Shadow

2500$ பெறுமானமுள்ள படம்

சேட்டை படத்திற்கு, “ஆபாசம்.. நாராசம்.. கவிச்சி” என ஏகப்பட்ட அர்ச்சனைகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஒன்பதுல குரு‘ என சொல்கின்றனர். ஆனால் படம் அந்த அளவுக்கு மோசமில்லை என்று தான் நினைக்கிறேன். காரணம் சேட்டை ஹிந்திப் படமான ‘டெல்லி-பெல்லி’யின் ரீ-மேக். அந்தப் படத்தின் அழகான வசனங்களை எல்லாம் வடிகட்டி மொன்னையான படமாக சேட்டையை எடுத்துள்ளனர்.

“This girl has given me blow job.. I am 21st century man, I have given her oral pleasure also” என வசனம் வரும் ஹிந்திப் படத்தில். அதே வசனத்தை பிரேம்ஜி தமிழில், “உங்க பொண்ணு என்னை ரேப் பண்ணிட்டா” என சொல்வார். காமெடி(!?)யாக இருக்குமோ?  மடுவில் ஆபாசத்தைக் கண்டவர்கள் மலையில் என்னக் காண்பார்கள்?

காமெடி என்ற பெயரில் ‘ஒன்பதுல குரு’ படத்திலும், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா‘ படத்திலும் நன்றாக கழுத்தறுத்திருப்பனர். இரண்டுமே வில்லன் இல்லாத தமிழ்ப் படங்கள். வில்லன இருந்தால் தான் தமிழ்ப் படங்களில் நாயகனுக்கு மரியாதையே கிடைக்கும். வடிவேலு கோவை சரளாவிடம் உதை வாங்குவதை தினமும் தான் தொலைகாட்சியில் பார்க்கிறோம். அந்தக் காட்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து விமலை பிந்து மாதவியிடம் உதைப்பட வைத்து பாண்டிராஜ் பார்வையாளர்களை இம்சித்திருக்க வேண்டாம். தமிழ் நண்டு கதை மிகவும் பிரபலமானது. அந்தக் கதையை சுட்டு.. வினய், சத்யன், அரவிந்த ஆகாஷ், சாம்ஸ் என நான்கு நண்டுகள் ஒருவர் காலைப் பிடித்து ஒருவர் இழுப்பதாக கதை அமைத்துள்ளனர். அதையும் ஜவ்வு போல எவ்ளோ முடியுமோ அவ்வளவு இழ்ழ்ழ்ழுத்து திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த நண்டுகளின் லட்சியம் லட்சுமி ராய். ‘கேடி ரங்கா கில்லாடி பில்லா படத்திலாவது நம்மைக் காப்பாற்ற ரெஜினா இருந்தார். ஒன்பதுல குரு படத்தில் அத்தகைய சிறு பாக்கியம் கூட நமக்கு கிடைக்கவில்லை. லட்சுமி ராயை வில்லியாக்கி ‘ட்விஸ்ட்’ வைத்திருப்பார்கள். எல்லாம் வல்ல மங்காத்தா தாயீ தான் நம்மை காப்பற்றணும்.

ஒன்பதுல குரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற இரண்டுப் படத்திற்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. அதாவது இரண்டு படத்திலுமே வரும் நாயகனும் அவர்களது நண்பர்களும் விட்டேற்றியானவர்கள். மனைவியையும் கல்யாணத்தையும் வெறுக்கும் நண்பர்கள் திருந்துவது போல மீண்டும் மறைந்து விடுவார்கள் ஒன்பது குருவில். அதே போல, சுலபமாக சம்பாதிக்கும் வழி என அரசியலை நினைக்கும் நண்பர்கள் சம்பாதிக்க தொடங்கிய பின்னும் அரசியலில் இறங்குகின்றனர் கேடி பில்லா கில்லாடி ரங்காவில். ‘பார்வையாளனை அவமதிக்கும் நாயகன்’ என பில்லா-2 படத்தைப் பற்றி காட்சிப்பிழை திரையில் சுபகுணராஜன் வைத்த தலைப்பு தான் ஞாபகம் வருகிறது. தனியாக நகைச்சுவை ட்ராக், கதையின் ஊடே இழையோடும் நகைச்சுவை, முழு நீள நகைச்சுவை படம் என்பதெல்லாம் போய்..  stand-up காமெடி, ஸ்டேஜ் ட்ராமாவில் பேசுவது போன்றே வசனங்களால் மட்டுமே படத்தை ஒப்பேற்றுவது என இவர்கள் நோகாமல் நுங்கு சாப்பிட நினைக்கிறார்கள். போதாக்குறைக்கு கோர்வையற்ற காட்சிகளின் தொகுப்பாகவே படமுள்ளது. இந்த மட்டில் சேட்டை பரவாயில்லை. சுமார் 90 கோடி சம்பாதித்த டெல்லி-பெல்லி படத்தை “முறைப்படி” உரிமை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளனர். நன்றாக இருக்கிறதோ இல்லையோ சேட்டையின் மூலம் ஒரு வெற்றிப் படம்.

