
பேய்ப் படம் என்றாலே காமெடிப் படம் என்றாகி விட்டது சூழல். இந்தக் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து விட்டாலே மக்கள் ரசிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
சாலை விபத்தில் சிக்கி இறக்கும் பெண்ணின் மொபைலைத் திருடி விடுகிறான் திருடனான நாயகன். மொபைலில் இன்கம்மிங் காலாக வரும் பேய் செய்யும் அட்டகாசம் தான் படத்தின் கதை.
கதாநாயகனாக வைபவ். தனக்குக் கிடைத்த சோலோ வாய்ப்பைச் சிந்தாமல் சிதறாமல் உபயோகித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது.
வசனம், கதாபாத்திரத் தேர்வு, நாயகன் வீட்டின் உட்புற கலை அமைப்பு, குத்து டான்ஸ் பள்ளியின் முகப்பு என படம் நெடுகும் கலகலப்பை அனைத்து விஷயங்களிலும் பிரதிபலிக்க விட்டுள்ளார் இயக்குநர் S.பாஸ்கர். இயக்குநர் சுந்தர்.சி, இந்தப் படத்தைத் தயாரித்ததில் ஓர் ஆச்சரியமுமில்லை. மிகச் சாதாரணமான யூகிக்கக் கூடிய க்ளைமேக்ஸிலும் வசனங்கள் மூலம் வயிற்றைப் புண்ணாக்குக்கின்றனர். குறிப்பாக, மருத்துவராக வரும் கருணாகரனை வி.டி.வி.கணேஷ் கலாய்க்கும் பொழுது தியேட்டரே அதிர்கிறது.
பாடகராக வரும் யோகி பாபுவும், குத்து டான்ஸ் மாஸ்டராக வரும் வி.டி.வி.கணேஷும் அதகளம் செய்கின்றனர். குறிப்பாக இரண்டாம் பாதியைத் தாங்குவதே அவரது நகைச்சுவையான கரகரப்புக் குரல்தான். முழுப் பேயாக இருப்பதை விட, குறைவான மேக்கப்பில் பேயாக இருக்கும்போது லேசாக மிரள வைக்கிறார் ஓவியா.
கிரெடிட் கார்டு வேணுமா என நேரம் கெட்ட நேரத்தில் கால் செய்து திகில் ஏற்படுத்துபவர்களை விட, இரவில் ஃபோன் செய்யும் இந்தப் பேய் கிச்சுகிச்சு மூட்டுவதை ரசிக்க முடிகிறது.