Search

18 தீக்குச்சிகளும் யட்சியும்

ஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம். ப்ரிவியூ தியேட்டரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டையும் இயக்கியது மணிமாறன் எனும் திரைப்படக் கல்லூரி மாணவர். அரங்கம் நிறைந்திருந்தது. நின்று கொண்டும் சிலர் பார்த்தார்கள். இதற்கே படத்தை இரண்டு முறை திரையிட்டனர். 

முதற்படம் 18 STICKS. முதலில் ஆங்கிலக் குறும்படமோ என நினைத்தேன். நல்லவேளையாக தமிழ்ப்படம். அதுவும் ஈழம் சம்பந்தமான படம். 2009 இல் தன் குடும்பத்தை இழந்த யோகன், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்படும் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். இறப்பது உறுதியாகிவிட்டது. அவரைச் சுற்றி கும்மிருட்டு. அவரிடம் ஒரு தீப்பெட்டி உள்ளது. அதில் 18 தீக்குச்சிகள் இருக்கின்றன. வீடியோ கேமிராவை இயக்கி விட்டு, ஒவ்வொரு தீக்குச்சியாகப் பற்ற வைத்தவாறு, தனது குடும்பத்திற்கு என்னானது என பேசத் தொடங்குகிறார். கேமிராவைப் பார்த்துப் பேசுகிறார். “எனது எட்டு வயது மகளுக்கு சரியாக சிறுநீர் கூட கழிக்கத் தெரியாது. அவளது பிறப்புறுப்பில் இருக்கும் விந்துக்களில் ‘உங்களுடையதும்’ இருக்கிறது” என கோபமாகப் பேசுகிறார். இறுதியில், “என்னால் உங்களுக்கு தர முடிந்தது குற்றவுணர்ச்சி தான். ஆமாம் உங்களை பழிவாங்கி விட்டேன்” என அவர் சொன்னதும் அவரிருக்கும் இடம் தீப்பிழம்புகளால் சூழப்படுகிறது.

கேமிராவின் முன்னால் இருப்பவர் வெடித்துச் சிதறுகிறார். ஆனால் கேமிராவிற்கு ஒன்றும் ஆகவில்லை. அது இயங்கிக் கொண்டே இருக்கிறது. படத்தில் பணி புரிந்தவர்கள் பெயர் வருகிறது. 20 நிமிடப் படம். ஒரே ஒரு நடிகர். படத்தின் பலம் அதன் கச்சிதமான பின்னணிப் போரொலி. படத்தில் நடித்திருந்த ஈழத்தமிழரான ஈழநாதனும், தன் குடும்பத்தை ஈழத்தில் பறிக் கொடுத்தவரே. 

yatchi யட்சி

இரண்டாவது படம்  யட்சி. தேவதட்சன் எனும் எழுத்தாளருக்கு வலது கை மட்டுமே இயங்கும். அவருக்கு ஓர் அழகான பேத்தி உண்டு. மருத்துவர் அவரது மரணத்தை உறுதிபடுத்தி விடுகிறார். வாதை பொறுக்க முடியாமல் எழுத்தாளர்  தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார். அதற்கு தனது பேத்தியைத் தயார்படுத்த, ‘ஒட்டகம் கதை’ ஒன்றைச் சொல்கிறார். புத்திசாலியான பேத்தி அதில் பிழை கண்டுபிடிக்கிறார். எழுத்தாளர் தன் தவறினை உணர்ந்து, பேத்தியின் எதிர்காலத்திற்காக சில ஏற்பாடுகளைச் செய்கிறார். அடுத்த நாள் காலை, பேத்தி பள்ளிக்குப் புறப்பட்டதும் தன்னை கொலை செய்து கொள்கிறார். 

ஒரு சிறுகதையை, அதன் அழகு குறையாமல் காட்சிப்படுத்தியது போலிருந்தது. இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள். ஞாநியின் நாடகக் குழுவில் இருக்கும் ராஜாமணி, எழுத்தாளர் தேவதட்சனாக நடித்துள்ளார்.  

