சீராகச் செல்லும் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் உலுக்கும் சம்பவம் ஏற்படும் வரை, நாம் வாழும் வாழ்வின் பொருளென்ன என்ற தத்துவார்த்த கேள்விக்குள் மனிதன் செல்லுவதில்லை. வாழப் போகும் நாட்கள் குறைவென்று நிச்சயமான பின், இருக்கும் நாட்களுக்குள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டித் துடிக்கிறான். அச்சமயத்தில், சரி, தவறு என மனம் போட்டு வைத்துள்ள எல்லாக் கணக்குகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட மனம் இளகுகிறது. கடைசி நொடி வரையும் இளகாமல் வாழ்ந்து மடிவோர் உண்டு என்ற போதிலும், மனம் இளகுவோரின் அகப்பயணம் எவ்வாறாக இருக்கும் என்பதே இந்த ஆங்கிலப் படத்தின் மையக்கரு.
குன்னூரில் இசை ஆசிரியராகப் பணி புரிபவர் அமாண்டா ரைட். கணவரையும் மகளையும் பிரிந்து இசையே வாழ்க்கையென வாழும் ஆங்கிலோ இந்தியரான அமாண்டாவிற்கு தண்டுவட மரப்பு நோய் (Multiple Sclerosis) கண்டறியப்படுகிறது. வாழ்வின் நிலையாமையையும், விரைவில் தன் உடல் முடங்கிவிடும் என்ற யதார்த்தத்தையும் உணரும் அமாண்டா, தன் பேத்தியைப் பார்ப்பதற்காக ஒரு சாகச பயணத்தைத் தொடங்குகிறார். பேத்தியை ஆரத் தழுவ வேண்டுமென்பது மட்டுமே அமாண்டாவின் ஒரே லட்சியமாக உள்ளது.
குன்னூரில் இருந்து சென்னைக்கு சைக்கிளிலேயே புறப்படுகிறார். தன்னால் முடியுமெனத் தனக்குத் தானே போட்டியிடும் வேட்கையே அதற்குக் காரணம். கர்ப்பமாக இருக்கும்போது தன்னை விட்டுவிட்டுப் போன அம்மாவை மன்னிக்கத் தயாராக இல்லாமல் அமாண்டாவிடம் ஓர் ஆற்றொண்ணா கோபத்தைக் காட்டுகிறார் அவரது மகள் சப்ரீனா. அமாண்டா எவ்வளவோ முயன்றும், 14 வயதாகும் பேத்தியின் இருப்பிடத்தைச் சொல்ல மறுத்துவிடுகிறார் சப்ரினா.
தனது பேத்தி டாலி கொல்கத்தாவில் இருப்பது தெரிய வர, மீண்டும் சுமார் 1700 கி.மீ. சைக்கிள் பயணத்தை மேற்கொள்கிறார். தனது அம்மாவின் மீதுள்ள கோபத்தையும் வெறுப்பையும், தான் பார்த்தேயிராத பாட்டியின் மீதும் உச்சபட்ச அலட்சியத்துடன் கொட்டுகிறாள் டாலி. பாசத்தை உணர மறுக்கும் கோபமும், தன்னை ஏற்க மறுக்கும் மகள் – பேத்தியின் அலட்சியமும்தான் அமாண்டாவிற்கு நீண்ட பயணத்தில் கிடைப்பவை.
