Search

தர்மபிரபு விமர்சினம்

 dharmaprabu-movie-review

வாரிசு என்ற அடிப்படையில் தர்மராஜாவின் மகனான தர்மபிரபு, எமன் பதவிக்கு வருகிறார். ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போக, அவளோடு சேர்த்து ஒரு சாதி கட்சித் தலைவரையும் காப்பாற்றி விடுகிறார் எமன். அரக்கனான அந்தத் தலைவரை ஏழு நாளுக்குள் கொல்லவில்லை எனில் எமலோகத்தைக் கொளுத்தி விடுவேன் என சிவன் சொல்லிவிட, தர்மபிரபு எப்படி அந்த சாதிக்கட்சித் தலைவரின் உயிரை எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இயக்குநர் முத்துக்குமரன் தன்னை ஒரு தீவிர பெரியாரிஸ்ட் எனச் சொல்லிக் கொள்கிறார். நீதியின் காவலனான தர்மபிரபு, எமக்கோட்டைக்கு ஓர் இக்கட்டான சூழல் நேரும் பொழுது, பெரியார், அம்பேத்கர், நேதாஜி, காந்தி ஆகியோரைக் கூப்பிட்டு யோசனை கேட்கிறார். பெளத்தரான அம்பேத்கரும், நாத்திகவாதியான பெரியாரும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் பேசிய அரசியல் அனைத்தும் மிகப் பெரிய காமெடி என நிறுவப்படுகிறது. நால்வரும் தாங்கள் வரித்துக் கொண்ட கொள்கையின்படி தீர்வு சொல்வதில்லை, அது உண்மையில் அவர்கள் நால்வரும் பஞ்சாயத்து செய்யும் விஷயமும் கூட இல்லை. ஆனால், நகைச்சுவை என்னவெனில் நால்வரும் விவாதித்து ஏக மனதாக ஒரு தீர்வை எமனுக்குச் சொல்கிறார்களாம். படத்தின் ஆகச் சிறந்த நகைச்சுவை இதுதான்.

தர்மபிரபுவான யோகி பாபு, தனக்குச் சாமரம் வீசும் பெண்களை நடத்தும் விதமும், பேசும் விதமும் இருக்கிறதே, பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்தால் தான் அப்படியெல்லாம் பேச இயலும். ‘வாங்கடி, போங்கடி’ என காமெடியனாக இருக்கும் பொழுது யோகி பாபு சொல்வதும், அவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு படத்தில், நாயக அவதாரம் எடுக்கும் பொழுது பேசுவதும் ஒன்றன்று. ‘வீங்கின பொம்மை’ என்று ஒரு பெண்ணைக் கிண்டல் செய்வதும், குண்டாக இருக்கும் பெண்ணை உருவ கேலி செய்வதும், பெண்கள் குடிப்பதைக் கிண்டல் செய்வதுமென வரம்பின்றி வாய் நீள்கிறது யோகிபாபுவிற்கு.

சிவனாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்துள்ளார். யோகிபாபு சிவனை செமயாகக் கலாய்க்கிறார். பக்தர்கள் மனம் புண்படுமென்றாலும், அது கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளக் கூடிய எல்லைக்குள்ளாகவே இருக்கிறது. ஆனால், சோ ராமசாமியை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று, மிக மட்டமாகக் காட்சிகளை வைத்துள்ளார் இயக்குநர். கடும் கண்டனங்கள். எதிர் தரப்பு கொள்கைகளை விமர்சிப்பதும், தனி நபரை வன்மம் கொண்டு, திணிக்கப்பட்ட காட்சிகளின் மூலம் கேரக்டர் அசாசினேஷன் செய்வதும் ஒன்றன்று. அந்த வித்தியாசம் மட்டும் புரிந்திருந்தால், இந்தப் படம் மிகப் பெரிய கொண்டாட்டமாக வந்திருக்கும். மற்றவர்களையும் வம்புக்கு இழுத்தாலும், ‘உழைக்கும் மக்கள் கழகம்’ கட்சியின் நிறுவனரான அழகம் பெருமாளை அரக்கன் என்றே நேரடியாகச் சாடுகின்றார் இயக்குநர்.

அதிமுகவைத் தரமாகக் கலாய்த்துள்ளார்கள். டயர் நக்கி அமைச்சர்கள் என யமன் தனது அமைச்சர்களைக் கூப்பிடுவது என மிகச் சுதந்திரமாக ஓட்டியுள்ளார்கள். படம் முழுவதும் வசனங்கள், வசனங்கள். இடையிடையில் அவரது டைமிங் ஒன்லைனர்ஸ் சில சிரிப்பை வரவழைத்தாலும், பேசிக் கொண்டேயிருக்கிறார் யோகிபாபு. நேதாஜி சிலையைப் பார்த்து, ‘இவரைத்தான தேசத்தந்தை எனச் சொல்லியிருக்கணும்’ என எமதர்மபிரபு ஃபீல் செய்கிறார். அடுத்து காந்தி சிலை முன், ஏதோ சொல்ல வந்து சட்டென்று காட்சி கட்டாகிறது. அடுத்து காந்தியை மீண்டும் கிளைமேக்ஸில் வம்புக்கிழுத்துள்ளார். மக்களை நல்வழிப்படுத்த, பெரியார் – அம்பேத்கர் – நேதாஜி – காந்தியைப் பூமிக்கு அனுப்பி விடுகிறார் எமனான யோகிபாபு. படக்குழுவின் தேசப்பிதாவான நேதாஜி INA-வை மீண்டும் உருவாக்கி, எல்லைக்குப் போய் விடுகிறாராம்; காந்தியோ வழக்கம் போல் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்கிறாராம்.

விதியை மாற்றி எழுதியதால் தான் எமன் தண்டனை பெறுகிறார். அதை சரி செய்ய, 1+1 என்ற சலுகையை மானுடர்களுக்கு விதியை மீறித் தருகிறார். என்ன லாஜிக்கோ? சித்திரகுப்தன் அதைப் பற்றிக் கேட்கும் பொழுது, ‘வந்தா மலை, போனா மயிலாப்பூர்’ என்கிறார். அதாவது மயிலாப்பூர் என்பதை முடி, மயிறு எனப் புரிந்து கொள்ளவேண்டுமாம். அதாவது இது ஒரு அரசியல் குறியீடு என்றறறிக. இப்படியாக உருப்படியான அரசியலும் பேசாமல், சிரிப்பு வரும்படி நகைச்சுவையும் புரியாமல், ‘அடே, வாடா, போடி, க்ரீம் மண்டையா’ என இரைந்து கொண்டே உள்ளார் யோகிபாபு.

ப்ளூப்பர்ஸில், ‘அடேய்களா, மாலை 6 – காலை 6 கூர்க்கா படப்பிடிப்பு, அங்கிருந்து வந்தா நீங்க உயிரை வாங்குறீங்க. தூங்க விடுங்கடா’ என வசனம் பேச முடியாமல் சோர்ந்து விழுகிறார் யோகிபாபு. இந்தப் படத்தில் வசன உதவியும் செய்துள்ள யோகிபாபுவைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.