இரண்டு படத்தின் கதாபாத்திரங்களுக்கும், தனக்கு மரணம் சம்பவிக்க இருப்பதை சந்தேகமின்றி அறிந்து கொள்கின்றனர். இரண்டு படமும் உரையாடல் சார்ந்தே கதையை நகர்த்துகின்றன. முதற்படத்தில் உறுத்தாத வசனங்கள் இரண்டாவது படத்தில் கொஞ்சம் அதிகம் போல் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு ஒரு நாய்க்குட்டியைத் தூக்கி வந்து, “இதுக்கு என்ன பேர் தேவ்?” என அச்சிறுமி கேட்கிறாள். ‘இந்த நாய்க்குட்டியோட பேர கேட்கும் போதெல்லாம் தேவதைகளின் சவுந்தர்ய அழகை இவ முகத்துல என்னால பார்க்க முடியுதுங்க. அந்த அழகை பார்த்துட்டே இருக்கனுங்கிறதுக்காகவே இன்னும் அதோட பேர அவகிட்ட நான் சொல்லவே இல்ல..’ என்று எழுத்தாளர் நினைக்கிறார். இயக்குநரின் பிரயத்தன கவித்துவம் அக்காட்சிகளின் எதார்த்தை சிதைத்து விடுகிறது. அந்த சிறுமியோ கேள்விகளால் துளைத்து விடும் அதீத புத்திசாலி. நாய்க்குட்டிக்கு முதல் முறையே பெயர் வைக்கவில்லை என்றால் அதை மறந்து விட்டு அடுத்த வேலை பார்ப்பவள் இல்லை அவள். மேலும் சிறுமிகள் தனது பிரியத்துக்குரியவைகளுக்கு, தாங்களே பெயர் சூட்டிக் கொள்வார்கள். இப்படத்திற்கு ‘யட்சி’ என்று ஏன்  தலைப்பு வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை. கொல்லப்படும் நிறைவேறாத ஆசையுடைய பெண்கள் தான் யட்சிகளாக மாறுவர். அதே போல், முதற்படத்திற்கு ஏன் ஆங்கிலத் தலைப்பு வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை. சர்வதேச விழாக்கள் தான் இலக்கு என்றால் கூட தமிழில் இரண்டொரு நொடிகள் ’18 தீக்குச்சிகள்’ என ஆங்கிலத் தலைப்பிற்கு முன்னோ பின்னோ போட்டிருக்கலாம். (வாசலில் இருந்த போர்ட்டில், ப்ரிவியூ தியேட்டருக்கு கூட ‘முன்காண் திரையரங்கம்’ என்றே தமிழ்ப்படுத்தியிருந்தனர்.)

Manimaranசமகாலத்தில் உள்ள அனைவருக்கும் ஈழம் குறித்த குற்றவுணர்ச்சியும் வருத்தமும் உண்டு. அந்தக் கதாபாத்திரத்தின் செய்கை, ‘நானும் என் குடும்பமும் அழிந்தோம். இனி நீ எப்படிக் குற்றவுணர்ச்சியின்றி வாழப் போற?’ என்று வன்மத்தையே பிரதிபலிக்கிறது. இங்கு அரசியல்வாதிகள் பிரபாகரன் படத்தையும், உடல் சிதைந்த ஈழத் தமிழர்களின் படத்தையும் வைத்து.. இதே ‘குற்றவுணர்ச்சி’யைக் கிளறிக் கிளறி தான் குளிர் காயும் வேலையைச் செய்து கொண்டுள்ளனர். இங்கு இயக்குநர் குளிர் காயவில்லையே தவிர, அதே வேலையை தான் செய்கிறார். இயக்குநர் மணிமாறன் அதிகம் வாசிக்கும் பழக்கமுள்ளவர் எனத் தெரிகிறது. ஈழம் சார்ந்த பொது புத்தியில் இருந்து விலகி, கதை அமைக்க எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. மேலும் அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழியில் மரணம் குறித்த பயமோ எதிர்பார்ப்போ இல்லை. முதல் ஃப்ரேமிலிருந்தே குற்றம் சாட்டுவதையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டுள்ளார். அதாவது படம் போகிறப்போக்கில் எத்தகைய பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. பாதிப்பு ஏற்படுத்தணும் என்ற முன் தீர்மானத்தோடு வலிந்து உருவாக்கப்பட்டதாக உள்ளது. கதை அளவில் நுனிபுல்லை தான் இந்தக் குறும்படமும் மேய்கிறது. ‘ஈழம் பற்றிய படம்’ என்ற ஒன்றே இயக்குநரின் இருப்பை அழுத்தமாகப் பதிய போதுமானதாகவுள்ளது. அதற்குக் காரணம் இத்தகைய முயற்சிகளில் நிலவும் பஞ்சம் காரணமாக இருக்கலாம்.

