படத்தின் கதை கோயம்புத்தூரில் நடந்தாலும், கோவைக்கு மாற்றலாகும் சென்னையில் ஒரு நாள் படத்தின் கதாபாத்திரமான காவல்துறை உயரதிகாரி சுந்தரபாண்டியனைச் சுற்றி கதை நிகழ்கிறது. ஆனால் இது முந்தைய படத்தின் தொடர்ச்சியோ நீட்சியோ இல்லை. இப்படம் துருவங்கள் பதினாறு போல் ஒரு க்ரைம் த்ரில்லர். அந்தப் படத்தின் தாக்கத்தையும் படத்தில் உணர முடிகிறது.
‘ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?’ எனக் கோவை முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்படுகிறது. ஏஞ்சல் பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் காவல் அதிகாரி சுந்தரபாண்டியன் வீட்டிற்கு வருகிறது. சென்னையில் இருந்து கோவை வரும் ஏஞ்சல் எனும் பெண் கடத்தப்படுகிறாள். இது மூன்று சம்பவங்களுக்கும் காரணகர்த்தா யார் எனத் துப்பு துலக்குவது தான் படத்தின் கதை. ராஜேஷ்குமாரின் நாவலொன்றினைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் என கிரெடிட் கொடுத்திருப்பது சிறப்பு.
படம் முழுவதும் சுந்தரபாண்டியனாக நடித்திருக்கும் சரத்குமார் மயம்தான். டைட்டில் கார்டில் அசத்தலாக ஆக்ஷன் செய்கிறார். ஆனால், உள்ளே திரைக்கதை அநியாயத்திற்கு அவரை கை விட்டு விடுகிறது. வசனங்களும் சோபிக்கவில்லை. ஓரிடத்தில் இருந்து ஓரிடத்திற்கு எனச் சென்று கொண்டிருக்கிறாரே அன்றி, புத்திசாலித்தனமாகவோ சாதுரியமாகவோ அதிரடியாகவோ ஏதும் கடைசி வரை செய்கிறார் இல்லை. முனீஷ்காந்தின் நகைச்சுவையும் கலகலப்பிற்குப் பெரிதும் உதவவில்லை. எந்தக் கதாபாத்திரமும் மனதில் பதியாததோடு, சரத்குமாரின் ஆக்ஷனும் இல்லாதது குறை.
மேசை டிராயரில் இருந்து துப்பாக்கியை எடுக்கும் போது, சிகரெட் பிடிக்கும் போது, கை விரல்களைச் சொடுக்கும் போது, சரத்குமாருக்கு ஹீரோயிச க்ளோஸ்-அப்பும், மாஸ் பில்டப் பின்னணி இசையும் கொடுக்கின்றனர். துருவங்கள் பதினாறு படத்தில் கலக்கிய ஜேக்ஸ் பிஜாயி, இப்படத்தினுடைய பலவீனமான திரைக்கதையின் காரணமாய்ப் பின்னணி இசையில் ஈர்க்கத் தவறி விடுகிறார். இசை நன்றாக இருந்தாலும் பின்னணி காட்சிகளோடு இழையாமல் தனி ஆவர்த்தனம் செய்வதால் ரசிக்க முடியவில்லை. படத்தின் மிகப் பெரும் பலவீனம் அதன் வசனங்கள்.
திரைக்கதை ஈர்க்காததிற்குத் திரையில் வரும் குறைவான மனிதர்கள் கூடக் காரணமாக இருக்கலாம். விசேஷம் என்றால் கூட வீட்டில், வீட்டு நபர்களைத் தவிர ஒரே ஒரு ஆள் கூட எக்ஸ்ட்ராவாக இல்லை. அதனால் காட்சிகளில் தெரியும் ஓர் அந்நியத்தன்மை பளீச்சென முகத்தில் அறைகிறது. படத்தின் புதிர் முடிச்சுகள் எல்லாம் சுவாரசியமாக இருந்தாலும், அவை படிப்படியாக அவிழ்க்கப்படாமல், வசனமாகக் கடைசியில் சொல்லப்படுகிறது. கதை ஓட்டத்தில் புதிர்கள் மெல்ல ஒன்று ஒன்றாக அவிழ்க்கப்பட்டிருந்தால் படத்தின் சுவாரசியம் இன்னும் அதிகமாகியிருக்கக்கூடும்.