படத்தின் ஓட்டத்தை ஐந்தாகப் பிரிக்கலாம். அமாண்டாவின் குன்னூர் வாழ்க்கை, குன்னூர் – சென்னை பயணம், சென்னையில் மகளுடனான எமோஷ்னல் சண்டை, சென்னை – கொல்கத்தா பயணம், கொல்கத்தாவில் அமாண்டாவிற்கு ஏற்படும் பரிதவிப்பு, இறுதியாக க்ளைமேக்ஸ் என ஐந்து பிரிவாகப் படத்தைப் பகுக்கலாம். ஒவ்வொரு பிரிவும், ஒரு சிறுகதை போன்ற தனித்த அழகியலுடன் மிளிர்கிறது. அமாண்டாவின் குன்னூர் வாழ்க்கையில், மேஜர் அஜயுடனான மெச்சூர்டான ரிலேஷன்ஷிப்பை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். அடுத்து, குன்னூர் – சென்னை பயணத்தில், ட்ரக் (குட்டி யானை) டிரைவர் எழுமலைக்கு அமாண்டா, வொயிட் சிஸ்டராகி அவர்களுக்குள் ஏற்படும் அந்த சிறிது நேர நட்பு கவர்கிறது. அந்த அத்தியாயம் கலகலப்பிற்கு உதவுவதோடு, படத்தினை உணர்வுபூர்வமாக அடுத்த தளத்திற்கு நகர்த்த உதவியுள்ளது. செவன் ஹில்ஸ் என அமாண்டாவால் அழைக்கப்படும் ஏழுமலை கதாபாத்திரத்தில் ஜராவிஸ் டீ மிக அற்புதமாக நடித்துள்ளார். அவரது ஆங்கிலமும், அவரது ட்ரீமும் (லட்சியமும்), அதற்கு அமாண்டா செய்யும் உதவியுமுமாக முடியும் ஷார்ட் & ஸ்வீட் எபிசோட் அது. மேஜர் அஜயாகப் படத்தின் தயரிப்பாளர் பிரான் அம்ரித் நடித்துள்ளார்.
இரண்டு அத்தியாயத்தில், கதையைக் கலர்ஃபுல்லாகச் சுமக்கும் அமாண்டாவிற்கு மூன்றாவது பிரிவில், hitting under the belt போல் மகளின் கோபத்தால் நிலைகுலைகிறார். ‘எனக்குத் தேவையான நேரத்தில் விட்டுப் போன நீ, இப்ப ஏன் 15 வருஷத்துக்கு அப்புறம் வந்திருக்க?’ என மகள் சப்ரீனாவின் முகத்தில் அறையும் விதமான கோபத்தைச் சமாளிக்க முடியாமல் நிலைகுலைகிறார் அமாண்டா. ஒரு போரினைப் போல் நடக்கும் அம்மா – மகள் எமோஷ்னல் வாக்குவாதத்தை மிக லைவ்லியாகப் படம்பிடித்துள்ளனர். சப்ரீனாவாக நடித்திருக்கும் ஜில்லியன் பிண்டோ வெளிப்படுத்தும் கோபம், அமாண்டாவின் மீது பரிதாபத்தை வரவழைக்கும் அளவு கருணையற்றதாக உள்ளது. இந்த அத்தியாயத்தின் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறார் அமாண்டாவின் தோழி ஹெலன் டாஸன். ஃபோன் ஒலித்தால், ஃபோனை எடுக்காமல், அந்த ரிங் டோனிற்கு நடனமாடிக் குதூகலமாக வாழும் ஜாலி பேர்வழி ஹெலனாக தெஹ்ஸீப் கட்டாரி நடித்துள்ளார். வாழ்வை ரசித்து வாழும் அவரது நடனமும், அவர் வெளிப்படுத்தும் கொண்டாட்டமும் சிறப்பு.
சென்னை – கொல்கத்தா பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அமாண்டாவிற்கு வாழ்க்கை பற்றிய பார்வையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே எடுக்கப்பட்டுள்ள லோ பட்ஜெட் படமென்றாலும், ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளருமான நிக்கோலஸ் மோசஸ் ரோட் ட்ரிப் மூவியாக ஒரு பிரம்மாண்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளதோடு, எமோஷ்னல் காட்சிகளையும் தாக்கம் குறையாமல் திரையில் கொண்டு வந்துள்ளார். லைட் ஹார்டட் மூவியாக, ஒரு ஃபீல் குட் தன்மையை அளிக்கும் பொறுப்பைக் கச்சிதமாகச் செய்துள்ளார் இசையமைப்பாளர் கணேஷ் ரமணா. கணேஷ், குன்னூர் – சென்னை அத்தியாயத்தில், அமாண்டா தன் பயணத்தில் சந்திக்கும் ஒரு மருத்துவராகவும் ஒரு கெஸ்ட் ரோல் செய்துள்ளார்.
