Shadow

கேப்டன் மில்லர் விமர்சனம் :

’முன்னாடி நம்ம நாட்டுக்காரனுக்கு கீழ அடிமையா இருந்தோம்… இப்ப வெளிநாட்டுக்காரன் கீழ அடிமையா இருக்கோம்… யார் கீழ இருந்தா என்ன…? எல்லாம் அடிமைதான… இவன் என்னை செருப்பு போடாதங்குறான்… கோயிலுக்குள்ள வராதங்குறான்… அவன் என் காலுக்கு பூட்ஸ் குடுக்குறான்.. மருவாதியான வாழ்க்கை வாழணும்னு ஆசப்படுறேன்… நான் பட்டாளத்துக்கு போறேன்…” என்று ஆங்கிலேயரின் சிப்பாயாக பணிக்குச் சேரும் அனலீசன் என்கின்ர ஈசா, மில்லர் என்கின்ற பெயர் மாற்றத்துடன் துப்பாக்கி ஏந்த அவனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது. அதை செய்ய முடியாதவனாக மனம் மாறி சுதந்திரப் போராட்ட வீரர்களை நோக்கி பிடிக்க வேண்டிய துப்பாக்கியை வெள்ளையனின் ராணுவ வீரர்களை நோக்கியும் தளபதியையும் நோக்கியும் திருப்பினால்” என்ன நடக்கும் என்பதை கற்பனையாக பேசி இருக்கும் திரைப்படம் தான் “கேப்டன் மில்லர்”.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் திரைப்படங்கள் எப்பொழுதுமே நிஜமாக நடந்த கதைக்களனை எடுத்துக் கொண்டு, அதில் புனைவு சேர்த்து அமைக்கப்படுவது வழக்கம். அதற்கு இந்த கேப்டன் மில்லர் திரைப்படமும் விதிவிலக்கில்லை.  இப்படத்தைப் பார்க்கும் போது ஒரு சில இடங்களில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்போ என்று சந்தேகமே எழும் வண்ணம் ஆயுத புளக்கங்களும், பரிமாற்றங்களும் நடக்கின்றன. அப்படி ஒரு எண்ணம் எழுவதற்கு அதுமட்டுமே காரணமில்லை.  தமிழீழ வரலாற்றில் வல்லிபுரம் வசந்தன் என்கின்ற பெயர் மறக்க முடியாத ஒன்று.  ஏனென்றால் வல்லிபுரம் வசந்தன் என்னும் இயற்பெயர் கொண்டு கேப்டன் மில்லர் என்று சகப் போராளிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர் தற்கொலைப்படைத் தாக்குதலின் முதல் போராளி ஆவார். அந்தப் பெயரைத் தான் படத்தின் தலைப்பாக வைத்து இருப்பதால் இப்படம் இப்படி ஒரு வித்தியாசமான புனைவாக இருக்குமோ என்கின்ற எண்ணம் வந்து போனது.

கதையாகப் பார்த்தால் நாயகன் அனலீசன் என்கின்ற ஈசாவிற்கு பிரிட்டிஸார், தங்களை துச்சமாக எண்ணி அடக்கி ஆண்டு அவமதிக்கும் மேல்வர்க்கத்தினரான ராஜ வம்சத்தினர் இவர்கள் இருவரையுமே பிடிக்காது. அதே நேரம் அந்த மேல் வர்க்கத்தினருக்கு ‘கோரனார்’ என்னும் தெய்வத்தின் கோவிலைக் கட்டிக் கொடுக்க 600 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, கோயிலையும் கட்டிக் கொடுத்து, கோவிலைச் சுற்றியுள்ள கோவில் நிலத்தில் பலநூறு ஆண்டுகளாக குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டத்தை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.  வெள்ளையர்களுக்கு கோவிலில் இருக்கும் ‘கோரனார்’ என்னும் தெய்வத்தின் மரகத சிலை மீது கண். ராஜ வம்சத்தினர் அந்த உண்மையை மறைத்து வைத்திருக்க, அதை மோப்பம் பிடித்த பிரிட்டிஸார் அந்த மரகதசிலையை கொண்டு செல்கின்றனர்.  இப்பொழுது கோவிலும் அதன் நிலத்தோடு நமக்கு சொந்தமாக வேண்டும், மரகத சிலையையும் மீட்க வேண்டும் என்ற குறுக்குப்புத்தியுடன் பிரிட்டிஸாருக்கு எதிராக துப்பாக்கிப் பிடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஈசா என்னும் கேப்டன் மில்லருக்கு தூது அனுப்புகிறார்கள். இந்த சூழ்ச்சி வெற்றி பெற்றதா…? என்பதே மீதிக் கதை.

