Shadow

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்

avengers-endgame-movie-review

சூப்பர் வில்லன் (!?) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன பாதிக்கும் மேற்பட்ட மனித இனத்தை மீட்க, எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். இறுதியில் சூப்பர் ஹீரோகளுக்கே வெற்றி! முடிவு சுபம் தான் எனினும், அந்த வெற்றியை அடைய அவர்கள் மேற்கொள்ளும் அந்த உணர்ச்சிகரமான பயணம், இந்தப் படத்தைத் திரையுலக வரலாற்றின் மிக முக்கியமான படமாக உயர்த்துகிறது.

ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில், சூப்பர் ஹீரோ படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். அவெஞ்சர்ஸில் சிலர் அதி சக்தி படைத்தவர்கள், சிலர் மிகவும் புத்திசாலிகள், சிலர் நவீன உபகரணங்களுடன் தங்கள் பராக்கிரமத்தை உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு புள்ளி என்றால், ஒரு குடும்பமாக இணைந்து உலகைக் காக்கவேண்டுமென்ற அவர்களது எண்ணமே. எத்தனை புரிதலின்மைகள் உருவாகி உரசிக் கொண்டாலும், இறுதியில் ஒற்றுமையாக மனிதக்குலத்திற்காகக் இணைவதால் தான் அவர்கள் சூப்பர் ஹீரோகள். சிவில் வாரில் ஜென்ம விரோதியாக மாறிவிடும் அயர்ன் மேனும், கேப்டன் அமெரிக்காவும், எண்ட்கேமில் தோளோடு தோள் உரசி தானோஸிற்கு எதிராய் அணி திரள்வது மிக அழகு.

அதீத சக்தி ஒன்றே ஒருவரை சூப்பர் ஹீரோவாக்கிவிடாது. ஈக்கள் மொய்ப்பது போல் அத்தனை சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்தாலும், தானோஸ்க்கு எவருமே நிகரில்லை என்றே சொல்லவேண்டும். சூப்பர் ஹீரோகளிடம் உள்ள பலவீனமோ, குழப்பமோ தானோஸ்க்குக் கிடையாது. தானோஸைப் போல் ஒரு வில்லன் பாத்திரத்தைத் திரையில் காண்பது அலாதியான அனுபவமாக உள்ளது. தானோஸ் ஒரு கர்மயோகி. விருப்பு வெறுப்பில்லாமல், பிரபஞ்ச நலனை மட்டுமே லட்சியமாகக் கொண்டவர். யார் மீதும் அவருக்குத் தனிப்பட்ட வெறுப்பில்லை. பூபாரத்தைக் குறைக்க பாரதப்போர் அவசியமென காய்களை நகர்த்திய கிருஷ்ணனுக்கும், தானோஸ்க்கும் பெரிய வித்தியாசமில்லை. தன் சுயநலத்திற்காக, தனது அதீதமான சக்தியைத் தானோஸ் எங்கும் பயன்படுத்துவதில்லை. Power comes with responsibility என்பதை எந்த சூப்பர் ஹீரோவையும் விட நன்றாக உணர்ந்து செயல்படுபவர். அதனால்தான் தனது கடமை முடிந்ததும், முதற்காரியமாக, பேராயுதமாக விளங்கும் இன்ஃபினிட்டி கற்களை அழிக்கிறார் தானோஸ்.