கொல்கத்தாவில், செம ஜாலி பேர்வழியான ட்ரெவரைச் சந்திக்கிறார் அமாண்டா. அவரது பொறுப்பில் தான் அமாண்டாவின் பேத்தி டாலி வளர்கிறாள். அமாண்டாவைப் பார்த்ததில் இருந்து ட்ரெவரிடம் தொற்றிக் கொள்ளும் ரொமான்ஸும், அதீத சுறுசுறுப்பும் செம கலாட்டாவாய் உள்ளது. ட்ரெவர் தன்னுடன் நடனமாடுமாறு அழைக்கும் போது, “சென்னையில் இருந்து சைக்கிள் ஓட்டிட்டு வந்தது என் முட்டியை என்ன பண்ணியிருக்குன்னு தெரியுமா?” என அமாண்டா மறுப்பார். அதற்கு, “உன்னைப் பார்த்ததும் என் வயதான முட்டிக்கு என்னாகியிருக்குன்னு உனக்குத் தெரியுமா?” என ஆடிக் கொண்டே கேட்பார் ட்ரெவர். படத்தின் மிகப் பெரிய பலம் அதன் வசனங்கள். படத்தை இயக்கிய ஹென்றி மெக்லூர் (Henry MacLure), Anglos in the Winds என்ற இதழின் ஆசிரியர். கதாசிரியரும், நகைச்சுவைப் புத்தகங்களின் விரிவுரையாளருமான ஹென்றி, ஆங்கிலோ இந்தியர்கள் பற்றிய ஒரு தொடரையும் இயக்கியுள்ளார். ‘கல்கட்டா, ஐ ஆம் சாரி’யே இவரது முதற்படமாகும்.
கடைசியில் சிறிது நேரமே வந்தாலும், ட்ரெவராக நடித்துள்ள ஆண்ட்ரூ ஹோஃப்லேண்ட் நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளிக்கிறார். பேத்தியின் அலட்சியத்தால் சோகமாக முடிய வேண்டிய அத்தியாயத்தை சமன் செய்வது அவரது கலகலப்பே! சுமார் 2100 கிலோமீட்டர்கள் பயணம் செய்து பார்க்க வந்த பேத்தியின் முதல் பார்வையே சர்வ அலட்சியத்துடன் இருப்பதோடு, மகள் சப்ரீனா கேட்டது போலவே, ‘இப்ப யார் உன்ன இங்க வரச் சொன்னது?’ என்பதாக இருக்கும். பேத்தியின் வயதோ வெறும் 14 தான். ‘எனக்கும், ட்ரெவர் பப்பாவுக்கும் நடுவுல வராத’ எனப் பார்த்தேயிராத பாட்டியின் மீது இவ்வளவு வெறுப்பு எழ என்ன காரணமென்று டாலி என அழைக்கப்படும் கல்கட்டா பொரிந்து தள்ளிவிட்டு சட்டென நகர்ந்துவிடுவார். கல்கட்டாவாக நடித்துள்ள ஜில்லியன் வில்லியம்சன் முகத்தில் அலட்சியமும் கோபமும் அசால்ட்டாய் வந்து செல்கிறது. அமாண்டாவாக நடித்துள்ள பிரஸில்லா கார்னர்க்குக் கதையின் நாயகியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிகவும் அற்புதமாகப் பயன்படுத்தி, மறக்கவியலாதொரு திரை அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறார்.
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்ற பாடத்துடன் ட்ரெயினில் குன்னூர் திரும்புகிறார் அமாண்டா. சுபமான க்ளைமேக்ஸாகப் படம் முடியும் பொழுது, தேவையற்ற ஈகோக்களைப் புறந்தள்ளி, மனதுக்கு நெருக்கமான அனைவரையும் ஆழத் தழுவிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஒரு கணம் எழுந்து மறைவதே படத்தின் வெற்றி.
(விரைவில் இப்படம் ஓடிடி-இல் வெளியாகவுள்ளது)
பி.கு.: ராபின் டேவிட்ஸன் எனும் பெண்மணி, 1700 மைல்கள் ஒட்டகத்தில் பயணித்து ஆஸ்திரேலியப் பாலைவனத்தைக் கடந்த தனது அனுபவங்களை Tracks எனும் நூலாக எழுதியுள்ளார். திரைப்படமாகவும் ஆக்கப்பட்டுள்ளது இந்நூல். தமிழில், “தடங்கள்” என பத்மஜா நாராயணனால் மொழிபெயர்க்கட்ட இந்நூலை எதிர் வெளியிட்டுள்ளது. இப்படம், அந்நூலினை ஞாபகப்படுத்துகிறது.