கேரளத்தில் நாட்டார் கதைகள், தமிழின் தொன்மையைப் போலவே மிகப் பிரபலமானதாகும். 18 ஆம் நூற்றாண்டில், கேரளத்தில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) என்பவர். மக்களிடையே பேசப்பட்ட நாட்டார் கதைகள் அனைத்தையும் ஐதீயமாலா (Aithihyamala) என்ற தொகுப்பாகக் கொண்டுவந்தார். எட்டு பாகங்களில் சுமார் 126 கதைகள், இந்தத் தொகுப்பில் இருக்கிறது. இன்றைக்கும் இந்தத் தொகுப்பு கேரளாவில் மிகப் பிரபலமானவை. இந்தக் கதைகள் அனைத்தும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் சம்பவங்கள், மந்திரவாதிகள் மற்றும் பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்து செல்வங்களைக் காக்கும் அழகு மிக்க பெண்கள், யோகக்கலை, மன்னர்கள் மற்றும் களரிப்பயிற்று வல்லுநர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யானைப்பாகன்கள் மற்றும் தந்திர நிபுணர்கள் என பலத்தரப்பட்ட மனிதர்கள் பற்றி அமைந்துள்ளன. இந்தக் கதைகளில் ஒன்றாக குஞ்சாமோன் போற்றி எனும் மந்திரவாதி பற்றிய கதையும் அமைந்திருக்கிறது. குட்டிச்சாத்தனை வசியப்படுத்தி அதிகாரத்துடன் வாழ்ந்தவர் என்று பேசப்பட்டவர். அந்தக் கதையை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, பிரமயுகம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரமயுகம் என்றால் மனப்பிறழ் நிலையுள்ள உலகம் என்று அர்த்தம் வருகிறது. கலியுகத்தின் முடிவில் மக்கள் பித்துப்பிடித்து, எது சரி, எது தவறு என்று தெரியாமல் மனப்பிறழ்ச்சி அடைவார்கள். அந்த நிலையை இந்தப் படத்தின் கதைக்களத்திலும் காணலாம். மிகவும் பொருத்தமான தலைப்பு. மலையாளத் திரைப்பட உலகில் மாந்த்ரீகம், மாய சக்தி போன்றவை சார்ந்த படங்கள் அவ்வப்போது வரும். இந்தப் படத்தைப் பார்க்கும் போது, கடந்த வருடம் வெளிவந்த ‘குமாரி’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. ஆனால் மேக்கிங் மற்றும் படத்தின் தீவிரத்தைக் காணும் போது இந்தத் திரைப்படம் உச்சத்தில் அமைந்திருக்கிறது. தமிழில் ஹாரர் படங்களை நகைச்சுவை கலந்து எடுத்து ரொம்ப அசிங்கப்படுத்திவிட்டார்கள். உண்மையான ஹாரர் படங்கள் என ஹாலிவுட்டின் ‘காஞ்சுரிங்’, ‘நன்’, ‘அனபெல்’ போன்றவை ஒரே டெம்ப்ளேட்டில் வெளிவந்து, ஒரு வகை க்ளிஷேவாக மாறிவிட்டன. என்னைப் பயமுறுத்திய ஹாரர் படங்களில் ஹிந்தியில் வெளிவந்த ‘தும்பாட்’, தென்கொரியப் படமான ‘வெய்லிங்’ முக்கியமானவை. ஜப்பானிய படமான ரிங்கு போன்றவை நினைவுக்கு வருகிறது. அந்த வரிசையில் பிரமயுகத்தையும் தாராளமாக வைக்கலாம்.
குட்டிச்சாத்தன் கேரக்டர், கேரள மலபார் பகுதியில் இன்றும் புழங்கிவரும் நாட்டார் வழக்காக இருக்கிறது. உயர்வகுப்பு நம்பூதிரிக்கும் ஒரு புலையர் இனப் பெண்ணுக்கும் பிறந்த, ஊரார் ஒதுக்கி வைத்த நபராக குட்டிச்சாத்தன் நம்பப்படுகிறார். ஏவல், சூனியம் போன்ற இருள் – மாந்த்ரீகங்களுக்கு துணை போகும் சக்தியாக குட்டிச்சாத்தன் கருதப்படுகிறது. கேரளத்தின் மலபார் – வயநாடு பகுதியில் இன்றைக்கும் குட்டிச்சாத்தன் தெய்யம் எனும் சடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நம்பூதிரி ஒருவர் தனது தீவிரமான தவத்தின் பயனால் வராஹியிடமிருந்து பரிசாகக் குட்டிச்சாத்தனைப் பெறுவதாகக் காட்டப்படுகிறது.
