Shadow

சிக்லெட்ஸ் விமர்சனம்

எப்படியாவது ஒரு முறையாவது பாய் பிரெண்ட்-உடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று வீட்டின் கட்டுப்பாடுகளை மீறி ஓடும் மூன்று 2கே கிட்ஸ் இளம்பெண்களும், அவர்களை உடலுறவு செய்துவிடாமல் தடுத்து விட வேண்டும் என்று அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடும் அந்த இளம் பெண்களின் குடும்பத்தாரும் என இருதரப்பும் ஓட, இறுதியில் இந்த ஓட்டப் பந்தயத்தில் யார் வென்றார்கள் என்பதே “சிக்லெட்ஸ்” திரைப்படத்தின் கதை.

சாதீக் வர்மா, நயன் கிருஷ்ணா, சுரேகா வாணி, ஸ்ரீமன், மனோபாலா, ஜேக் ராபின்சன், அம்ரீதா ஹோல்டர், மஞ்சீரா, ராஜகோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.  பாலமுரளி பாலு இசையமைக்க, கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பைக் கவனிக்க, முத்து இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார்.

இன்றைய 2K கிட்ஸ் அனைவரும் கண்டிப்பாக யோசிக்காமல்  தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மீது நீதிமன்றத்தில் ஒரு மானநஷ்ட வழக்கு தொடரலாம். அந்தளவிற்கு 2கே கிட்ஸ் என்றாலே அவர்கள் Dating செல்பவர்கள், மணமாவதற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்பவர்கள்,  காதலன் காதலி இருப்பதை ஒரு இமேஜ் ஆகப் பார்ப்பவர்கள், எந்த உறவுகளை எளிதாக முறித்துக் கொண்டு கடந்து போவர்கள் என்று பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அத்தனை விசயங்களையும் உரைநடை போட்டு விற்று வருகிறார்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்.  ஏதோ இதை விட்டால் அந்தத் தலைமுறையைப் பற்றிப் பேசுவதற்கு வேறெந்த பேசுபொருளும் இல்லாதது போல், ஒரு பிம்பத்தைத் தெரிந்தோ தெரியாமலோ  2கே கிட்ஸ் மீது இந்த சமூகம் கட்டமைத்து வருகிறது.  அந்த பிரக்ஞை கொஞ்சமும் இல்லாமல் அந்த வளர் தலைமுறையும் வளர்ந்து வருகிறது.

பதின்பருவத்தில் பருவத்திற்கான அறிகுறிகள் மனதளவிலும்  உடலளவிலும் தோன்றும் தருணத்தில் ஆண், பெண் என இருபாலரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். உடலில் இயற்கையாகத் தோன்றும் எதிர்பாலின ஈர்ப்பு தொடர்பான செயல்பாடுகளால் உந்தப்பட்டு காதல், காமம் போன்ற  விடயங்களில் மனம் லயிக்கத் துவங்கும் போது, மேற்பத்தியில் சொன்னது போன்ற தவறுகள் நடந்துவிடுவதற்கான காலச்சூழல் இப்பொழுது கைகூடத் துவங்கியிருக்கிறது.  அது குறித்தான விழிப்புணர்வுகளை மாணவ மாணவியரிடம் ஏற்படுத்துவதும், அது குறித்தான விவாதங்களும் இங்கு முக்கியம் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால் இது போன்ற இயல்பான உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது போல் காட்சிப்படுத்துவதும், அதை கேளிக்கைப் பொருளாக மாற்றி மலிவாக சந்தைப்படுத்துவதும் அறவே தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள்.  கவர்ச்சியைப் பிரதானப்படுத்தி எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் அந்த மலிவான சந்தைப்படுத்துதல் யுக்தியைத் தான் கையிலெடுக்கின்றன. அது போன்ற திரைப்படங்களின் வரிசையில் சமீபத்திய வரவு தான் இந்த “சிக்லெட்ஸ்” திரைப்படம்.

