Shadow

”தனஞ்செயன் சார் ஏமாற மாட்டார் அவருக்கு திரைத்துறை அறிவு அதிகம்.” – கேபிள் சங்கர்

ஃபோகஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா” ஆகும். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் விநாயக் துரை, “வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். பீட்சா படம் வந்த போது CV குமார் சாரைப் பார்த்துள்ளேன், அவர் எங்கள் படத்தை வாழ்த்த வந்தது மகிழ்ச்சி. கேபிள் சங்கர் சார் இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். தனஞ்செயன் சாரை அணுக காரணமாக இருந்த கேபிள் சங்கர் சாருக்கு நன்றி. இது ஹைபர் லிங் கதைக்களம். ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி எல்லாம் ஓகே ஆகியிருந்த நிலையில், அவர் எனக்கு செக் சைன் பண்ணும்போது பாம்பு வந்தது, அந்த தயாரிப்பாளர் அப்படியே போய் விட்டார். அப்போது என் அப்பா வந்தார். அவரிடம் அப்பா ஃபிரண்டோடு பிஸினஸ் செய்யப்போகிறேன் என சொல்லி அவரிடம் காசு வாங்கித் தான் இந்தப்படம் எடுத்தேன். 3 நாட்கள் முன்பு வரை அவருக்கு இந்த விசயம் தெரியாது. அவர் வேறு யாரோ தயாரிப்பாளர் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார், இப்போது தான் சொன்னேன். அவர் என்னை நம்பவே இல்லை. தனஞ்செயன் சார் நம் படத்தை பாராட்டி விட்டார் என்றேன் அவரை எப்படி ஏமாற்றினாய் அவரைப்பார்த்தால் ஏமாறுகிற மாதிரி தெரியலையே என்றார். இன்று இந்த பிரஸ் மீட்டைக் காட்டி அவர்களை நம்பவைப்பேன். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் வல்லவன் வகுத்ததடா படத்தின் மையம். பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது தான் படம். படத்தில் நடித்துள்ள ராஜேஷ் அண்ணா எப்போதும் எனக்குத் துணையாக இருந்துள்ளார். ஹைனா மாதிரியான மேனரிசத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். சுவாதி நடிக்கக் கேட்ட போது அவர் வீட்டில் கூப்பிட்டு இண்டர்வியூ மாதிரி வைத்துத் தான் அனுப்பி வைத்தார்கள். அவரும் நன்றாக நடித்துள்ளார். அருள் ஜோதி அண்ணா எனக்காக மட்டும் நடித்துத் தந்தார். மியூசிக் டைர்க்டர் அட்டகாசமாக மியூசிக் செய்துள்ளார். இப்படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, “விநாயக் அவருடைய அப்பாவை மட்டுமில்லை, எங்கள் எல்லோரையும் ஏமாற்றித் தான் படம் பண்ணினார். விநாயக் படம் செய்யலாம் எனச் சொன்னபோது தயாரிப்பாளர் வரட்டும் என்றேன், அதெல்லாம் ரெடி படம் பண்ணலாம்னா எனக் கூறினார். கதை சொன்ன போது, எனக்குப் பிடித்துப்போகவே உடனே ஆரம்பிக்கலாம் என்றேன். இந்தப்படம் பணத்தால் எங்கேயும் நிற்கவில்லை. விநாயக் எல்லாவற்றையும் சரியாக ஒருங்கிணைத்தார். படத்திற்கு முன்னால் எல்லோரையும் வைத்து ரிகர்சல் செய்தோம், அது படப்பிடிப்பில் மிகப்பெரிய உதவியாக இருந்தது. படம் முடிந்து பிஸினஸ் செய்வதில் நிறையப் பிரச்சனைகள் இருந்தது, அவ்வப்போது கேட்பேன், அப்போது தான் விநாயக் தனஞ்செயன் சார் படம் பார்த்து பிடித்திருக்குது என சொன்னதாகச் சொன்னார். அங்கிருந்து இப்போது உங்களிடம் கொண்டு வந்துள்ளோம்” என்றார்.