இந்த ‘18 தீக்குச்சிகள்’ படம் யாருக்கானது? சர்வதேச திரைவிழாக்களில், இப்படம் ஏதாவது சலனம் ஏற்படுத்துமா என்றால் சந்தேகம் தான். படம் எந்த அரசியலையும் பேசவில்லை. அப்படி சலனம் ஏற்படுத்தினாலும் அதனால் ஒரு பயனுமில்லை. இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் சர்வதேச அரங்கில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எங்கேயாவது சிறு சிறு சலசலப்புகள் எழுந்து அடங்கிய வண்ணம் தானுள்ளன. போர்க்குற்றத்தை நிரூபிப்பது தான் தற்போதைய உடனடி தேவையாக இருக்கிறது. குறும்படங்களுக்கு தணிக்கையில்லை என்பது ஒரு சாதக அம்சம் என குதூகலிக்கும் மணிமாறன், முயன்றிருந்தால் இலங்கை இராணுவத்தினைத் துகிலுரித்திருக்கலாம். அதற்கான உழைப்புப் படத்திலுள்ளது; கதையிலில்லை. இப்பொழுதும், யோகன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுவதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் கதையின் கரு அதை இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. சர்வதேச அரங்கில் இப்படம் இலங்கை இராணுவத்தின் அட்டூழியத்திற்கு எதிராக ஒரே ஒரு தீக்குச்சியைக் கூடக் கிழித்துப் போடவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது (வழக்கம் போல் சேனல்-4 தான் நமக்குத் துணை).

இரண்டாவது படத்தில் எழுத்தாளர் தன்னை மரணத்திற்கு தயார்ப்படுத்திக் கொள்வதோடு பேத்தியையும் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள அழகாகத்  தயார்படுத்துகிறார். ‘இறக்கவிருக்கும் பெரிய ஒட்டகம் பாவமில்ல?’ என சின்ன ஒட்டகத்தின் தனிமையை கதையில் ஏற்றுக் கொள்கிறாள் சிறுமி. இவரின் கடைசி நொடிகள், முன்னவரைப் போல் வன்மம் கொண்டதாக இல்லாமல் அழகான காதலால் நிறைந்துள்ளது. அவரது உடல்மொழியும் அருமை. வசனங்களின் உதவியின்றியே பேத்தியின் மீதான வாஞ்சை பிரமாதமாய் அவரது முகத்தில் தெரிகிறது. அந்த சிறுமியின் தொனி (பேச்சு அல்ல), வழக்கத்தைப் போல் இயல்புக்கு மீறியதாக உள்ளது. ஆனால் நிறைவாக இருந்தது. இந்தப் படம் அனைவருக்குமானது. படத்தில் மென் உணர்ச்சிகள் அழகாக கையாளப்பட்டுள்ளது. கவித்துவ வசனங்கள் நீங்கலாக இப்படம் சர்வதேச தரமானது. 

மணிமாறன் விரைவில் வெள்ளித்திரையிலும் பிரகாசிக்க வாழ்த்துகள்!
Leave a Reply