Shadow

அவள் பெயர் ரஜினி விமர்சனம்

படத்தின் ஆரம்பத்தில் மர்மமான முறையில் நடக்கும் ஒரு மரணம். அந்த மரணத்தின் பின் இருக்கும் மர்மங்களை அவிழ்க்க, நாயகனின் போராட்டம், இவையே “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் ஒற்றை வரிக்கதை.

படத்தின் துவக்கத்தில் காரில் ஹைவேஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்  ஒரு கணவன் மனைவி காட்டப்படுகிறார்கள். கார் ஓட்டிக் கொண்டு வரும் கணவனுடன் நாயகன் காளிதாஸ் வீடியோ காலில் மாம என்று அழைத்தபடி பேசிக் கொண்டு வருகிறான். அவன் பேசி முடிக்கும் தறுவாயில் கார் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிடுகிறது. பின்னால் தூங்கிக் கொண்டு இருக்கும் மனைவியை எழுப்பி தான் போய் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி வருகிறேன் என்று கேனை எடுத்துக் கொண்டு செல்கிறான்.  அவன் திரும்பி வருவதற்குள் அந்த விபரீதம் நடந்தேறுகிறது. அந்த கொலையை நிகழ்த்தியது ஒரு மனித உயிரா..? இல்லை அமானுஷ்ய சக்தியா..? என்பதான குழப்பம் கொலையை நேரிடையாகப் பார்த்த சாட்சிகளிடம் இருக்க, காரில் அடைப்பட்டிருந்த மனைவியோ விசாரணை செய்ய முடியாத மருத்துவநிலையில் இருக்கிறாள்.  இந்த நிலையில் தன் அக்காளின் இந்த நிலையைக் கண்டு மனம் வருந்தும் நாயகன் இந்தக் கொலைக்கு பின்னணியில் இருக்கும் ஒவ்வொரு முடிச்சிகளாக அவிழ்க்க களம் இறங்குகிறான்…? முடிவு என்ன ஆனது என்பதை விவரிக்கிறது திரைக்கதை.

நவீன் கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம்.  கதையின் மையக்கதையோடு சம்மந்தப்படாத, அதே நேரம் மையக்கதையின் சிக்கல்களுக்கு தீர்வு காண முயலும் ஒரு கதாபாத்திரம்.  தன் அக்காவின் நிலை கண்டு வருந்தி, அவரின் நலன் கருதி இந்த வழக்கை தன்னிச்சையாக துப்புத் துலக்க துவங்குகிறார் காளிதாஸ். போலீஸ்காரர்கள் தவறவிடும் சின்ன சின்ன விசயங்களைக் கூட எடுத்துக் கொண்டு அதன் மூலம் ஒரு லீட் பிடித்து உண்மையான கொலைகாரனைத் தேடிச் செல்கிறார்.  சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கத்தில் பார்த்த காளிதாஸ்..? இவரா என்று சந்தேகம் வரும் அளவிற்கு அளவாகவே நடித்திருக்கிறார்.  அக்காவிற்காக கண்கலங்கும் இடத்திலோ,  அக்கா கடத்தப்பட, அவரைக் காணாமல் தேடித் தவிக்கும் இடத்திலோ ஸ்கோர் செய்ய நிறைய இடம் இருந்தும் தங்கம் காளிதாஸை காணமுடியவில்லை.

அக்காவாக நடித்திருக்கும் நமீதா ப்ரோமோத்திற்கு பெரும்பாலான காட்சிகளில்  கலங்கி கண்ணீர் சிந்தும் கதாபாத்திரம் . அதை பெரும்பாலான காட்சிகளில் கச்சிதமாக செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக போலீஸ் விசாரணையின் போது தன் கணவனை எண்ணியும், கணவனின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் அவதூறுகளை எண்ணியும் கண்கலங்கும் க்ளாஸ் ஆக்டிங்.

ரஜினியாக நடித்திருக்கும் லஷ்மி கோபால்சாமியின் நடிப்பு நேர்த்தியாக இருக்கிறது. ஒட்டு மொத்த திரைப்படத்தில் கதாபாத்திர வடிவமைப்பு என்பது அவரது கதாபாத்திரத்திற்கு மட்டுமே சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. அவரின் சிறுவயது ப்ளாஷ்பேக் போர்ஷன்கள் வலியைக் கொடுக்கின்றன. ரஜினிக்கும் சத்யாவிற்கும் அண்ணன் தங்கை பாசப் போராட்டம் பார்ப்போர் நெஞ்சை நெகிழச் செய்கிறது.  அதிலும் அந்த சிகப்பு நிற சேலையை கட்டிக் கொண்டு அவர் ஒய்யாரமாக நடந்து வரும் அழகில் ஒட்டு மொத்த ரசிகர்களும் மனதை தொலைக்கிறார்கள். வன்மமும் குரோதமும் மாறாத கண்களுடன் பலிவாங்க நிற்பதும், இயலாமை மற்றும் பாசத்துடன் தன் அண்ணன் முன் மண்டியிடுவதும், அதிகாரத்தின் துஷ்பிரயோகம் தன் ஆடைகளை உரிக்கும் போது கூனிக் குறுகும் உடல்மொழியுடன் கண்களில் அவமானத்தை தேக்கி நிற்பதும் என, அந்த கண்களின் வழியாக அத்தனை உணர்ச்சிகளையும் வெகு சிறப்பாக கடத்துகிறார்.

