Shadow

ஈக்வலைஸர் 2 விமர்சனம்

Equalizer2-movie-review

தன் கண்ணெதிரே தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து மீட்டு, தவறைச் சரி செய்வதால் நாயகனுக்கு ஈக்வலைஸர் எனும் குறியீட்டுப் பெயரைத் தலைப்பாக வைத்துள்ளனர்.

முதல் பாகம் பார்த்தவர்கள், ராபர்ட் மெக்காலை நெருக்கமாக உணர்வார்கள். இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முந்தைய பாகம் போலின்றி, முதல் ஃப்ரேமிலேயே அதிரடி ஆக்ஷனை ஆரம்பித்து விடுகிறார் ராபர்ட் மெக்காலாக வரும் டென்செல் வாஷிங்டன். இஸ்தான்புல்லுக்குச் செல்லும் துருக்கி இரயில் ஓடும் மலைப்பாதை மிக அற்புதமான இயற்கை எழிலில் அமைந்துள்ளது. அந்த இயற்கையின் அமைதிக்கு எந்தப் பாதகமும் விளைவிக்காமல், கடத்தப்படும் குழந்தையைச் சொற்ப நொடிகளில் மிக அசால்ட்டாக மீட்கிறார் மெக்கால். அவருக்கு எல்லாமே மிக நேர்த்தியாக ப்ரோட்டோகால் படி கனகச்சிதமாகக் குறித்த நேரத்தில் நிகழவேண்டும்.

மனைவியை இழந்து, தன் அடையாளத்தை அழித்துக் கொண்டு நடைப்பிணமாய் மறைந்து வாழும் மெக்கால், ஏஜென்சியில் உள்ள சூசனின் உதவியோடு ரஷ்யா மாஃபியா கும்பலை வேரோடு அழிப்பார் முதல் பாகத்தில். மிக வலுவான ஒரு குழுவை மிக இலாகவமாகத் தனக்கேரிய அசத்தலான பாணியில் அதிரடியாய் அழிப்பார். அதன் நீட்சியாகத் தன்னால் இயன்ற சிறுச் சிறு உதவிகளை இப்பாகத்தில் தொடர்கிறார். முதல் பாகம் போல் வலுவான வில்லன்கள் இப்படத்தில் இல்லாதது குறை. தனது ஆருயிர் தோழி சூசனைக் கொன்றவர்களைத் தேடிப் பழிவாங்குகிறார். ‘உங்க ஒவ்வொருவரையும் கொல்வேன். ஆனால் ஒருமுறை தான் கொல்ல முடியும் என்பதில் எனக்கு வருத்தம்’ எனச் சொல்லிவிட்டுக் கொல்வார்.

கெளரவ வேடத்தில் முதல் பாகத்தில் தோன்றும், சூசனக்கு இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். சூசனாக நடித்துள்ள மெலிஸா லியோ கலக்கியுள்ளார். ஒரு தோழியாக அவர் நாயகன் மீது எடுத்துக் கொள்ள உரிமையும், அவர் மீது காட்டும் அக்கறையும் நன்றாக உள்ளன. முதல் பாகத்தில் அலினா எனும் இளம்பெண்ணின் திசை மாறிய வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவார் மெக்கால், அதே போல் இப்பாகத்தில் மைல்ஸ் எனும் இளைஞனின் வாழ்க்கையைச் சீர் செய்கிறார். ஆனாலும், முதல் பாகத்தின் ஆழம் இப்படத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும். இயக்குநர் ஆண்டோன் ஃபூக்வா அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.