Shadow

பெர்முடா | நாவல் விமர்சனம்

கேபிள் சங்கரின் பெர்முடா நாவல், மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுகிறது. மூன்று ஜோடிகளிலுமே ஆண் மூத்தவராகவும், பெண் இளையவராகவும் உள்ளார். பெர்முடா எனும் தலைப்பினை ஒரு குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பொருந்தாக் காமம் எனும் கவர்ச்சியான ஈர்ப்பில் அந்த ஜோடிகள் சிக்குகின்றனர். அந்தப் பொல்லாத ஈர்ப்பு அவர்களைத் தன்னுள் இழுத்துப் புதைத்துக் கொள்கிறதா அல்லது அந்த ஈர்ப்பிலிருந்து லாகவமாய் வெளியேறி விடுகின்றனரா என்பதுதான் நாவல்.

பொருந்தாக் காமத்திற்குத் தொல்காப்பியர் சூட்டும் பெயர் “பெருந்திணை.” அதை மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். அதில், இரண்டாம் வகையான ‘இளமைதீர் திறம்’ என்பதில்தான் நாவலின் அச்சாணி சுழல்கிறது. இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல் என்பதே ‘இளமை தீர் திறம்’ ஆகும். ஆனால் ஒருவரின் வயதைக் கொண்டு இளமை தீர்ந்தது என எப்படிச் சொல்ல முடியும்? வயதைக் கொண்டு பருவ நிலைகளை வகுத்தவர்கள், 30-ஐத் தாண்டினாலே பேரிளம் பெண், முதுமகன் என அடக்கமாக நிறுத்திக் கொண்டனர்.

கிழவன், முதியவன் என்பதற்கான வயது வரையறையைத் தமிழிலிக்கியம் நிர்ணயிக்கவில்லை. தோற்றம் கொண்டோ, ஓய்வு பெறும் வயதினைக் கணக்கிட்டு நாமாக முடிவுக்கு வருவதுதான் அவை. இந்த நாவலைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்கள் தன் மகள்/மகன் வயதுள்ள பெண்களிடம் காமம் கொள்கின்றனர். அந்தப் பொருந்தாக் காமம் அவர்களை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறது, என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பதை விவரிக்கிறது நாவல். பெரும்பாலும் உரையாடல்களின் மூலமாகவே கதை விரிகிறது.

bermuda-novel-reviewஇலக்கியம் என்றாலே கெட்ட வார்த்தை என நினைப்பவர் கேபிள் சங்கர். படிப்பவனுக்கு போர் (bore) அடிக்காமல் சுவாரசியத்தைத் தக்க வைப்பது மட்டுமே அவரது எழுத்தின் நோக்கம். அது சினிமா வியாபாரம் எனும் அபுனைவு நூலாக இருந்தாலும் கூட, ஜனரஞ்சகமாக எழுத்தைப் படைப்பதில் கவனமாக இருப்பார். அதுவே, காமத்தைப் பிரதானமாகப் பேசும் நாவல் என்றால் சொல்லவும் வேண்டுமா? அதிலும் குறிப்பாகப் பொருந்தாக் காமம் என்பதே ஒரு தனி ஆர்வத்தை உண்டாக்கவல்லது. இந்நாவல், காமம் மனிதனை எப்படி மூழ்கடிக்கிறது என்றும், குடும்ப அமைப்பு மனிதனுக்கு எப்படி அரணாகவும் எமனாகவும் மாறுகிறது என்பதையும் விலாவரியாகப் பேசுகிறது.

மனிதனை உள்ளுக்குள் இருந்து ஆட்டுவிக்கும் அகக்காரணியாகக் காமம் இருந்தால், வெளியில் இருந்து உருக்குலைக்கும் புறக்கணியாகப் பணம் உள்ளது. இளமை தீர்ந்த பிறகு, ராமசுப்புவிற்கும் சாம்பசிவராவிற்கும், அவர்களிடமுள்ள பணம், காமத்தில் புது அத்தியாயம் தொடங்க உதவுகிறது. கல்லூரிப் படிப்பைத் தொடங்கும் திவ்யாவுடனான உறவு, ராமசுப்புவை என்னவாக மாற்றுகிறது என்பதுதான் பொருந்தாக் காமத்தின் பின்விளைவைத் துல்லியமாகப் பேசுகிறது. இந்த அத்தியாயத்தில் வரும் சங்கர் எனும் பாத்திரம், படம் முழுவதும் புரட்டி அடித்துவிட்டு க்ளைமேக்ஸில் காஷ்மீர் பயங்கரவாதியிடம் கணிவோடு பேசும் கேப்டன் விஜயகாந்தைப் போல், ராமசுப்புவிடம் பேசி சுபமாய் நாவலை முடிக்க உதவுகிறது.