ஆட்டோ டிரைவராக வரும் கருணாகரன் கதாபாத்திரம் ஒட்டு மொத்தக் கதைக்கும் இடையில் ரிலாக்சேஷனுக்காக பயன்பட்டு இருக்கிறது. பெண் உடல் மீது மோகம் கொண்டு அலையும் ஒரு பெண் பித்தன் கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார்.  போலீஸ் அதிகாரியாக வரும் அஸ்வின் குமாருக்கு பெரிதாக ஏதும் வேலையில்லை. தானாக எதையும் கண்டுபிடிக்காமல் நாயகன் கண்டுபிடித்து சொல்லும் வரை காத்திருந்து பின் நாயகன் காட்டிய வழியில் சென்று எதையும் கண்டுபிடிக்காமல் நின்று அடுத்து நாயகன் கொடுக்கப் போகும் க்ளூவிற்காக காத்திருக்கும் கதாபாத்திரம். அஸ்வின் குமாரை விட,  கான்ஸ்டேபிளாக வரும் ரமேஷ் கண்ணா ஆங்காங்கே கவனம் ஈர்க்கிறார்.  ரெபோ மோனிகா கான், காளிதாஸை காதல் செய்வதற்கே பயன்பட்டு இருக்கிறார். இருவருக்குமான காதல் காட்சிகள் பெரிதாக இல்லையென்றால் கூட, ஆங்காங்கே சின்னதாக மோதிக் கொள்கிறார்கள்.  அக்காள் கணவராக வரும் ஷாஜி க்ரூப் ஒரு சில காட்சிகளே வந்தாலும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவில் காட்சிகளுக்கு கிடைக்கும் பரபரப்பு கதையிலோ காட்சிகளிலோ இல்லாதது பெருங்குறை.  தன் வித்தியாசமான கோணங்கள் மற்றும் ஒளியமைப்புகள் மூலம் படத்திற்கு தேவையான உணர்வலைகளை மனரீதியாக கச்சிதமாக செட் செய்கிறார். தீபு ஜோசப்பின் எடிட்டிங்கில் கதைக்கான நேர்த்தி கைதேர்ந்து அமைந்திருக்கிறது.

இசையமைத்திருப்பது 4 மியூசிக்ஸ் குழுவினர். பாடல்கள் பரவாயில்லை ரகம் என்றாலும், பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.

அறிமுக இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.  நவரசா ப்லிம்ஸ் சார்பாக ஸ்ரீஜித் மற்றும் ப்ளஸ்டி ஸ்ரீஜித் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

வினில் ஸ்கரியா வர்கீஸ் ஒரு பழிவாங்கும் கதையை வித்தியாசமான ஜானரில் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் இது போன்ற கதைக்கு ஏன் பேய்கதை போன்ற ஜோடனைகள் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கருணாகரன் சொல்வதில் எது உண்மை, எது பிரமை என்கின்ற குழப்பம் படம் பார்க்கும் நமக்கு மட்டும் இல்லை; படம் எடுத்த இயக்குநருக்குமே  இருந்திருக்கும் போல் தெரிகிறது.   முக்கிய கதாபாத்திரங்களான நவீன், கெளரி, அஜ்மத் போன்றோரின் கதாபாத்திர வடிவமைப்பு தட்டையாக இருப்பது பெரும் குறை. மேலும் அக்காள் தம்பிக்கு இடையேயான பாசப் பிணைப்பை காட்டாதது, கணவன் மனைவிக்கு இடையேயான அன்னோன்யம் காட்டப்படாதது போன்றவை படத்தின் ஆகப்பெரும் குறைகள். இதனால் படத்துடன் உணர்வு  ரீதியாக கனெக்ட் ஆவதில் சிரமங்கள் தோன்றுகின்றன. அதிலும் ரஜினியின் பின்கதை தெரிந்துப் பின்னர் அவர்கள் மீது எழும் பரிதாபம் கதையை பலவீனப்படுத்துகிறது. சத்யாவின் மரணம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே குற்றவுணர்ச்சி இருந்ததா..? என்பதற்கான விடையும் கதையும் இல்லை.  கெளரியின் காலுக்கு ஆரம்ப காட்சிகளில் என்ன ஆனது, நாயகனுக்கும் அப்பாவிற்கும் என்ன பிரச்சனை, நாயகனுக்கும் நாயகிக்கும் என்ன பிரச்சனை, ரஜினி கெளரியின் கணவருக்கு பல முறைகள் போன் செய்து பேசியிருக்கிறாள் என்கின்ற காட்சி எப்படி சரி..? உண்மையாகவே பேசினால் என்றால் என்ன பேசினாள்..? சத்யாவிற்கு நிகழ்ந்த விபரீதம் பற்றி நாயகன் நவீனுக்கு தெரியுமா..? தெரியாதா..? இப்படி பல கேள்விகள். ஆனால் எந்த கேள்விக்கும் திரைப்படத்தில் விடை இல்லை. இதனால் உச்சகாட்சியில் நாயகன் கொலையாளியை அடிக்கும் போது நமக்குள் ஏற்பட வேண்டிய உணர்வெழுச்சி தோன்ற மறுக்கிறது. இது திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.

மொத்தத்தில் “அவள் பெயர் ரஜினி”  எதிர்பார்ப்புகளை மீறிய நல்லபடமுமில்லை ; எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த சராசரி படமும் இல்லை.

அவள் பெயர் ரஜினி – பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

மதிப்பெண் 2.25 / 5.0