Search

பிக் பாஸ் 3: நாள் 79 | ‘சேரப்பா யாரப்பா?’ – லாஸிடம் கவின்

bigg-boss-3-day-79

பிக் பாஸில் காட்டப்படும் உணர்வுகள் போலியானது. அதெப்படி? ஒருத்தருக்கொருத்தர் தெரியாதவங்க, ஒரு வீட்டுக்குள் போன உடனே காதல் வருது, நட்பு வருது, பாசம் வருது. இது ஒரு கேம் ஷோ. எல்லாமே நடிப்பு தான், இதுக்கு போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா எனக் கேட்பவர் ஒருபக்கம். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இருக்கிறவங்களுக்குக் கூட இதே மாதிரியான கேள்விகள் கேட்டுக் கொண்டே தான் உள்ளனர்.

முதலில் இங்கே எழுதப்படுவது அனுமானங்கள் மட்டுமே! ஒவ்வொரு பாத்திரமும் ரியாக்ட் செய்யும் போது, அந்தப் பாத்திரத்தில், அந்தச் சூழ்நிலையில் என்னைப் பொருத்தி, நாம எப்படி நடந்துக்குவோம், என்ன யோசித்திருப்போம், எப்படி ரியாக்ட் செய்வோம் என யோசித்து எழுதுவது தான். அப்படி எழுதறது குறைந்தபட்ச லாஜிக்கோட இருக்கும் போது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. லாஜிக் இல்லையெனில் மாற்றுக்கருத்து வருகின்றது. இப்படி இருக்கலாம், இந்தக் காரணத்துக்காக அந்தக் கேரக்டர் இப்படிச் செய்திருக்கலாம் என எல்லாமே அனுமானங்கள் தான்.

உள்ளே இருக்கிற எல்லோருமே நடிக்கிறாங்க எனச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுவாரசியத்துக்காக சில மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றது. ஆனால் அதற்காக எல்லா உணர்வுகளையும் போலியெனச் சொல்ல முடியாது. நமக்கு ஒரு வேலை கிடைக்கிறது. அவ்வளவு நாள் இருந்த சொந்த ஊரை விட்டு, வேற ஊருக்கு போறோம். புது ஊரு, புது வேலை, புதிய மனிதர்கள், இந்தச் சூழ்நிலைக்கு நாம எப்படி ரியாக்ட் செய்வோம். முதல் நாள் எல்லோரையும் மலங்க மலங்கப் பார்த்துவிட்டு இருந்தாலும், அடுத்த நாள் லன்ச்க்கு ஒரு டீமோட இருப்போம். அடுத்த சில நாளில் அங்கிருக்கிற ஒருவரிடம், ‘இவர் நம்மளுடா’ என தோஸ்த் ஆகிடுவோம். அதே ஆஃபிஸில் எத்தனையோ பேர் இருந்தாலும், ஒரு சீனியர் அண்ணாவிடம் மட்டும், ரொம்ப நெருக்கம் ஆவோம். அவர் என்ன அறிவுரை சொன்னாலும் கேட்போம். காரணமே இல்லாமல், ஒரு சிலர் மேலே வெறுப்பும் வந்திருக்கும்.

யோசித்துப் பார்த்தால் இதெல்லாமே இந்த வீட்டில் நடந்திருக்கு. அதே மாதிரியான உறவுகள், நட்பு, காதல், வெறுப்பு, கோபம் எல்லா உணர்வுகளுமே உண்மை தான். ஒரு சில இடத்தில் மிகைப்படுத்துதல் இருக்கு. ஆனால் அதற்காகப் போலியானது என ஒதுக்கிட முடியாது. ஒருத்தர் ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு நகர்ந்து போகிற சூழ்நிலைக்கு இன்னொருத்தர் குடம் குடமா அழுகிறது இல்லையா? அந்த மாதிரி தான். இதையெல்லாம் தாண்டி இது ஒரு கேம் ஷோ என எல்லோருக்கும் தெரியும். அதற்காக 24 மணி நேரமும், ஒருத்தரால் நடிக்க முடியாது.

‘கோடான கோடி’ பாடலுடன் சோம்பலாக விடிந்தது நாள்.

