Shadow

சந்திரமுகி 2 விமர்சனம்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது.

ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆவி யார் மீது இருக்கிறது என்கின்ற குழப்பமும், பக்கத்து வீட்டு நாயகி மீது சந்தேகமும் வருகிறது. பிறகு குடும்பத்தில் ஒருவருக்கு தான் சந்திரமுகியால் பாதிப்பு இருக்கிறது என்னும் உண்மையும் தெரிய வருகிறது,  அது பாதிக்கப்பட்ட நபரைத் தவிர குடும்பத்தில் எல்லாருக்கும் தெரிந்தும் இருக்கிறது.  ஒரு கட்டத்தில் தனக்குத் தான் சந்திரமுகியால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை பாதிக்கப்பட்ட நபர் உணர்ந்து கண்கலங்குகிறார். சந்திரமுகிக்கு நாட்டிய காதலன் இருக்கிறான். அவன் தலை வெட்டப்பட்டு கொல்லப்படுகிறான். சந்திரமுகி எண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகிறாள்.  வேட்டையனை பழி வாங்கத் துடிக்கும் சந்திரமுகி வேட்டையனைப் பழி வாங்கிவிட்டதாக நம்ப வைக்கப்பட்டு சாந்த சொரூபியாகி காணாமல் போகிறாள். கடைசி காட்சியில் நாயகன் நாயகியைத் தள்ளிக் கொண்டு போவார். இங்கும் அதுவே.

சந்திரமுகியில் அந்தக் குடும்பம் அரண்மனைக்கு வந்தப் பின்னர் தான் பிரச்சனைகள் துவங்கும். இங்கு பிரச்சனைகளை போக்கி கொள்வதற்காகவே அந்த பெரிய குடும்பம் சந்திரமுகியின் அரண்மனைக்கு வருகிறது. சந்திரமுகி 1 இல் சாமியார் வருவார். அது போல் இங்கும் வருகிறார்.  இல்லை இல்லை ஒய்.ஜி.மகேந்திரனுடன் சேர்ந்து மூன்று சாமியார்கள் வருகிறார்கள்.  வேட்டையன் வருகிறார். இல்லை இல்லை வேட்டையன் வேட்டையனாக வராமல், வேட்டையன் செங்கோட்டையனின் கூட்டுக் கலவையாக வருகிறார்.  சந்திரமுகி 1 இல் சந்திரமுகி நாயகனை வேட்டையனாக எண்ணிக் கொள்வாள். சந்திரமுகி 2 இல் வேட்டையனின் ஆவி நாயகனுக்குள் வருகிறது.

இப்படி சந்திரமுகி 1 இல் என்னென்ன இருந்ததோ அதில் பெரும்பாலான விசயங்கள் அப்படி அப்படியே இருக்கிறது. அதில் சின்னதாக யோகி பாபு பாணியில் பேட்ச் வொர்க் செய்து சந்திரமுகி 2 உருவாகி இருப்பது நன்றாகவே தெரிகிறது. ராகவா லாரன்ஸ் அப்படியே ரஜினியை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அது நெடு நாளாக தொடர்வது தொந்தரவு செய்கிறது.  காதல் காட்சிகளிலும் காமெடி காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.  சந்திரமுகி 1ன் மற்றொரு யானை பலமான வடிவேலு, சந்திரமுகி 2 இல் சற்று சறுக்கி பலவீனப்பட்டுத் தெரிகிறார். காமெடி செய்வதற்கு அவரும் சிரமப்பட, சிரிப்பதற்கு நாமும் சிரமப்படுகிறோம்.  மற்றபடி ஒரு பெரும் கூட்டம், அரண்மனை காலியாகத் தெரியக் கூடாது என்பதற்காகத் திரட்டப்பட்டு இருக்கிறது.  அவர்கள் இட்டு நிரப்பப்பட்ட பொருட்களாகவே தெரிகிறார்கள்.

அதையும் மீறி ராதிகா சரத்குமாரும், லட்சுமி மேனனும் தங்கள் வசீகரமான நடிப்பால் ஈர்க்கிறார்கள்.  மகிமா நம்பியார் அவரின் அப்பழுக்கற்ற அழகால் ஈர்க்கிறார்.  இசை கீரவாணி என்பது டைட்டில் கார்டில் மட்டுமே தெரிகிறது.  பாடல்களிலோ அல்லது பின்னணி இசையிலோ கீரவாணியின் முத்திரை துளியளவும் இல்லை.  ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் குறை ஒன்றும் இல்லை.

சந்திரமுகியோடு யாரும் இதை ஒப்பிட்டுப் பார்க்கும் கண்ணோட்டத்தோடு  திரை அரங்கிற்கு வர வேண்டாம் என்று இயக்குநர் பி.வாசு கேட்டுக் கொண்டாலும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு ஃப்ரேமும் கூட சந்திரமுகியை நினைவுப்படுத்துவதாகவே இருக்கிறது.  இருப்பினும் சந்திரமுகி 2 என்னும் அந்த வார்த்தைக்கு ஒரு வசீகரம் இருப்பதால், இதில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்கின்ற மனக் குறுகுறுப்பையும் ஆர்வத்தையும் யாராலுமே கட்டுப்படுத்த முடியாது என்பதால் அனைவரும் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்க வருவார்கள் என்கின்ற நம்பிக்கை வீண் போகாது.

சந்திரமுகி  2 இன் வெற்றி சந்திரமுகி என்னும் அந்த பிராண்டிற்கான வெற்றி.

– இன்பராஜா ராஜலிங்கம்