Shadow

46 – சட்டவிரோதமாய் நடக்கும் பைக் ரேஸ் பற்றிய படம்

46-movie

விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் T.R.பாலா. மேலும் 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது ’46’ என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

இந்தப் படத்தில் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தில் நடித்த சச்சின் மணியும், பீச்சாங்கை படத்தில் நடித்த கார்த்திக்கும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய வேடங்களில் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷியும் கியானும் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2 படத்தில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

சென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றிய கதை தான் இந்தப்படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இது பற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கி வருகிறார்கள்.

இந்த இல்லீகல் பைக் ரேஸினால் என்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறியாமல் பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த இல்லீகல் பைக் ரேஸில் பலரும் கலந்து கொள்கிறார்கள். இவர்களின் தவறுகளையும், பைக் ஒட்டும் திறமையையும் சிலர் தங்களது சுயலாபத்துக்காக எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்களாம். அந்த வகையில் இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படம்.

“இந்த பைக் ரேஸ் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசண்ட் நகர் பீச்சில் சுமார் 50 பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, அதில் மிகவும் பரபரப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம்.. இதற்காக தெலுங்கு திரையுலகில் இருந்து ஹைடெக்கான தொழில்நுட்ப உபகரணங்களை வரவழைத்துப் படப்பிடிப்பை நடத்தினோம். குறிப்பாக இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிகத் தத்ரூபமாக எடுத்துள்ளோம்” என்கிறார் இயக்குநர் T.R.பாலா. அந்தக் காட்சி ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என்கிறது படக்குழு.

இதுவரை இப்படித் தெருக்களில் நடக்கும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றி இந்தியாவில் எந்த மொழியிலும் படம் வெளியாகவில்லை. யாரும் தொடாத கான்செப்ட் என்பதால் தான் இயக்குநர் T.R.பாலா இந்தக் கதையைத் தேர்வு செய்துள்ளார்.

“சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள் தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண் தான் 46. அதைப் பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் ’46’ என்றே டைட்டில் வைத்துவிட்டோம்” என்கிறார் இயக்குநர் T.R.பாலா.

“நடிகர் விஜய் படங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் அவரிடமிருந்து பங்சுவாலிட்டி எப்படிக் கடைபிடிக்கணும், ரசிகர்களுக்குப் பிடிக்கிற மாதிரி எப்படிப் படம் இருக்கணும் என சில டிப்ஸ்களை கற்றுக் கொண்டது இந்தப் படத்திற்கு ரொம்பவே உதவியாக இருந்தது. அவர்தான் எனக்கு ரோல் மாடல்” என்கிறார் TR.பாலா.

ஷாம் நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவரும், தற்போது சரத்குமாரை வைத்து ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ படத்தை இயக்கி வருபவருமான இயக்குநர் எஸ்.டி.வேந்தனின் மகன் தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் தந்தை-மகன் இருவருமே தங்களது படப்பிடிப்பை சில நாட்கள் ஒரே சமயத்தில் நடத்தியுள்ளார்கள் என்பதுதான். இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறது.

>> ஒளிப்பதிவு – வினோற்றாஜன்
>> படத்தொகுப்பு – மணிக்குமரன்
>> கலை – ராமு தங்கராஜ்
>> சண்டை – ஸ்டன்னர் ஷாம்
>> நடனம் – சாண்டி, அசார்