‘காப்பி குடிச்சுட்டீங்க இல்ல, வாங்க, போய் வேலையை பார்க்கலாம்’ என கேப்டன் கூப்பிட, ‘இதென்னடா புது பழக்கம்?’ என சாண்டி வித்தியாசமாகப் பார்த்தார். ‘இத்தனை நாளா நீ இதை செய்யலையே! இப்ப மட்டும் என்ன புதுசா?’ எனக் கேட்ட உடனே கேப்டனுக்குக் கோபம் வந்துவிட்டது. டபால் என எழுந்து போய்விட்டார். சாண்டி கேட்டதில் எந்தத் தப்பும் இல்ல. இதற்கு முன், வெசல் வாஷிங் டீமில் இருக்கும் பொழுதெல்லாம் யாராவது வந்து கூப்பிடுகின்ற வரைக்கும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். இப்ப கேப்டன் ஆன உடனே, ‘எதுக்கு இந்த சீனு?’ என்று தான் சாண்டி கேட்டாரு. ‘நீங்க ஒன்னும் வர வேண்டாம்’ எனக் கோபமா சொல்லிவிட்டுப் போக, பின்னாடியே போன சாண்டி, ‘சாரி’ கேட்டுட்டார்.

ஆனா கவின் சும்மா இருப்பாரா? ‘எதையாவது சொல்லி அவளை ஹர்ட் பண்ணிட்டே இருக்கே!’ என ஆரம்பித்தார். என்னமோ புகையுது. பார்க்கலாம்.

யாரும் குளிக்கவே இல்லை, ஒரு அனவுன்ஸ்மென்ட் வருது. படிக்க ஆரம்பிக்கும் போதே பாய்ஸ் டீம் உருண்டு புரண்டு மகிழ்ந்தனர். வனிதாவும், ஷெரினும் வினோத ஜந்துக்களைப் பார்க்கிற மாதிரி உட்கார்ந்திருந்தனர். பிக் பாஸ் வீட்டில் வழக்கமாக நடத்தப்படுற “ப்ரீஸ்-ரிலீஸ்” டாஸ்க் இந்த வாரம். வீட்டில் இருந்து யாராவது வருவாங்க என செம்ம மகிழ்ச்சி எல்லோருக்கும். இது எப்படி சாண்டி டீமுக்கு முன்னாடியே தெரிந்தது என்று தான் நமக்கு தெரியவில்லை. ஒருவேளை இந்த செட்டிங் போட வருபவர் யாராவது சொல்லியிருக்கலாம். இல்லையெனில் போன இரண்டு சீசனில் நடந்ததால் எதிர்பார்த்து காத்திருந்தார்களோ என்னவோ?

எல்லாம் குதித்துக் கொண்டிருக்க, அப்பவே “ப்ரீஸ்” சொன்னார் பிக் பாஸ். சும்மா சொல்லக்கூடாது, அந்த மொமென்ட்ல எல்லோருமே நன்றாகச் செய்தார்கள். சோஃபா மேலே ஏறி நின்று கொண்டிருந்த சாண்டியை மட்டும் ரிலீஸ் பண்ண, மொத்த பேரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார் சாண்டி. அடுத்து எல்லோரையும் ரிலீஸ் பண்ணின பிக் பாஸ், சாண்டியை ப்ரீஸாக்கிட்டார். வைத்துச் ச்எய்துவிட்டனர். இந்த சீசனோட ஜாலியான மொமன்ட்ஸில் இதுவும் ஒன்று.

அடுத்த ப்ரீஸ் மொமன்ட்டில் ஆராரிராரோ பாட்டு போட்டு நிற்க வைக்க, முகினோட அம்மா உள்ளே வந்தார். ரிலீஸ் சொல்றதுக்கு முன்னாடியே எல்லோருமே ரிலீஸ் ஆகிவிட்டனர். ஒரு சென்டிமென்ட் சினிமா ஓட ஆரம்பித்தது. எல்லோருக்குமே சந்தோஷம், சேரனும் கண்ணைத் துடைத்துக் கொண்டார். எல்லோர் கூடவும் நன்றாகப் பேசினார். கொஞ்ச நேரம் கழித்து, கன்ஃபெஷன் அறை வழியாக முகினோட தங்கையும் வர, முகினுக்கு டபுள் சந்தோஷம். ரொம்ப நேரம் இருந்த மாதிரி ஒரு ஃபீல். வந்த வேலையை மட்டும் பாரு என அட்வைஸும் கிடைத்தது முகினுக்கு.

மறுபடியும் ப்ரீஸ் சொல்லி, அவர்களைக் கிளம்பச் சொல்ல, மொத்த பேரும் தானே ரிலீஸ் ஆகிவிட்டனர். கண்டிப்பான இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கவேண்டும். இந்தத் தடவை சர்வ சாதாரணமாக விதிமீறல் செய்கின்றனர். ஆனால் தண்டனைகளே இல்ல.