12ஆம் வகுப்பு வரை சிறப்பாகப் படித்துவிட்டு, பருவத்தை அடைகின்ற பொழுது, படுக்கையறை சுகத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதையே லட்சியமாகக் கொண்டு செயல்படுவது போன்ற காட்சியமைப்புகளும்,  மாதவிடாய் தருணத்திற்குள் ஒரு பெண் போகும் இயல்பான இயற்கை செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகளைக் குறித்து காமெடி என்கின்ற பெயரில் காட்சிகளை அமைத்து அது போன்ற பாதிப்புகளில் இருக்கும் பெண்களின் மனதைப் புண்படுத்தியிருப்பது வெறுக்கத்தக்க விசயங்கள்.

பெற்றோரின் கண்ணோட்டத்தில் படத்தின் காட்சிகளும் வசனங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கூட, பெண்களையே கடைசியில் குற்றவாளிகளாக்கும் நிலை இப்படத்திலும் தொடர்கிறது.  எந்த நேரமும் படிப்பு படிப்பு என்று அவர்களை இறுக்கிப் பிடிப்பதால் தான் இது போன்ற தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்கின்ற தட்டையான புரிதலும் திரைக்கதையை பலவீனப்படுத்துகிறது.

பெண்களின் உடல் அங்கங்களைப் பிரதானப்படுத்துவது போல் வைக்கப்படும் கேமரா கோணங்களும், வசனங்களும் முகச்சுளிப்பை ஏற்படுத்துகின்றன.  காமத்திற்கும் விரசத்திற்குமான வித்தியாசம் இல்லாமல், தவறான உள் நோக்கத்தோடு வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எடுக்கப்பட்டது போல் மொத்த படமும் தோற்றம் அளிக்கிறது.

ஒட்டுமொத்த கதையில் லெஸ்பியன் உறவு தொடர்பான கதையும், அந்தக் கதையில் வரும் அப்பா மகளுக்கான பாச போராட்டமும் படத்தின் சிறப்பான அம்சங்கள்.  இந்தக் கதையினைக் கையாண்ட விதமும், கதாபாத்திரங்களை வடிவமைத்த இடமும், அந்தக் கதைக்கான க்ளைமாக்ஸ் காட்சியும்  சிறப்பான முறையில் கையாளப்பட்டு இருக்கிறது.  ஆனால் பிற குறைபாடுகள் ஒட்டு மொத்த படத்தின் தன்மையையும் கெடுத்துவிடுகின்றன.

கதையின் முக்கியமான மூன்று நாயகிகளையும் 2கே கிட்ஸ் போல் காட்டி விட்டு, கடைசி க்ளைமாக்ஸ் காட்சியில்  அவர்கள் எடுக்கும் முடிவின் வாயிலாக இயக்குநர் தடாலடியாக அவர்களை 80’ஸ் கிட்ஸ் ஆக மாற்றி இருக்கிறார். இது கலாச்சார சீர்கேட்டை தடுப்பதற்கான முனைப்பா என்று தெரியவில்லை.

கத்தி மேல் நடப்பதற்கு இணையான ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு, அந்தக் கதைக்களத்தை கண்ணியமாகவும்  காத்திரமாகவும் கையாள முடியாமல் இயக்குநர் திணறி  காசு பணம் பார்க்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கில் செயல்பட்டு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

காதலுக்கும் காமத்திற்குமான பதின் பருவத்தினரின் மனநிலை குழப்பம் தான் மொத்த படமும் என்றாலும், அந்தக் குழப்பம் தொடர்பான மிகச்சரியான காட்சிகளோ, அந்தப் பெண்கள் எதன் அடிப்படையில் ஒரு தெளிவான மனநிலைக்கு வருகிறார்கள் என்பதற்கான காட்சிகளோ இல்லாமல் இருப்பதும், காதல் காமம் தொடர்பான இயக்குநரின் பதில் என்ன என்பதற்கான விடையில்லாமல் ஒரு குழப்பம் திரைப்படம் முழுக்க வியாபித்து இருப்பதும் படத்தை மேலும் பலவீனப்படுத்துகின்றது.

மொத்தத்தில் “சிக்லெட்ஸ்” திரைப்படம், லெஸ்பியன் உறவைப் பேசிய அதே தன்மையோடு பிற விடயங்களையும் சரியான அணுகுமுறையோடு அணுகி இருந்தால் பேசப்படும் படமாக மாறி இருக்கும்.

– இன்பராஜா ராஜலிங்கம்