Shadow

பிருந்தாவனம் விமர்சனம்

இயக்குநர் ராதாமோகனிடமிருந்து மீண்டுமொரு ஃபீல் குட் படம்.

கேட்க முடியாததாலும், பேச முடியாததாலும், தனிமையைக் குறித்த இருப்பியல் சார்ந்த அகப் பிரச்சனையில் உழல்கிறார் அருள்நிதி. அதிலிருந்து அவரது ஆதர்சமான நகைச்சுவை நடிகர் விவேக், அருள்நிதியை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை.

படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்காகவே தோன்றிக் குணச்சித்திர நடிப்பில் கலக்கியுள்ளது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால், பிருந்தாவனம் – ‘விவேக் மயம்’ என்றே கூறவேண்டும். மரண நாளை எண்ணிக் கொண்டிருப்பவர், நான்கு வயது மகனைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர், தனிமையைக் கண்டு மிரண்டு அனுதாபத்தை எதிர்பார்க்கும் இளைஞர், மகனை இழந்து விட்ட துக்கத்தை மறைக்கும் கலைஞர் என படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உப கதை உள்ளது சிறப்பு. படத்தின் பலமும் பலவீனமும் கூட அதுவே!

கதாபாத்திரங்களுக்கென ஒரு கதை இருப்பது பலம் என்றால், படம் ஒரு மைய இழையில் பயணிக்காதது பலவீனம். தனக்கு இன்ன பிரச்சனை என அருள்நிதி சொல்லும் விஷயம் பார்வையாளர்கள் மீது போதுமான அழுத்தம் தரவில்லை. அவரது பயமும் பதற்றமும் சரியாகக் கடத்தப்பட்டு இருந்தால், ‘மொழி’ போல் ஒரு மறக்கவியலாப் படமாக பிருந்தாவனமும் அமைந்திருக்கும். படத்தில் அத்தகைய கணங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த படமாகப் பாதிப்பைத் தரத் தவறி விடுகிறது.

வெண் பனி விலகினாலோ, மணி அடித்தாலோ, பல்ப் எரிந்தாலோ, ராதாமோகனின் கதாபாத்திரங்களுக்கு காதல் சமிக்ஞை ஏற்படும். இப்படத்தில், நூற்றுக்கணக்கான வெண்ணிற பறவைகள் நாயகன் நாயகிக்கான காதல் சமிக்ஞை. சந்தியாவாக நடித்திருக்கும் தான்யாவிற்குச் சுவாரசியமான கதாபாத்திரத்தை அளித்துள்ளார். தான்யா கலக்கியுள்ளார். அருள்நிதியையும் விவேக்கையும் மீறி, தன் நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அருள்நிதியை வம்புக்கு இழுக்கும்போதும், தன் காதலை நாயகன் முகம் பார்த்துச் சொல்லும் பொழுதுமென தான் வருகின்ற எல்லாக் காட்சிகளையும் நிறைவாகத் தன் பங்கை ஆற்றியுள்ளார்.

வர்க்கியாக ‘டவுட்’ செந்தில் நடித்துள்ளார். நாயகனை விட அழகாக இருக்கிறார். வர்க்கி என்ற அந்தக் கதாபாத்திற்கு ஏன் பெயர் வந்தது என்ற காரணமும் சுவாரசியம். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான எம்.எஸ்.பாஸ்கர்க்கு மிகவும் குறைவான காட்சிகள்தான் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டகத்துக்குள் நின்று, தன் கதாபாத்திரத்தின் கதையைப் பேசியே உணர்த்தி விடுகிறார்.

பாடல்கள் எதுவும் மனதில் நிற்கும் ரகமில்லை எனினும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்தை ரசிக்க உதவியுள்ளது. ஊட்டி என்றால் புகையைப் பறக்க விடவேண்டுமென்ற இலக்கணத்தைக் கணக்கில் கொள்ளாமல், ஒளிப்பதிவாளர் விவேகானந்த் பச்சைப் பசேலென ஊட்டியைக் காட்டியுள்ளது ‘பிருந்தாவனம்’ எனும் தலைப்பிற்குப் பொருந்துகிறது.