Shadow

அயலான் விமர்சனம்

நெடுநாளாக புரொடெக்‌ஷனில் இருந்து, படம் வெளியாகுமா இல்லை கைவிடப்படுமா என்பதான சந்தேகங்கள் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, அவைகளை வெற்றிகரமாக கடந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு வெள்ளித் திரையில் வெளியாகியிருக்கிறார் அயலான்.  ‘இன்று நேற்று நாளை’ என்கின்ற அறிவியல் புனைவு கதையை தன் முதற்படமாக செய்து பெரும் வெற்றி கண்ட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படம். சிவகார்த்திகேயன் நடிப்பில்  பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்தப் படம் என்று படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். படம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்  பூர்த்தி செய்திருக்கிறதா…? என்று பார்ப்போம்.

ஏலியன்ஸ் வகை திரைப்படம் என்றாலே வழக்கமான, அதற்கென்றே அளவெடுத்து தைத்தார் போன்ற ரெடிமேட் திரைக்கதை ஒன்று உண்டு. அதுயென்னவென்றால் ஏலியன்கள் பூமியை தாக்கி அழிக்க வருவார்கள். நம் மனிதர்கள் அவர்களிடம் இருந்து சண்டையிட்டு நம் பூமியை காப்பாற்றுவார்கள். இதனைக் கிண்டல் செய்வது போன்றும், உண்மையைப் பறை சாற்றுவது போன்றும் நம் இயக்குநர் ரவிக்குமார் ஒரு ஒன்லைன் பிடித்திருக்கிறார்.  அது, பூமியை அழித்துக் கொண்டிருக்கும் மனிதர்களிடம் இருந்து பூமியைக் காப்பாற்ற ஒரு ஏலியன் வருகிறது என்பதே. இப்படி ஒரு ஒன்லைனரைப் பிடித்ததோடு மட்டுமின்றி அதனை டிரைலர் காட்சியிலும் “டேய் வழக்கமா நீங்க பூமியை அழிக்கிறதுக்கு அமெரிக்காவுக்குத் தானடா வருவீங்க…? இப்ப ஏண்டா எங்க ஊருக்கு வந்திருக்கீங்க..?  என்று கேட்பதான வசனம் கலந்து க்யூமர் சென்ஸ்யுடன் காட்சி அமைத்திருப்பார்.  அந்தக் காட்சி தான் “அயலான்” திரைப்படத்தின் ஒட்டு மொத்த கதையும்.

திரைக்கதை எப்படி நகர்கிறது என்றால், கொடைக்கானல் பூம்பாறை கிராமத்து பின்னணியில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு,  புழு, பூச்சிகள் மற்றும் பறவைகளை சக உயிராக மதித்து வாழ்ந்து வரும் நாயகன் சந்தர்ப்ப சூழலால் சென்னை வருகிறான்.  அதே நேரம் விண்வெளியில் இருந்து பூமியில் வந்து விழுந்த ஒரு மர்மக் கல்லின் சக்தியால் பல்லாயிரம் மைல் தூரத்தை எளிதாகத் தோண்டி பூமியில் புதையுண்டு கிடக்கும் நோவா கேஸ் என்னும் வாயுவை வெளிக்கொண்டு வர முடியும் என்பதை தெரிந்து கொள்ளும் வில்லன், தன் பரிசோதனையின் சோதனைக் களமாக சென்னையை தேர்ந்தெடுத்து அங்கு வருகிறான்.  அதே போல் பூமியில்  புதையுண்டு கிடந்த சிறிதளவு விஷவாயு வெளியே வந்ததை அறிந்து கொள்ளும் வேற்றுகிரகவாசிகள் பூமி பாதிக்கப்பட்டால் அது தங்கள் கிரகத்தையும் பாதிக்கும் என்று உணர்ந்து, பூமியை ஆபத்தில் இருந்து காக்க தங்கள் குழுவில் இருந்து ஒரு ஏலியனை தேர்வு செய்து பூமிக்கு அனுப்புகிறார்கள்.  அந்த ஏலியன் அதாவது அந்த அயலானும் சென்னைக்கு வந்து சேர்கிறது. இந்த மூவரும் எப்படி சந்தித்துக் கொள்கிறார்கள்.  அதைத் தொடர்ந்து பிரச்சனை எப்படி வளர்ந்து தீர்வினை நோக்கிச் செல்கிறது என்பதை விளக்குகிறது திரைக்கதை.