திரைக்கதையாசிரியர்களான கிறிஸ்டோஃபர் மார்க்கஸும், ஸ்டீஃபன் மெக்ஃபீலியும் அசத்தியுள்ளனர். ஆக்‌ஷன் ஃபேண்டஸியாய் நினைவில் நிற்கவேண்டிய படத்தை, உணர்ச்சிகரமான காவியமாக்கி உள்ளனர். ‘நீங்க மட்டும்தான் பிரபஞ்சத்தில் இருக்கீங்களா? எனக்கு மற்ற உலகங்களையும் காப்பாத்த வேண்டிய கடமையிருக்கு இல்ல?’ எனக் கேட்கிறார் கேப்டன் மார்வெல். தானோஸின் சொடுக்கினால், பூபாரம் மட்டும் குறைவதில்லை, பிரபஞ்சத்தின் பாதி உயிரினங்கள் கரைந்துவிடும். ஆனாலும், பூமிக்கு அந்நியரான கேப்டன் மார்வெலுக்கு, ‘இது பிரபஞ்ச பிரச்சனையில்லை. மனிதர்களின் முடிந்துவிட்ட பிரச்சனை. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்றளவே டீல் செய்கிறார். ஆக, இது மனிதர்களின் பிரச்சனை மட்டுமே என அவெஞ்சர்ஸ் தனித்து விடப்படுகின்றனர்.

பிளாக் விடோ, ஆன்ட் மேன், கேப்டன் அமெரிக்கா, நெபுலா, ராக்கெட், ஹல்க், ஹாக் ஐ, அயர்ன் மேன், தோர் ஆகியோர் குவாண்ட்டம் வெளிக்குள் நுழைந்து கடந்த காலத்திற்குள் செல்கின்றனர். மிகவும் அட்டகாசமான காட்சிகள் அவை. இரண்டு கேப்டன் அமெரிக்காகள் சந்திக்குமிடம், அயர்ன் மேன் தன் தந்தை ஹோவார்ட் ஸ்டார்க்குடன் பேசுமிடம், ஆத்மாவின் கல்லிற்காக பிளாக் விடோவும், ஹாக் ஐயும் போட்டி போடும் காட்சி, தி ஏன்ஷியன்ட் ஒன்னுடன் ஹல்க் உரையாடுமிடமென படத்தின் ஃபேண்டஸியை உணர்வுபூர்வமாகச் சித்தரித்துள்ளனர். வாவ்.!

அவெஞ்சர்ஸின் கடந்த காலப் பயணம் அட்டகாசம் எனில், எதிர்காலத்திற்கு வரும் தானோஸின் பயணம் ஆர்ப்பாட்டமாய் உள்ளது. மார்வெல் சூப்பர் ஹீரோகள் அனைவரையும் கொண்டு வந்து, தானோஸின் படைகளோடு ஒரு யுத்தக்காட்சி வைத்துள்ளனர். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன், பிளாக் பேன்த்தர், ஃபால்கன், வாஸ்ப் என ஒருவர் பாக்கியில்லாமல் யுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். அனைவரும் மாயாஜாலத்தால் உருவாக்கப்படும் புழுத்துளையில் இருந்து வருவதைப் பார்க்கப் பரவசம் எழுந்தாலும், சூப்பர் ஹீரோகள் எளிய மனிதர்களாய், குடும்பத்திற்காகவும், குடும்பத்தை இழந்த கோடிக்கணக்கான மனிதர்களுக்காகவும் எடுக்கும் துணிகரமான தியாகத்திற்கு முன், அந்த யுத்தக்காட்சி பெரிதும் கவரவில்லை. அதே போல், 3டி எஃபெக்ட்ஸை மருந்துக்கும் உணர முடிவதில்லை.

போர் முடிந்த பின்பும், படம் நிதானமாய் முடிகிறது. வாழ்க்கை என்பது போரையோ, பிரச்சனைகளையோ வெல்வதிலில்லை; மனிதிற்கு அணுக்கமானவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதே! அப்படி வாழ்ந்து, மற்றவர்களும் அப்படி வாழ உதவுபவர்களே சூப்பர் ஹீரோகள்.

பி.கு.: டிஸ்னி இந்தியா, அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதியை டப்பிங் செய்யவைத்து, மார்வெல்லின் அசாதாரணமான ஒரு சூப்பர் ஹீரோக்கு இத்தகைய மாபெரும் துரோகத்தை இழைத்திருக்க வேண்டாம். அந்தத் துரோகத்தையும் மீறி, அயர்ன் மேன் தனது பணியினை நிறைவாகச் செய்துமுடிப்பது சிறப்பு.