Shadow

எக்கோ விமர்சனம்

நம்மிலிருந்து புறப்படும் ஒலிகள் சில நேரம் சென்று தேங்கவோ, பதுங்கவோ, கரைந்து போகவோ வழியின்றி வெற்றிடத்தில் பட்டு மீண்டும் நம்மிடமே திரும்பி வரும். அந்த எதிரொலியை ஆங்கிலத்தில் எக்கோ என்கிறோம். முதல் வாக்கியத்தில் இருக்கும் ஒலிகள் என்கின்ற வார்த்தையை எடுத்துவிட்டு வினைகள் என்று வார்த்தையை நிரப்பி அதே வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படித்தால் அது தான் இந்த எக்கோ படத்தின் ஒன்லைன்.

புதுமணத் தம்பதியாக தங்கள் மணவாழ்க்கையைத் துவங்கவிருக்கும் ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி இணைக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸ்ரீகாந்திற்கு விசித்திரமான சத்தங்கள் காதைக் கிழிப்பது போல் கேட்கத் துவங்குகிறது. அது போல் துணி தொங்கும் இடத்தில் நகக்கீறல்கள், கால் பாதத்தில் படிந்து அடுத்த நொடி காணாமல் போன இரத்தம், திரைச்சீலை அவரின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயல்வது போன்ற பல அசம்பாவிதங்கள் நடக்க, அவரின் வேலைத் திறன் பாதிக்கப்படுகிறது. தன் மாமனாரின் நிறுவனத்தில் இருந்து தூக்கி எறியப்படுகிறார். இதே பிரச்சனையால் கணவன், மனைவி இடையே மனமுறிவு ஏற்படுகிறது. இதிலிருந்து மீள்வதற்கு ஸ்ரீகாந்த் ப்ளாக் மேஜிக் நிபுணரான ஆஷிஷ் வித்யார்த்தியைச் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து நிகழ்ந்தது என்ன, ஏன் அந்த அமானுஷ்யம் ஸ்ரீகாந்த் கண்ணிற்கு மட்டும் தெரிகிறது, அதை ஏன் தன் மனைவி மற்றும் மாமனாரிடம் சொல்லாமல் ஸ்ரீகாந்த் மறைக்கிறார், அந்த அமானுஷ்யத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு, அதிலிருந்து அவர் தப்பிப் பிழைத்து வந்தாரா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது எக்கோ திரைப்படத்தின் திரைக்கதை.

பேய்களையே காட்டாமல் வெறும் விசித்திரமான சத்தங்கள் அமானுஷ்ய உருவங்கள், டிவியில் தானாக ஓடும் பேய்த் திரைப்படங்கள், இவற்றை மட்டும் வைத்துக் கொண்டே பேய்ப் படத்திற்கான திகிலைக் கொண்டு வர முயற்சி செய்திருப்பது வரவேற்கத்தக்க வித்தியாசமான முயற்சி தான். ஆனால் அந்த உணர்வைக் கொடுப்பதற்கு கதையோ, காட்சிகளோ அல்லது திரைக்கதையோ எதுவுமே ஒத்துழைக்கவில்லை என்பது தான் உண்மை.

ஸ்ரீகாந்த், ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் ஆகிய மூவரும் வரும் அலுவலகம் தொடர்பான காட்சிகள் எல்லாம் திரெளபதி காலத்து திராபைகள். அந்த மொத்தக் காட்சிகளையும் ஒரு அரை மணி நேரம் அமர்ந்தாலே எழுதிவிடலாம் போல் தோன்றுகிறது. அந்தளவுக்குப் பார்த்துப் பார்த்து சலித்த காட்சிகள். அது போல் ஒட்டவே ஒட்டாது தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்ரீகாந்த் அம்மாவின் காட்சிகள். அந்தக் கிராமத்து அத்தியாயம் தான் கதையில் நிகழும் முக்கிய மாற்றத்திற்குக் காரணம் என்றாலும் கூடக் காட்சியமைப்பில் எந்தப் புதுமையுமே இல்லை.

ஸ்ரீகாந்தின் அம்மா கதாபாத்திரத்தில் வரும் ராஜா ராணி சிவகாமியான பிரவீனாவிற்கு, ஊரை நினைத்தும், மகனை நினைத்தும், துயர் கொள்ளும் கதாபாத்திரம். அவரின் திருமணத்தால் தான் ஊரில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தது, கோயில் பாழடைந்து போனது என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பின்கதை படத்தில் மருந்துக்குக் கூட சொல்லப்படவே இல்லை. அந்த ஊராரின் பழிச் சொல்லை மறக்கச் செய்யவே வித்யா பிரதீப்பிற்கும் ஸ்ரீகாந்திற்கும் திருமணம் நடக்கிறது என்கின்ற சப்பைக்கட்டு வேறு. சிறந்த நடிகர்களான டெல்லி கணேஷ், காளி வெங்கட் போன்றோர் ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு போகின்றனர்.

ப்ளாக் மேஜிக் நிபுணராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தியின் நிலைமை அதைவிடப் பரிதாபம். ஓர் இருண்ட பங்களாவிற்குள் மங்களான வெளிச்சத்தில் நான்கைந்து கருப்பு உடையணிந்த கையாட்களைக் காட்டி விட்டால் அவர்கள் மேஜிக் நிபுணரின் குழுவைச் சேர்ந்தவர்களாகி விடுவார்களா என்ன? அதிலும் குறிப்பாக அவர் ஸ்ரீகாந்த வீட்டுக்கு அமானுஷ்யத்தைப் பற்றி ஆராய வரும் காட்சியைப் பார்க்கும் போது ஏதோ சிசிடிவி கேமரா மாட்ட வந்த கும்பலும், திருட வந்தவனும் ஒவ்வொரு கதவாகத் திறந்து பார்க்கும் காட்சியும் நினைவில் வந்து போகிறது.

நரேன் பாலகுமாரின் இசையும் சிறப்பு சத்தமும் சேர்ந்து படத்தைக் காப்பாற்ற முடிந்த வரை போராடுகின்றன. ஆனால் அதற்கு வலு சேர்ப்பது போன்ற கதையோ, காட்சிகளோ, திரைக்கதையோ இல்லாத காரணத்தால் எக்கோ நம் மனதில் பட்டு எதிரொலிக்காமல் ஆழ்கடலின் அடியாழத்தில் கரைந்து காணாமல் போகிறது.

– இன்பராஜா ராஜலிங்கம்