அனலீசன் என்னும் ஈசா-  வாக தனுஷ். தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது கிட்டத்தட்ட சூரியன் கிழக்கில் உதிக்கும் என்கின்ற உலக உண்மையைப் போல் மாறி வருகிறது. அந்த அளவிற்கு பல்வேறு உணர்வுகளை ஈசாவாக சுமந்து அந்த ராமநாதபுர மாவட்டத்தின் புழுதிகளில் அலைந்து, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.  தாயுடனான நக்கல், அண்ணன் செங்கோலன் (சிவ்ராஜ்குமார்) மீதான மரியாதை கலந்த பாசம், தோற்றுப் போன காதலினால் கிடைத்த காதலி மீது தொன்று தொட்டுத் தொடரும் அன்பு, ஒரு கொலைக்களத்தில் தன் கைகளை ரத்தக்கறை படிந்ததாக மாற்றிய ஆளும் ஆங்கிலேய தரப்பினர் மீதான தீராத கொலைவெறி, தன்னை செறுப்பு போடவும் அனுமதிக்காமல், தன்  பாட்டன் பூட்டன் கட்டிய கோவிலுக்குள் நுழையவும் அனுமதிக்காமல்  தீண்டாமை சுவர் எழுப்பும் ராஜவம்சத்தினர் மீது உச்சக்கட்ட வெறுப்பு, தன்னை சபித்து சாகச் சொல்லிய ஊரார் மீது தீராமல் தொடரும் வன்மம், தவறு செய்து விட்டோமோ என்கின்ற குற்றவுணர்ச்சி என்று எந்தவொரு உணர்ச்சியையும் பாக்கி வைக்காமல் கலந்துகட்டி விருந்தளித்திருக்கிறார். “ஈசா என்னும் கேப்டன் மில்லர் “ கதாபாத்திரமும் அவருக்குத் தேவையான தீனியைக் கொடுத்திருக்கிறது.

அவருக்கு அடுத்ததாக கொள்ளையர் கூட்டத்தின் தலைவராக வரும் இளங்கோ குமரவேலின் நடிப்பு அபாரம்.  அவரின் கதை சொல்லல் மூலமாக விரியத் துவங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் கதையில் அவரின் கதாபாத்திரமும் சிறப்பாக செதுக்கப்பட்டு இருக்கிறது. கொள்ளையராக, சுதந்திரப் போராட்டத்தில் பற்றுதல் உள்ளவராக, வெளியில் இருந்து சுதந்திரப் போராட்ட போராளிகளுக்கு பொருளாதார உதவியும், தவிர்க்க முடியாமல் தேவைப்படும் இடங்களில் ஆயத உதவியும் செய்யும் ஆயுத வியாபாரியாக, தான் நோட்டம் விட்டு வைத்திருந்த  இடத்தில் களவு நிகழ்த்தி கொள்ளையடித்துச் சென்ற மற்றொரு கூட்டத்தினரை சுதந்திரப் போராட்ட தியாகிகளின் மூலம் எச்சரிக்கை செய்யும் சுயநலமியாக, கோயிலையும் ஊர் மக்களையும் காக்க துப்பாக்கி ஏந்தி ராவும் பகலும் பாதுகாப்பிற்கு நிற்கும் படைவீரனாக நேர்த்தியான பண்பட்ட நடிப்பில் மிளிர்கிறார்.

