Shadow

பொம்மை விமர்சனம்

Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை.

ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, பொம்மையைத் தன்னோடு வைத்துக் கொள்ள எஸ்.ஜே. சூர்யா போராட, எப்படியான முடிவு அமைந்தது என்பதே படத்தின் கதை.

எஸ்.ஜே. சூர்யா நல்ல நடிகர் என்பதைப் பல படங்களில் நிறுவியிருக்கிறார். அதே போல் கொஞ்சம் ஓவராக நடிப்பார் என்பதையும் சில படங்களில் நிறுவியிருக்கிறார். அந்தச் சில படங்களில் ஒன்றாக இந்தப் படமும் அமைந்தது ரசிகனின் துரதிர்ஷ்டம். ஒரு சில காட்சிகளைத் தவிர நிறைய காட்சிகளில் அவரது நடிப்பு ஓவராகவே தெரிகிறது. பிரியா பவானி சங்கர் மெழுகு பொம்மை போலவே வருகிறார். ஒரு பொம்மை உயிர் பெற்றால் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறார். ஆனால் அவரது நடிப்பில் பெரிய ஆழமில்லை. காரணம் அவர் கதாபாத்திரத்திற்கான பின்புலம் சரியாக அமைக்கப்படவில்லை. சாந்தினி தமிழரசன், அவரால் இயன்றளவுக்கு இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். மற்றபடி யாருமே சொல்லிக் கொள்ளும்படி சோபிக்கவில்லை.

இந்தப் படத்திற்கு யுவன் தான் இசை அமைத்தாரா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே பெருத்த ஏமாற்றம். ஒரே ஆறுதல் இளையராஜா இசையில் வெளியான “தெய்வீக ராகம்” என்ற பாடல் மட்டுமே. அந்தப் பாடலை எதுவும் செய்யாமல் அப்படியே பயன்படுத்தியுள்ளது சிறப்பு.

எப்படி இசையில் யுவன் ஏமாற்றினாரோ, அதே போல் திரைக்கதையில் ராதாமோகன் ஏமாற்றிவிட்டார். கொலை விசாரணை, எஸ்.ஜே. சூர்யாவின் மனப்பிறழ்வு, பிரியா பவானி சங்கருக்கான கதை என படம் வெவ்வேறு தடத்தில் சென்று குழப்புகிறது. எஸ்.ஜே. சூர்யா –
பிரியா பவானி சங்கரின் பப்பி நட்பு எப்படி உடைந்தது? அதன் பின் ஏன் சேர்வதற்கான முயற்சிகளை அவர்கள் செய்யவில்லை? பொம்மையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு நிறைய ஈசியான வழிகள் இருந்தும் ஏன் எஸ்.ஜே. சூர்யா அதைச் செய்யவில்லை? இப்படி ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள் வேறு குடைகின்றன.

பார்த்துப் பார்த்துச் செய்தாலும் சில பொம்மைகள் அதன் வசீகரத்தை இழந்துவிடுவது இயல்பே! அத்தகையதொரு பொம்மையாகிவிட்டது இப்படம்.

– ஜெகன் கவிராஜ்