இந்தப் படத்தில் வெறும் மூன்றே மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். மேலும் இரண்டு கதாபாத்திரம், இரண்டு காட்சிகளில் வருகிறார்கள். காட்டுக்கு நடுவே ஒரு பாழடைந்த கேரள தரவாட்டு அரண்மனை. மொத்தப்படத்தையும் அங்கேயே எடுத்திருக்கிறார்கள். யட்சி, குட்டிச்சாத்தான், மந்திரவாதி, அமானுஷ்யம் போன்றவற்றைக் கலந்து தரமான சம்பவத்தைத் திரையில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். இது இவரது மூன்றாவது படம். மூன்றுமே ஹாரர் ஜானர் படம்தான் என்றாலும், இந்தப் படத்தில் அவரது படைப்பின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். படம் முழுக்க முழுக்க கருப்பு – வெள்ளையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் படத்தின் கதாபாத்திரங்களுடன் ஒன்ற உதவுகிறது. வண்ண திரைப்படம், பார்வையாளர்களிம் கவனத்தைத் திசைதிருப்பும் வல்லமையைக் கொண்டது. கூடுதலாக, கதை நிகழும் 17 ஆம் நுற்றாண்டு காலக்கட்டத்தை பிரதிபலிக்கக் கருப்பு – வெள்ளை உதவுகிறது. நம்மையும் கதைக்குள் சிக்கவைத்து ஒரு வித பதற்றத்தை அளிக்கிறது. கருப்பு – வெள்ளையில் படம் எடுக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பான முடிவு.
நாட்டில் ஏற்படும் உள்நாட்டுக் கலவரம், போர்ச்சுகீசியர் வருகை ஆகியவற்றால் மக்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். தேவன் என்பவன் அரசவைப் பாடகன். பாணனான தானும் விற்கப்படுவோம் என்று பயந்து தேவனும் அவனது நண்பன் கோராவும் காட்டு வழியாக வேறு ஊருக்குச் செல்லத் திட்டமிடும் போது, ஓர் இரவு காட்டிலேயே தங்கும் நிலை ஏற்படுகிறது. கோரா, அந்தக் காட்டில் ஒரு யட்சியின் அழகில் மயங்கி அவள் பின்னால் சென்று அவளால் கொல்லப்படுகிறான். தேவன் அங்கிருந்து தப்பித்து, அந்தக் காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழடைந்த அரண்மனைக்குள் செல்கிறான். அங்கு கொடுமன் போற்றி என்பவரும், அவரது சமையல்காரனும் இருக்கிறார்கள். கொடுமன் போற்றி, தேவனின் பாடலில் மகிழ்ந்து அங்கேயே தங்கிக் கொள்ளச் சொல்கிறான். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கம் தேவன், அந்த வீட்டின் அமானுஷ்யங்கள் பற்றித் தெரிய வரும் போது அங்கிருந்தும் தப்பிக்க நினைக்கிறான். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. கொடுமன் போற்றி – அங்கிருக்கும் சாத்தான், அந்த சமையல்காரன் என பல அடுக்குகளில் குழப்பமும் பயங்கரமும் சூழ்ந்துகொள்கிறது. அதிலிருந்து தேவன் விடுபட்டானா என்பதே மிச்சக் கதை.
படத்தின் ஒளிப்பதிவு, கலை, பின்னணி இசை ஆகியவை உச்சநிலையைத் தொட்டுள்ளன. அதே போல வசனங்கள், ரொம்பக் கூர்மையாக உள்ளன. சமகால சிக்கல்களை மிக அழகாகக் கோர்த்து எழுதப்பட்டிருப்பது நல்ல புத்திசாலித்தனம். இவற்றை எல்லாம் விட படத்தின் உயிர் என நான் கருதுவது, கொடுமன் போற்றியாக நடித்திருக்கும் மம்முட்டியும் அவருக்கு இணையாக தேவன் கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கும் அர்ஜுன் அசோகனும். ‘மிரட்டிட்டாங்க’ என்று சொல்வது கூட சற்று குறைவான பாராட்டு தான். மம்முட்டி, இந்த 72 வயதிலும் தனது மெகாஸ்டார் பிம்பம் பற்றிக் கவலைபடாமல், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ’காதல் – த கோர்’ போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதன் தொடர்ச்சியாக, இருண்மை பொருந்திய இந்தப் பாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார். அவரது அலட்சியமான சிரிப்பும் உடல்மொழியும் காலத்துக்கும் நிலைத்திருக்கும். குறிப்பாக தேவனை தன்வயப்படுத்தும் அந்த பகடை ஆட்டத்தில் காட்டிய முகபாவங்கள், பேய் நடிப்பு என்பார்களே அதையும் தாண்டி, பார்வையாளர்களை பிரமை கொள்ளச் செய்யும் பேய் தாண்டவமாக இருக்கிறது. ஹாரர் பிரியர்கள் தவறவே விடக்கூடாத படம்.