“சில்லுக்கருப்பட்டி” படத்தில் மென்மையான கதாபாத்திரத்தில் நடித்து நம்மை வசீகரித்த நிவேதிதா சதீஷ், இப்படத்தில் கரடுமுரடான கதாபாத்திரம் ஏற்று, கண நேரம் கூட துப்பாகியை கைகளில் இருந்து இறக்காத போராளியாக மாஸ் காட்டுகிறார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரியங்கா மோகனுக்கு வழக்கமான சினிமா நாயகி கதாபாத்திரத்தில் இருந்து விலகிய மாறுபட்ட கதாபாத்திரம். அடிப்படை நாயகிக்கான எந்தவொரு சாயலும் இல்லாமல் இக்கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பது மிகச்சிறப்பு மட்டுமின்றி பெரும் ஆறுதலும் கூட. கம்யூனிச சிந்தனை உள்ள பெண், மருத்துவச்சி, தன் இன மக்களின் உயிர் காக்க உயிரை பணயம் வைக்கவும், உயிரை எடுக்கவும் தயங்காத தமிழச்சி, உயிர் குடிக்கும் என் துப்பாக்கியின் தோட்டாக்கள் சுயநலத்திற்காக அல்ல; பொதுநலத்திற்காக என்பதில் இருக்கும் தெளிவு என சிறப்பான கதாபாத்திரம். நிறைவாகவே செய்திருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து சக படை வீரனாக, அங்கும் சனாதனம் பார்க்கும் சனியனாக, கொலைகளை ருசிக்கும் குணம் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கிறார் விநாயகன்.  சில தருணங்களில் பார்வையாளர்களை கொலைவெறி ஏற்றுகிறார்.  சிவ்ராஜ்குமாரும், சந்தீப் கிஷனும் மல்டி ஹீரோ பிம்பம் மற்றும் மார்க்கெட்டிங் யுக்திக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஓரளவிற்காவது மனதில் நிற்பவர் சிவ்ராஜ்குமார் தான். அவர் கதாபாத்திரத்தினை என்ன இப்படி சட்டென்று முடித்துவிட்டார்கள் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்க, படத்தின் முக்கியமான தருணத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்து அவரின் ரசிகப் பெருமக்களை குதூகலம் அடையச் செய்கிறார்.  சந்தீப் கிஷன் என்று ஒருவர் இருந்தார் என்பதையே நாம் மறந்து போய்விட்ட தருணத்தில் மீண்டும் அவரை கொண்டு வந்து ஞாபகமூட்டுகின்றனர். ராஜாவாக வரும் ஜெயப்பிரகாஷும் அவரின் தம்பியாக வரும் ஜான் கொக்கைனும் எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அறுவறுப்பை முகத்தில் சுமந்தபடியே அலைகிறார்கள்.  ஓரிரு காட்சிகளில் வந்தாலும் விஜி சந்திரசேகர் மனதில் கெத்தாக நிற்கிறார்.  ஊர் தலையாரியாக வரும் காளி வெங்கட் இயல்பான நடிப்பில் அச்சு அசல் ஊர்த் தலையாரியை கண் முன் நிறுத்துகிறார். வெற்றிலை போடுவதில் துவங்கி, வேலைக்கு வரும் பெண்களை சல்லாபிப்பதும், உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்வதும் என நடிப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார்.

இப்படி படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் அதற்கே உரித்தான காத்திரத்துடன் படைக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு புது பலம் கொடுத்திருக்கிறது. தனுஷ் வரும் காட்சிகளில் அவருக்கு பின்புறத்தில் இசைக்கப்படும் பின்னணி இசை அவரின் நடைக்கு ஒரு ராஜகம்பீரத்தைக் கொடுத்து விடுகிறது. மேலும் காட்சிகளுக்கான உணர்வலைகளை உருவாக்குவதில் தேர்ந்த நடிப்பும் திறமையான நடிகர்களும் செய்யாத வேலையை ஓரளவிற்காவது செய்வது ஜி.வியின் இசையும் பாடல்களும் தான் என்றால் அது மிகையில்லை.

ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு ஆரம்ப காட்சிகளில் கண்களை அலைபாயவிட்டு, பின்பு ஒரு நிலையில் நிறுத்துகிறது. ப்ரேம்களில் ஆர்ட்டிஸ்டுகளை நிறுத்தும் ஸ்டேஜிங்கில் துவங்கி, ஒவ்வொரு காட்சிகளுக்குமான ஒளியை அதன் களத்திற்கும் கதைக்கும் பொருந்தும் வகையில்  அமைத்து  படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார். போர்க்களக் காட்சிகளுக்கு ஒத்த க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் இண்டு இடுக்குகளின் வழியே பயணிக்கும் சித்தார்த்தின் கேமரா பல மாயாஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறது.

இப்படி எத்தனையோ நல்ல விசயங்கள் படத்தில் இருந்தாலும், கதை சொல்லல் முறையில் இ ல்லாத எளிமையும், காட்சிகள் தோன்ற வேண்டிய உணர்வெழுச்சிகள் நம் மனதில் தோன்றாமல் ஒன்றாமல் இருப்பதும் படத்தின் மிகப்பெரிய பலவீனம். கதையாகவும் கதாபாத்திரங்களாகவும் வலுவாக  இருக்கும் ‘கேப்டன் மில்லர்’  காட்சிகளில் இல்லாத நம்பகத்தன்மை மற்றும் உணர்வெழுச்சியின்மை போன்ற காரணிகளால் பார்வையாளர்களாகிய நம்மை முழுமையாக திரைப்படத்தோடு ஒன்ற விடாமல் நம்மை அந்நியப்படுத்துகிறது.

நாகூரானின் எடிட்டிங்கில் தேவையில்லாதவை என்று எதுவுமே இல்லை என்றாலும் கூட கதையை, கதை போகும் போக்கின் மீதான எதிர்பார்ப்பை பார்வையாளர்களின் மனதில் நிலைநிறுத்தும் உணர்வு எட்டாமல் போனது ஏனென்றே புலப்படவில்லை.

அதுவும் இல்லாமல் சுதந்திரப் போராட்ட காலத்தில் இவ்வளவு ஆயுதங்களாக, அதுவும் சிறு சிறு தீவிரவாத குழுக்களாக இருக்கும் நம் ஆட்களிடமா..? என்கின்ற கேள்வியும், பிரிட்டிஷ் படைப்பிரிவு இவ்வளவு பலகீனத்துடனும், புத்தியின்மையுடனுமா நம் கூட்டத்தாரை அணுகி இருக்கும் என்கின்ற கேள்வியும்  எல்லாவற்றையும் மீறி மேலெழுகிறது. அதுவுமின்றி துப்பாக்கியிலும் வெடிகுண்டுகளிலும் எத்தனை பேர் இறந்தாலும், இறந்து விடுவார்களோ என்கின்ற பயமோ..? இறந்துவிட்டார்களே என்கின்ற துக்கமோ ஏற்படுவதே இல்லை. நடக்கின்ற யாவற்றையும் வெறும் வேடிக்கைப் பார்க்கும் பார்வையாளர்களாக மட்டுமே நின்று கொண்டிருக்கிறோம்.  அந்தப் படைப்பின் பங்கேற்ப்பாளராக நாம் எந்த தருணத்திலும் மாறுவதே இல்லை.

மொத்தத்தில் ‘கேப்டன் மில்லர்” கதை, மாறுபட்ட திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு என்று எத்தனையோ தர மதிப்பீடுகளை வென்றாலும் கூட நம் மனதை முழுமையாக வென்றெடுக்க தவறுகிறார்.

”கேப்டன் மில்லர்” –  நம் மனமாகிய போர்களத்தின் பாதிப் பரப்பை வெல்கிறார்.

மதிப்பெண் – 3.0 / 5.0