Shadow

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு விமர்சனம்

ஒரு நல்ல திரைப்படம் வந்தால், அதை அப்படியே காப்பயடிப்பது போல் மோசமான பல திரைப்படங்கள் வரும்.  அந்த வரிசையில் வந்திருக்கும் திரைப்படம் “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”.  ஒரு நல்ல கருத்தை கூட எப்படி யாருமே ஏற்றுக் கொள்ளமுடியாத விதத்தில் கூறுவது என்பதற்கான சமீபத்திய உதாரணமாகவும் விளங்குகிறது “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”.

வெண்ணிலா கபடிக் குழு,  ஜீவா போன்ற விளையாட்டுத் தொடர்பான பட வரிசையிலும் இப்படத்தை வைத்துப் பேச முடியும். அதே போல் சம காலத்தில் போற்றுதலையும் விவாதங்களையும் கிளப்பி வரும் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் பட வரிசையிலும் இப்படத்தை வைத்துப் பேச இயலும். எதை முன்னிட்டு என்றால் விளையாட்டுத் துறைக்குள் இருக்கின்ற அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சாதிய வன்கொடுமைக்கு எதிரான எழுச்சி என இந்த இரண்டையும் முன்னிட்டு தான்.

ஆனால் மேற்கூரிய உதாரண திரைப்படங்கள் எல்லாமே அதை ஒரு கலை வடிவில் அணுக முற்பட்டன. அக்கதைகளில் அந்த மக்களின் வாழ்வியலும் வலி நிறைந்த தருணங்களும் யதார்த்தத்திற்கு மிகமிக நெருக்கமாக படம்பிடித்து நமக்குக் காட்டப்பட்டிருந்தன. இதனால் அவர்களின் வலியை ஓரளவிற்காவது உணர்ந்த நாம், அது போன்ற திரைப்படங்களை ஆதரித்து பாராட்டி வந்தோம்.

ஆக இது போன்ற விடயங்களை உள்ளடக்கி இருந்தாலே அது நல்ல படம் ஆகிவிடும், மக்களும் நம்மை பாராட்டித் தள்ளிவிடுவார்கள் என்பது போன்ற மேம்போக்கான எண்ணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான், “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”.

மர அறுவை மில் வியாபாரமும் இன்னும் பல தொழில்களும் செய்யும் வில்லத்தனமான தொழிலதிபர்,  அந்த ஊரில் கால்பந்து விளையாடி முன்னேறிவிட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் கூட்டம், இவர்கள் ஜெயித்து வெளியே சென்றுவிட்டால்,  தன் மில் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆள் கிடைக்கமாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டு (பாவம் இந்த வில்லன் தொழிலதிபருக்கு வடநாட்டு கூலித் தொழிலாளிகளைப் பற்றி தெரியாது போலும்), தன் அதிகாரத்தினை பயன்படுத்தி அவர்கள் மாவட்ட அளவில் தேர்வாகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். நியாயம் கேட்க வந்த அந்த இளைஞர்களை வழிநடத்தும் பயிற்சியாளரையும் கொன்றுவிடுகிறார். இதற்கு அந்த மொத்த இளைஞர் பட்டாளமும் பழி வாங்குகிறது. இது தான் மொத்த கதையும்.

இந்தக் கதையில் அந்த இளைஞர்கள் கால்பந்தாட்டத்தை எந்த அளவிற்கு உயிராக நினைக்கிறார்கள் என்கின்ற காட்சி இல்லை. அந்த விளையாட்டிற்காக எந்த அளவிற்கு தங்கள் வாழ்க்கையில் பல விசயங்களை தியாகம் செய்கிறார்கள் என்பது இல்லை. இந்த இளைஞர்களின் வாழ்க்கை சூழல் எப்படி இருக்கிறது, அந்த இளைஞர்களில் ஒருவரின் குடும்ப வறுமையையாவது காட்டும் காட்சி  இல்லவே இல்லை.  இந்த இளைஞர்கள் அந்த தொழிலதிபரின் மில் அல்லது தொழிற்சாலையில் கூலிக்கு வேலை செய்யும் காட்சி அதுவும் இல்லை.  இப்படி அந்த இளைஞர்களின் வாழ்க்கையோ, வலியோ, அந்த வில்லன் நடிகரின் ஆணவ மிடுக்கோ, அதிகாரத் திமிரை வெளிப்படுத்தும் காட்சிகளோ படத்தில் துளி அளவிற்கு கூட இல்லை.

அதில் இருப்பதெல்லாம் ‘நாம் காலத்திற்கும் அவர்கள் காலை நக்கியே பிழைக்க வேண்டும் என்று நினைக்கும் அவர்களை வேரறுக்க வேண்டும். அராஜகத்தின் ஆணி வேரை பிடுங்க வேண்டும்” என்கின்ற கொலைவெறி வசனங்கள் படம் நெடுகவும், துள்ளத் துடிக்க நடக்கும் மூன்று கொலைகளும், திராபையான இரண்டு கால்பந்தாட்ட போட்டியும், ஒரு காதல் டூயட்டும்,  இது போக அந்த இளைஞர் பட்டாளத்திற்கும் வில்லனின் ரவுடிகள் பட்டாளத்திற்கும் முதல்பாதி  முழுக்க நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டும் படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு படுக்கையறை காட்சியும்தான்.

இது தவிர்த்து அப்படத்தில் மறந்தும் வேறெந்த காட்சிகளையும் இயக்குநர் ஹரி உத்ரா வைக்கவில்லை.  பழி வாங்கினால் எல்லாமே சரியாகிவிடும் என்கின்ற மொண்ணையான புரிதலை வைத்துக் கொண்டு, அதை படமாகவும் எடுத்து, யோசித்து எது சரி, எது தவறு, எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதைக் கூட பிரித்தரியத் தெரியாத இளம் சிறார்களை இது போன்ற திரைப்படங்கள் தவறான திசையில் வழிநடத்தும் என்பதை தவிர்த்து இப்படம் குறித்து சொல்ல வேறேதும் இல்லை.