Shadow

பூமர் அங்கிள் விமர்சனம்

நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS.

சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை.

யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதியுள்ளார் தில்லை.

மார்வெல் மட்டுமல்லாமல் டிசியையும் (DC Comics) பாத்திரங்களையும் படத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். சேஷுக்கு ஜோக்கர் ஒப்பனையும், ஓவியாவிற்கு வொண்டர் வுமன் ஒப்பனையும் போட்டுள்ளனர். ஓவியாவின் ஒப்பனை மட்டுமே ஏற்கும்படி உள்ளது. ஹல்க் ஆக வரும் ரோபோ ஷங்கரைப் பொறுத்துக் கொள்ள பயங்கர மனோதிடம் தேவைப்படுகிறது. ஸ்பைடர் மேனாக KPY பாலாவும், தோராகத் தங்கதுரையும் வருகின்றனர். ஃபன் என்ற பெயரில் நல்லதொரு மொக்கை போட்டுள்ளனர்.

ரஷ்ய உளவாளியாக நடித்துள்ள வெளிநாட்டுப் பெண், மாடிப்படியில் இருந்து இறங்கி வருகிறார், மேடை நாடகத்தில் ஓர் ஓரமாக அவுட் போவதுபோல் வெளியேறுகிறார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான கதாபாத்திரங்கள் வசனம் பேசிவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஃப்ரேமின் ஏதோ ஓர் ஓரம் போய் மறைகின்றனர். 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்ச சூப்பர் ஹீரோவான ஷக்திமேனாக எம்.எஸ்.பாஸ்கரும் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.

இறுதியாக பூமர் அங்கிள் தான் மதன் பாபின் நவீன ஆயுதமென்றும், அதைக் கடத்தச் சொன்னது யாரென்பதையும் காட்டி சஸ்பென்ஸாக முடித்துள்ளனர், அடுத்த பாகத்திற்கான லீடுடன்!