நடிகை ஸ்வாதி, “ஆக்டிங் ஸ்கூல் படிக்கும்போதே நடிக்கும் ஆர்வம் இருந்தது ஆனால் அது முடியவில்லை. ஆனால் நடிப்பின் மீதான ஆர்வத்தில் சின்ன சின்ன போட்டோஷூட், மாடலிங் எல்லாம் செய்தேன். ஆனால் முதல் பட வாய்ப்பே, மெயின் லீடாக கிடைக்கும் என நினைக்கவில்லை. கார்த்திக் சாருக்கு நன்றி. இந்தப்படத்தில், இந்த டீமிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். எல்லோரும் கடினமாக உழைத்துத் தான் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் இந்தப்படம் வெற்றியைத் தர வேண்டுகிறேன். தனஞ்செயன் சாருக்கு என் நன்றிகள்” என்றார்.

கேபிள் சங்கர், “சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது பயங்கர கஷ்டம். அதிலும் நல்ல படங்களைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது இன்னும் கஷ்டம். ஆனால் ஒரு நல்ல படமென்றால், யாராவது, ‘அதைப் பார்த்து விட்டீர்களா? அதைப் பார்த்து விட்டீர்களா?’ எனக் கேட்டு விடுவார்கள். அப்படித்தான் இந்தப்படத்தின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு தான் தனஞ்செயன் சாரிடம் அறிமுகப்படுத்தினேன். ஒரு நல்ல படம் அதன் வியாபாரத்தை அதுவே தீர்மானித்துவிடும் என்பதை நான் நம்புகிறேன். இந்தப் படத்தை அப்பாவை ஏமாற்றி எடுத்தேன் என்றார் இயக்குநர். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சம்பாதித்துத் தரும். சின்ன படம் அதிலும், பணத்தின் பின்னால் அலையும் மனிதர்கள் கான்செப்ட் எப்போதும் சுவாரசியமானது. சூது கவ்வும் படத்திற்குப் பின்னர், அந்த கான்செப்டில் நிறையப் படம் வந்தது. இந்தப் படம் அந்த வகையில் ஒரு அட்டகாசமான படமாக வந்துள்ளது” என்றார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார், “படத்தின் 8 நிமிட கட் அட்டகாசமாக இருந்தது, எனக்கு இந்த மாதிரி இண்டிபெண்டண்ட் படங்கள் ரொம்பப் பிடிக்கும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் அப்படி வந்தவர்கள் தான். ஆனால் அதை எப்படி பிரசண்ட் செய்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் பிரசண்ட்டேஷன் எல்லாம் நன்றாக உள்ளது. தயாரிப்பாளரின் அப்பா அவரிடம், தனஞ்செயன் சாரை ஏமாற்றி விட்டாயா எனக் கேட்டதாகச் சொன்னார். தனஞ்செயன் சார் ஏமாற மாட்டார் அவருக்கு திரைத்துறை அறிவு அதிகம். இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “சிறு தயாரிப்பு படங்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமென்பதே என் நோக்கம் என்னால் முடிந்தவரைத் தினமும் படங்கள் பார்த்து வருகிறேன் பல படங்களை எங்கள் நிறுவனம் மூலம் ஓடிடியில் விற்றுத் தந்தோம். எறும்பு முதலாகப் பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் தான் கேபிள் சங்கர் சொல்லி இந்தப்படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. விநாயக் துரை மிக அழகாகத் திரைக்கதை எழுதியுள்ளார். இதில் நடித்துள்ள ராஜேஷ் ஹைனாவின் வித்தியாசமான குணங்களோடு நடித்திருந்தார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார்கள். நாயகி தமிழில் பேசி நடித்திருப்பது அருமை. வல்லவன் வகுத்ததடா தனித்துவமான படம். இது புதியவர்களின் முயற்சி, ஊடகங்களின் ஆதரவு வேண்டும் அது இருந்தால் தான் ஓடிடி பிஸினஸ் செய்ய முடியும். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இப்படத்திற்குச் செய்து வருகிறோம்” என்றார்.

ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்‌ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபோகஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை இப்படத்தைத் தயாரித்துள்ளதுடன், இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.