அதிக நாயகத்துவம் இல்லாத படத்தில் ஆர்யா நடிக்க முன் வந்திருப்பது ஆரோக்கியமான விடயம். ஆனாலும் அவருக்கு பொருந்தாத வேடத்தில் அவரென்ன தான் செய்ய முடியும்? நாயகனை எப்படியாவது அதிரடியாக அறிமுகப்படுத்தும் பழக்கத்திற்கு ஹோலிவுட்டினர் அடிமை போல. அதற்காக இவர்கள் படும்பாடு இருக்கே! சந்தானத்தின் பல்சரில் ஏறுகிறார் ஆர்யா. ஆனால் படம் முழுவதும் சந்தானம் ஸ்கூட்டர் தான் வைத்திருப்பார். ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா!’ போல சந்தானம் நகைச்சுவை என்ற பெயரில் அவ்வளவு கொடுமை செய்திருக்க மாட்டார் சந்தானம் (சித்ரா லக்ஷ்மணன் ஓரிரு காட்சிகளில் தான் வருவதால் பிழைத்தோம்). சேட்டையில் தமிழ்/ஆங்கில செய்திதாள்களை கிண்டல் செய்திருப்பார். அதிசயமாய் சந்தானத்திடம் வந்திருக்கும் சமுதாயப் பொறுப்புணர்வுள்ள கேலி.

“அவ லெஸ்பியன்.”

அருகில் அமர்பவர்களிடம் புரளிப் பேசும் பணக்காரப் பெண் பற்றிய ஒரு காட்சியை வைத்திருப்பனர். சேட்டை தான் மொன்னைப் படமாச்சே! அதே போல் அஞ்சலியை கன்னியாகவே ஆர்யாவிற்காக வைத்திருப்பார்கள். ஆனால் ஹிந்திப் படத்தில்.. அந்தக் கதாபாத்திரம் விவாகரத்திற்காக காத்திருப்பவர். தமிழ்ப் படங்களில் லாஜிக் இல்லை என்ற குற்றச்சாட்டு இயக்குநரை பெரும் மன வருத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கும் போல. ஆர்யா ஏன் ஹன்சிகாவின் காதலைத் துறக்கிறார், நிச்சயமான திருமணம் ஏன் அஞ்சலிக்கு நடக்கவில்லை என அனைத்திற்கும் ஒரு காரணம் ஒரு பாட்டு படத்தில் வைத்துள்ளனர். திரைக்கதையில் தனஞ்செயன், சுந்தர்.சி என பலரின் கைங்கரியம் உள்ளது. அதாவது உள்ளதை உள்ளபடி வைத்தால் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். அதுவும் உண்மை தானோ என்னவோ!? படத்தில் ஒரே துர்நாற்றமாம். சந்தானத்திற்கு அடிக்கடி அபான வாயு வருகிறதாம். என்னக் கொடுமை இது!? ‘மெட்ராஸ்-ஐ’ போல டெல்லி பெல்லி என்பது ஒரு நோய். சரியாக சொல்லணும் என்றால் பேதி அல்லது வயிற்றுப் போக்கு. படத்தின் தலைப்பையே அப்படி வைத்து விட்டு மல ஜலம் நீக்கிய தேவர்களாகவா கதாபாத்திரங்களைக் காட்ட முடியும். கி.ராஜநாராயணனின் “சுற்றுப்புற சுகாதாரம்” சிறுகதையைப் படித்தால் மூக்கையே வெட்டிக் கொள்வார்களோ!?

எது எப்படியோ சமீபத்தில் வந்த படங்களிலேயே சேட்டை மிக முக்கியமான படம் என்பதில் எனக்கு எள்ளளவு மாற்றமில்லை. எப்படியெனில், ஐந்தாறு வருடங்களிற்குப் பிறகு நீங்கள் ஹாட்-சீட்டில் அமரும் பொழுது உங்களை லட்சாதிபதியாக்க போகும் கேள்வி சேட்டையிலிருந்தே கேட்கப்படும்.

காமெடி சூப்பர் ஸ்டாராக சந்தானம் அறிமுகமான படம் எது?

– தினேஷ் ராம்