சிவகார்த்திகேயனுக்கு  ஒரு மாஸ் ஹீரோவிற்குத் தேவையான இயற்கை மற்றும் உயிரின நேசர், அம்மா மீது பாசம் கொண்ட பொறுப்பான பிள்ளை, பெயருக்கு ஒரு காதலி,  சிறுவர் சிறுமியர்களை கவர்வது போல் கொஞ்சம் அப்பாவித்தனமும், பயமும், துடுக்குத்தனமும் நிறைந்த செய்கைகள்,  அயலான் உடன் நட்பு, வில்லனுடன் மோதல், வில்லியாக வரும் இஷா கோபிகரைக் கூட திருப்பி முரட்டுத்தனமாகத் தாக்காமல் தவிர்க்கும் ஆண்மை, இறுதியில் வெற்றி என எல்லாக் கச்சாப் பொருட்களும் கலந்து செய்த ஒரு கதாபாத்திரம்.  அவரின் ஸ்கோரிங் ஏரியாக்களான அப்பாவித்தனம், பயம் மற்றும் துடுக்குத்தனம் போன்றவற்றில் சிறப்பாக ஸ்கோர் செய்கிறார்.  அயலானை ஆபத்தில் இருந்து காப்பதற்கான துடிப்பிலும், பூமியை காக்க வேண்டும் என்கின்ற பொறுப்பிலும் உணர்ச்சிகள் குறைவு.  ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்டு இருப்பதால், மாஸ் மொமண்டுகள் குறைந்து க்யுட் மொமண்டுகள் கூடி இருக்கின்றன.

அம்மாவாக வரும் பானுப்பிரியாவிற்கும், நாயகன் ஒருதலையாக காதலிக்க உகந்த உருப்பொருளாக வரும் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கிற்கும்  கதாபாத்திர வடிவமைப்பிலும், திரைக்கதை பங்கேற்ப்பிலும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது அளப்பரிய சாதனை. ஏனென்றால் அந்தளவிற்குத் தான் இருவருமே பயன்பட்டிருக்கிறார்கள்.  ஏலியன் தொடர்பான கதை என்பதால் நாயகி அறிவியல் பின்புலத்தில் ஆர்வம் உள்ளவளாகவும், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஒரு தொண்டாளராகவும்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்.

காதல் கைகூடுவதற்கு  இவெண்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கும் நண்பர்கள் கூட்டணியாக யோகிபாபு, கருணாகரன் மற்றும் ராகுல் மாதவ் கூட்டணி வந்து போகிறது. இந்தக் கூட்டணியில் யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவருமே தங்களின் பிரத்யேகமான காமெடி ஒன்லைனர்கள் மூலம் நம்மை வசீகரிக்கின்றனர்.  ஏலியனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன் சிறப்பாக நடித்திருக்கிறார்.  அவரின் உடல்மொழியும், நடனங்களும் அயலான் என்னும் வேற்றுகிரக உயிரிக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ‘சித்தா’ சித்தார்த்தின் குரல் அயலானின் உடலுடன் ஒத்துப் போகிறது.  குரலில் எள்ளல், கோபம், வெறுப்பு, இயலாமை, நட்பு என உணர்ச்சிகளைக் கொட்டி காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சித்தார்த்.

வில்லனின் வலதுகையாக வரும் இஷா கோபிகர் பேசுவதை விட, சுட்டுத் தள்ளும் காட்சிகள் அதிகமாக இருக்கின்றது.  வில்லன் சரத் ஹெல்கர் உடல் ரீதியாக ஓகே என்றாலும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கவில்லை.  உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவரின் உடல்மொழி திணறுவது போல் தெரிகிறது. கதாபாத்திர வடிவமைப்பும் , அவரை முன்னிறுத்துவதுமான காட்சிகளும் மெச்சும்படி இல்லை.

ஏ.ஆர்.ஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் பெரிதாக இன்று வரை கவரவில்லை என்றாலும் கூட, பின்னணி இசையில் ஒரு புயலின் கோரத் தாண்டவம், காட்சிகள் வலுவிழக்கும் தருணத்தில் எல்லாம் இசைப்புயலின் பின்னணியிசை வலு கூடுகிறது.

