்கள் பரவலாகச் சொல்லியிருக்கிறார்கள். அக்காலத்தில் பாகவதருக்கு பெண் ரசிகைகள் ஏராளம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

‘மன்மத லீலைகள் வென்றார் உண்டோ?’ இது பாகவதர் பாடிய ஒரு பாட்டின் முதலடி. இப்பாடலுக்கு டி.ஆர்.ராஜகுமாரி நடனமாடுவார். சாருகேசி ராகத்தில் அமைந்த இப்பாடலும், காட்சியும் அடைந்த வெற்றி மகத்தானது.

அதுவரை தமிழ்மொழியில் புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய சொல்லாடல் இந்த ‘மன்மத லீலை’. இதன் பயன்பாடு தமிழில் இப்போது எந்த அளவு இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இப்பாடலின் ஆரம்பத்தில், ரம்பாவாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரி மலர்க்கணை ஒன்றை பாகவதர் மேல் வீசுவார். பாட்டின் நடுவிலே ஒரு பறக்கும் முத்தம் (FLYING KISS). இளம் ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள்.

இப்படத்தின் இன்னுமொரு விசேஷ அம்சமாகச் சொல்ல வேண்டியது படத்தின் பாட்டுக்கள். இயற்றியவர் பாபநாசம் சிவன். இசை ஜி.ராமநாதனின் கைவண்ணம். அனைத்துப் பாடல்களுமே மிகுந்த வரவேற்பைப் பெற்று புகழடைந்தன.

‘அன்னையும் தந்தையும் தானே – பாரில்
அண்ட சராசாரம், கண்கண்ட தெய்வம்’

‘கிருஷ்ணா முகுந்தா முராரே – ஜெய
கிருஷ்ணா முகந்தா முராரே’

‘அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்’

‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’

‘நிஜமா, இது நிஜமா?’

போன்ற பாடல்கள் அக்காலத்தில் ஒலிக்காத இடமே கிடையாது.

படத்தில் பாகவதரின் மனைவியாக நடித்தவர் என்.சி.வசந்த கோகிலம். இவரை அக்காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு நிகராகப் பேசுவார்கள். இவர் பாடியிருந்த, ‘கதிரவன் உதயம் கண்டேன்’ பாடலும் ஒரு வெற்றிகரமான பாடாலாக அமைந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் ஜோடி அக்கால நியதிப்படி இப்படத்திலும் உண்டு. ஆனால் வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இவர்களது நகைச்சுவை சோபிக்கவில்லை. படத்தின் ஒரு காட்சியில் கூட என்.எஸ்.கே.யும், பாகவதரும் சேர்ந்து நடித்த காட்சி இல்லை என்பது அதிசயமாக இருந்தது. புளி மூட்டை ராமசாமிக்கு இப்படத்தில் குறிப்பிடும்படியான ஒரு நல்ல வேஷம் கிடைத்து அவரும் அதை அருமையாகக் கையாண்டார்.

Haridas Movie posterபிரபல எடிட்டராக இருந்த சுந்தர்ராவ் நட்கர்னி என்பவர் திறம்பட இப்படத்தை இயக்கியிருந்தார். ராயல் டாக்கீஸ் டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் நிறுவனத்திற்கு இப்படம் மிகப் பெரிய பெயரையும், அமோக வசூலையும் அள்ளிக் கொடுத்தது.

ஹரிதாஸ் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த காலத்திலேயே, 1945 இல் மஞ்சள் பத்திரிகையான ‘இந்து நேசன்’ ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிறை செல்ல வேண்டியதாயிற்று. இப்படத்தின் ஆரம்பத்தில் பாகவதர் ஒரு வெள்ளைப் புரவியில் அமர்ந்து உல்லாசமாக பவனி வந்தது ராசியில்லை எனவும், அதன் காரணமாகவே சிறை செல்ல வேண்டியதாயிற்று எனவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

எது எப்படியிருந்தாலும், ‘ஹரிதாஸ்’ காலத்தால் மறக்க முடியாத ஒரு உன்னதத் திரைக்காவியம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்