அடுத்து இரண்டு டீமாக பிரிந்து ஒரு கேம் விளையாடினர். அடுத்து பிக் பாஸ் டீம் செய்த வேலை தான் டாக் ஆஃப் தி டே. ஹவுஸ்மேட்ஸில் 3 பேரைத் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்கலாம் என சேரனிடம் சொல்ல, அவரும் எழுதி கொடுத்து அனுப்புகிறார்.

‘என்னை ஞாபகம் இருக்கா? என்னை நினைச்சு அழுதியா? இல்லேன்னா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் போது கண்ணைக் கசக்கிடும்மா, இல்லேன்னா இவங்க விடமாட்டாங்க’ என முதல் கேள்வியே லாஸுக்குத்தான்.

அடுத்த கேள்வி கவினுக்கு. ‘வணக்கம் தம்பி’ என ஆரம்பித்து. ‘வெளிய போய் பேசிக்கலாம்ன்னு சொன்னப்போ சரின்னு சொன்னியே, ஆனா இப்ப மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிட்டியே இது நியாயமா?’ எனக் கேட்டது தேவையில்லாத ஆணி தான். இருந்தாலும் என்ன செய்வது?

அதற்குப் பதில் சொன்ன கவின், ‘அதை நாங்க நேத்தே க்ளியர் பண்ணியாச்சு, ஸ்டாப் பண்ணியாச்சு. நீங்க அதையும் பார்த்துடுங்க’ எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அடுத்த கேள்வி வனிதாவுக்கு. ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது?’ எனக் கேட்க, ‘அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தெய்வமன்றோ!’ என வனிதா ஒரு பாட்டே பாடிட்டாங்க.

‘இதெல்லாம் எப்படா நடந்தது?’ என வனிதா கேட்க, ‘நேத்து தான்’ என யாரோ சொல்ல, ‘அதெப்படி முந்தா நேத்து போனவரு, நேத்து ப்ரோகிராமை பார்த்துட்டு, இன்னிக்குக் கேள்வி கேக்க முடியும்?’ என ஷார்ப் சரோஜாவாகக் கேள்வி கேட்டார் வனிதா. ‘அப்ப சீக்ரெட் ரூம்ல இருக்காரா?’ எனக் கவின் சொல்ல, ஏன்ய்யா பிக் பாஸ் டீம், இவ்வளவு தானய்யா உங்க புத்திசாலித்தனம்?

‘நான் இங்க இருந்தா என்ன செய்யப் போறேனோ, அதையே தான் வெளிய போய் செய்யப் போறேன். அதுல யாருக்கு என்ன பிரச்சினை?’ என சாண்டியிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் கவின். ஆக மொத்தம் கேம் விளையாடும் ஐடியாவே இல்லை கவினுக்கு. இரண்டு பேருக்கும் இங்க ஒரு வேலை இருக்கு. அதை விட்டுவிட்டு நான் ஃப்ரீ டைமில் தானே லவ் பண்றோம் எனச் சொல்வதெல்லாம் போங்காட்டம். ‘இங்க கேம் விளையாடு, வெளிய போய் என்னத்தையோ பண்ணித் தொலை’ என்று தான் எல்லோரும் சொல்கின்றனர். ஆனா அப்படி சொல்றவங்க எல்லோரும் தன் காதலுக்கு எதிரி என நினைத்துக் கொள்கிறார்.

லாஸ் கூட மறுபடியும் கதவருகே உட்கார்ந்துவிட்டார். ‘இந்தா புள்ள, நீயும் நானும் காதலிக்கறோம், அதைப் பத்தி உன் வீட்ல பேசணும், இல்ல என் வீட்ல பேசணும், உன் ப்ரெண்ட்ஸ் பேசணும், இல்ல என் ப்ரெண்ட்ஸ் பேசணும். இந்த சேரப்பா யாரு, குறுக்கப் புகுந்து குட்டையைப் குழப்ப?’ என ரொம்ப டீசன்ட்டாகக் கேட்டுக் கொண்டிருந்தார் கவின். ‘வெளிய போய் பேசிக்கலாம்னு முடிவு செஞ்சாச்சு இல்ல? இங்க கேம் விளையாடுவோம்’ என லாஸ் சொல்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சேரன், ‘அந்தப் புள்ளைக்கு பைத்தியம் தான் பிடிக்கப் போகுது’ எனப் புலம்பிக் கொண்டிருப்பதோடு நாள் முடிகிறது. இந்தப் பிரச்சினையை வைத்தே கவினைக் காப்பாற்ற முடிவு பண்ணிவிட்டாகள் போல. வேற ஒன்றும் தோன்றவில்லை.

மகாதேவன் CM