Phantom Fx நிறுவனம்  VFX தொடர்பான காட்சிகளை வடிவமைத்திருக்கிறது.  கிட்டத்தட்ட 4000த்துக்கும் மேற்பட்ட ப்ரேம்கள் VFX  தொழில்நுட்பத்துடன் உருவாகி இருக்கின்றன என்று கூறப்பட்டது.  அவர்களின் உழைப்பு காட்சிகளில் தெரிகிறது.  எந்தவொரு கிராபிக்ஸ் காட்சியும் இது கிராபிக்ஸ் என்பது தெரியாத அளவிற்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.  விண்கலத்தின் மாயப்படிகட்டுகளின் வழியே டாட்டூ என்னும் ஏலியன் இறங்கி வரும் காட்சியும், விண்கல் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் வரும் காட்சியும், தன் உருவத்தை மறைத்துக் கொண்டு ஏலியன் விண்கலத்தை அடைய முன்னேறும் காட்சியும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும் கடைசி க்ளைமாக்ஸ் காட்சியில்  நேப்பியர் பாலத்தில் அடையார் ஆறு தீப்பிடித்து எரியும் பிரம்மாண்ட காட்சி, Phantom Fx நிறுவனத்தின் நேர்த்தியான திறமைக்கு சான்று பகர்கிறது.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் வேற்று கிரகத்திற்கான ஒளிக்கீற்றுகளும், பூம்பாறையின் வெண்பனியும், சென்னையின் புழுதியும் ஒருங்கே சட்டகத்தில் குடிபுகுந்திருக்கின்றன.  ஆராய்ச்சிக்கூடமும், பூமியின் அடியாழ இதயமும் சிறப்பாக அதற்கான வித்தியாசங்களுடன் படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.  வாழ்த்துக்கள்.  ரூபனின் கத்தரிகள் வெகு சிறப்பாக வேலை பார்த்திருக்கின்றன. நீளம் என்று சொல்வதற்கான காட்சிகளே இல்லாத வகையில் வெகு நேர்த்தியாக கட்டிங், ஒட்டிங் செய்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் திரைப்படம், சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம் மேலும் குழந்தைகளும், குடும்பங்களும் பார்க்க விரும்பும் திரைப்படம் என்பதை மனதில் வைத்தே கதை மற்றும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.  விண்கலத்தின் மாயப்படிக்கட்டுகள்,  தொடுதலின் அலைவரிசையின் வழியே ஒரு உயிரியை புரிந்து கொள்வது, அயலானுக்கு இருக்கும் பிரம்மாண்டமான பலம், அயலானை சிறை செய்வதில் இருந்த புத்திசாலித்தனம், நோவா வாயு தொடர்பான பின்புலம், ஏலியனை தேடுவதற்கான மினி ரோபோட்டுகள்,  போன்ற கற்பனைகள் வசீகரிக்கின்றன.

அயலானின் வருகை ஒட்டு மொத்தத்தில் ஒரு கல்லை கைப்பற்றுவதற்கான முயற்சி என்று சுருங்கிப் போவதும், நோவா வாயுவை வெளிக் கொண்டு வந்து, அதன் பின்னர் வில்லன் சாதிக்க நினைப்பது என்ன என்பதான விவரிப்புகளும் அதன் விளைவுகளும் காட்சிகளாக இல்லாதது,  ஏலியனின் வாழ்க்கை முறையோ, அல்லது அவர்களின் திறமைகள் குறித்தோ விளக்கம் இல்லாதது, அதன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட அமினோ அமிலங்களை உட்செலுத்திக் கொண்டதாலயே வில்லன் கதாபாத்திரம் ராட்சச பலம் பெறுவது போன்ற காட்சிகளின் நம்பகத்தன்மை, நாயகனின் கொடைக்கானல் பின்புலம், நாயகியுடனான காட்சிகள்,  புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமியின் எபிசோட் போன்றவற்றில் இருந்த செயற்கைத்தனம், பிற ஹாலிவுட் படங்களில் பார்த்துப் பழகிய காட்சிகள் தவிர்த்து புதுமையாகவோ அல்லது உணர்வுபூர்வமாகவோ, கற்பனையாகவோ காட்சிகள் இல்லாதது, வில்லனுக்கு இருக்கும் பலகீனமான விவரிப்புகள் அற்ற பின்புலம்,  குழந்தைகளுக்கான படம் என்பதால் க்ளைமாக்ஸ் காட்சியில் அரசாங்கம் அந்த திட்டத்தை PAN செய்துவிட்டது என்று குழந்தைகளுக்கு கதை சொவ்லது போலவே கதையை முடிப்பது போன்றவை படத்தின் மைனஸ்கள்.

குழந்தைகள் ஏலியனையும் ஏலியன் வரும் காட்சிகளையும் ரசிப்பது;  ஏலியன் படும் அவஸ்தைகளை கண்டு சிறுவர்கள் கண்கலங்குவது; சிவகார்த்திகேயன், யோகி பாபு மற்றும் கருணாகரனின் ரசனையான காமெடிகள், ஏலியன் தொடர்பான ஆச்சரியமூட்டும் சிற்சில காட்சிகள், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு போன்றவை படத்தின் ப்ளஸ்.

அயலான் – முழுமையாக நம்ம ஆள் என்று ஏற்றுக் கொண்டு அள்ளி அணைக்க முடியவில்லை.

1 Comment

Comments are closed.