குடும்ப அமைப்பில், பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவது உலகம் முழுவதும் நடப்பது. ஆனால், அதற்கு நிகராக ஆண்களும் சாதுரியமாகச் சுரண்டப்படுகிறார்கள் (இருபால் ஒப்புமையில், இதன் சதவிகிதம் குறைவாக இருக்கலாம்). சாம்பசிவராவை அவரது மனைவி தமயந்தியும், மனைவியின் பிறந்து வீட்டுக் குடும்பமும், அவரிடமுள்ள பணத்திற்காக அவரை அடக்கி, அவமானப்படுத்தி, அலைகழித்துப் படாதபாடு படுத்துகின்றனர். அதையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த சாம்பசிவராவ், எதேச்சையாகக் கிடைக்கும் விலைமாது பிலோமினாவின் நட்பில் ஒரு திடீர் வசந்தத்தை உணர்கிறார். அதை உணரும் தமயந்தி, சாம்பசிவராவின் மூக்கணாங்கயிறை இறுக்குகிறார். அந்தக் குற்றவுணர்வு தமயந்தியைத் தூங்கவிடாமல் செய்வதுதான் பரிதாபம்.

பதிமூன்று படங்கள் இயக்கிய 48 வயதாகும் சுரேஷ்வருக்கும், 32 வயதான நித்யாக்கும் இடையே பரஸ்பர sapiosexual relationship அன்னிச்சையாய் அழகாய் மலர்கிறது. வயதின் அளவிலும் சரி, உறவின் அடிப்படையிலும் சரி, அவர்களுக்கிடையேயான புரிதலிலும் சரி, சுரேஷ்வர் – நித்யா இணையைப் பெருந்திணைக்குள் வைக்கமுடியாது. புத்தகத்தைப் பற்றிய குறிப்பில், இந்த இணையையும் கேபிள் சங்கர், பொருந்தாக் காமத்திலேயே கொண்டு வருகிறார். மணவுறவுக்கு அப்பாற்பட்ட (extra-marital) என்பதால் பொருந்தாக் காமம் என முடிவு செய்துவிட்டாரோ என்னவோ? திருத்தியமைக்கப்பட்ட சட்டவிதிகளின்படி, இது ஏற்புடைய ஆரோக்கியமான உறவேவாகும்.

எல்லா அத்தியாயங்களின் தொடக்கத்திலும், ஆல் பர்ப்பஸ் அங்கிளான (APU) விமலாதித்தன், பல பெண் profile-களின் இன்பாக்ஸ்க்குச் சென்று, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தித்யன் போல் நூல்விட்டு முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார். அவருக்குக் கிடைக்கும் சில நேரடிப் பதில்கள் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜமென்ற அவரது டீலிங், மையக் கதைக்கு எந்த உதவியையும் செய்யாவிட்டாலும், எல்லா வகையான காமங்களின் புதிய தோற்றுவாயாகச் சமூக ஊடகங்கள் பெருகி வருகின்றன என்பதை அழுத்தமாகச் சுட்டியுள்ளார் கேபிள் சங்கர். 281 பக்க நாவல், காமத்தை மட்டும் பேசாமல், பிறரை உபயோகப்படுத்திக் கொள்ளும் மனிதனின் சந்தர்ப்பவாதத்தையும், சக மனிதரைத் தன் ஆளுகைக்குக் கீழ் கட்டுபடுத்தத் துடிக்கும் மனித மனதின் வன்மத்தையும் விவரிக்கிறது.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெர்முடா – Kindle Link