Shadow

“வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை” – அமீர் | மாயவலை

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மாயவலை’ ஆகும். சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன், “மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் செய்துள்ளேன், வாய்ப்பு தந்த அமீருக்கு நன்றி. வெற்றிமாறன் அமீரை ராஜனாகக் காட்டினார். இதில் இன்னொரு விதமான ராஜனைக் காட்டியுள்ளேன். நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள், அவரது நடிப்பு அருமையாக இருக்கும். வெற்றிமாறன் போன்ற தீவிரமான படைப்பாளி இந்தப் படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி” என்றார். இவர், 1994இல் வெளியான ‘அதர்மம்’ படத்தின் மூலம் இயக்குநராக வெள்ளித்திரையில் அறிமுகமானவர். மாயவலை அவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள ஐந்தாவது படமாகும். கடைசியாக, 2004 இல் ‘அது’ எனும் படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குநர் நடிகர் அமீர், “ ‘மாயவலை’ தொடங்கியதன் நோக்கம் ஒன்று தான். இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான் இதன் மூலக் காரணம். மூத்த பத்திரிகையாளர்களுக்கு அவரைத் தெரியும். ‘அதர்மம்’ எனும் அற்புதமான படத்தைத் தந்தவர். பல முன்னணி நடிகர்களை இயக்கிய‌வர். எனக்கு அவருக்குமான நட்பு நீண்டது. அவர் படத்தின் ஷூட்டிங்கில் அவரை வேடிக்கை பார்த்திருக்கிறேன். நான் அவரிடம் உதவியாளனாக வேலை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அவரது சினிமா பயணம் மாறிவிட்டது. அவர் டிவி பக்கம் ஒதுங்கி விட்டார். பல வேலைகள் பார்த்தாலும் அவருக்கு சினிமா செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. ‘சரி வாருங்கள் பண்ணலாம்’ என்றேன். ஒரு கதை சொன்னார், ‘அதைப் பண்ணலாம்’ என பல ஹீரோக்களிடம் கதை சொன்னோம். ஆனால் நடக்கவில்லை. கடைசியில், ‘நீயே நடி’ என்றார். சரிண்ணே என்று சொல்லி ஆரம்பித்தது தான் இந்தப் படம்.

நாங்கள் ஆரம்பித்த போது ஒரு பட்ஜெட் இருந்தது. ஆனால் அது கை மீறிப் போய்விட்டது. எனக்குப் பலர் உதவிக்கு வந்தார்கள். முதல் முறையாக ஒரு படத்தை ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி முடித்துவிட்டு உங்களைச் சந்திக்கிறேன். எனக்கே இது புதிது தான். இந்தப் படம் ஆரம்பித்த போது வெற்றிமாறனிடம் சொன்னேன், ‘செய்யுங்கள் நன்றாக வரும்’ என்றார். படம் முடிந்து அவருக்குக் காட்டினேன், ‘நானே ரிலீஸ் செய்கிறேன்’ என்றார். இன்றைய சினிமா வியாபாரம் தெரிந்த வெற்றிமாறன் போன்ற படைப்பாளி எங்கள் படத்தை ரிலீஸ் செய்வது, எங்களுக்குப் பெருமை.

என் அனைத்துப் படங்களுக்கும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திறகும் இசை. முதலில் பாடலில்லாமல் இருந்தது, இறுதியில் மூன்று பாடல்கள் வந்துவிட்டன‌. அதை அட்டகாசமாக யுவன் செய்து தந்தார். சஞ்சிதா ஷெட்டி, ‘என்னைப் பற்றி எப்போதும் நல்லவிதமாக சொல்லமாட்டீர்களா?’ என்பார். மிகத் திறமைசாலி அவர். இந்தப் படத்தில் இரவில் தான் ஷீட்டிங், ஆனால் முகம் சுளிக்காமல், அற்புதமாக உழைத்துத் தந்தார். நாயகனுக்கு இந்தப் படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும். வின்சென்ட் என் முதல் படத்தில் நடிக்க வேண்டியவர், ஆனால் அவரைத் தொடர்பு கொள்ளும் சிக்கல்களில் அவரை நடிக்க வைக்க முடியவில்லை, பின் ‘யோகி’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

பிரதீப் அருமையாகச் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். விக்ரம் எடுத்த இடத்தில் தான் இப்படத்தை எடுத்தோம். அந்த இடம் என்று தெரியாத வண்ணம் கலை இயக்குநர் வீரமணி அருமையாகச் செய்து தந்தார். என் ஐந்து படங்களுக்கும் ராம்ஜி தான் கேமராமேன், ஒரு இரவில் நடக்கும் கதையை அருமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். எடிட்டர் அஹமது, மறைந்த நண்பர் ஜனநாதன் அறிமுகப்படுத்திய அருமையான கலைஞர். என்னுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். படம் அருமையாக வந்துள்ளது. வெற்றியை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் அதுவும் அவரை ஹீரோவாக வைத்து எடுக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன், “நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும் அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. ‘வட சென்னை’ ராஜன் ரோல் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப் போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன். கேரக்டர் கேட்காமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் கேரக்டர் சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேன் என்று நினைத்தார். ஆனால் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் நிறையப் பேசுவோம்.

மனித உணர்வுகள் குறித்து ஒரு அருமையான விஷ‌யத்தை இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தில் எல்லோருமே நன்றாகச் செய்துள்ளார்கள். ரமேஷ், அமீர் எப்போதும் ஒன்றாகவே வருவார்கள். என் படங்கள் பற்றி ரமேஷின் கருத்து மிக உதவியாக இருக்கும். இந்தப் படத்தை நன்றாகச் செய்துள்ளார். எனக்குத் திருப்தியான படமாக இப்படம் வந்துள்ளது. இந்தப் படம் எனக்குப் பிடித்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.