எந்தவித குற்றமும் செய்யாமல் சிறைக்குள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகளின் நிலையைப் பற்றி பேசுகிறது ஃபைண்டர் திரைப்படம்.
குற்றவியல் தொடர்பான படிப்பில் முதுகலை பெற்ற மாணவர்கள் சிலர் இணைந்து தனியார்மயமான துப்பறியும் நிறுவனம் ஒன்றை துவங்குகிறார்கள். இவர்களுக்கு அவர்கள் படித்த அதே கல்லூரியில் படித்து விட்டு தற்போது அரசுத்தரப்பு வக்கீலாக பணியாற்றி வரும் நிழல்கள் ரவி உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார். குற்றம் இளைக்காமல் சூழ்நிலை காரணமாக சிறையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்பதை தங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்பட விரும்பும் இந்த மாணவர்கள் தங்கள் அமைப்பிற்கு ஃபைண்டர் என்று பெயர் வைத்து, தங்கள் நோக்கம் குறித்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கிறார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பலரும் எங்களுக்கு உதவுங்கள் என்று வந்து நிற்க, அதில் உண்மையாகவே நிரபராதி போல் தோற்றமளிக்கும் மீனவக் குப்பத்துப் பீட்டரின் (சார்லி) வழக்கை அவர்கள் விசாரிக்கத் துவங்குகிறார்கள். பீட்டர் என்ன குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். அவர் வாழ்க்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது திரைக்கதை.
மீனவ குப்பத்து நடுத்தர வயது நிரம்பிய அப்பாவாக, தன் மகளின் எதிர்காலம் குறித்த கடலளவு விரிந்த கனவுகளுடன் துடுப்பு போட்டு மீன் பிடிக்கும் தகப்பனாக கவனம் ஈர்க்கிறார் சார்லி. எனக்கு விடுதலை வாங்கிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தாய் இல்லாமல் தவிக்கும் என் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கலங்கும் போது நம் கண்களை கண்ணீரில் நிறைக்கிறார்.
பீட்டராக வரும் சார்லியின் மைத்துனராக ராயன் கதாபாத்திரத்தில் செண்ட்ராயன் நடித்திருக்கிறார். தாங்கள் எப்படி வேளச்சேரி கவுன்சிலரை கொலை செய்தோம் என்பதை செய்முறை விளக்கம் கொடுக்கும் போது, குரூரமான ஒரு கொலைகாரனை நம் கண் முன் நிறுத்துகிறார்.
மீனவக் குப்பத்து இளம்பெண்ணாக வரும் பிரனா அப்துல்சலாம் தன் அப்பாவைக் காப்பாற்றுங்கள் என்று வக்கீலிடம் திரும்ப திரும்ப சென்று கதறும் இடங்களிலும், தன் அப்பாவிற்கு என்ன நடந்தது என்பதை விளக்கும் இடத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஃபைண்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளராகவும், நாயகனாகவும் நடித்து இப்படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் வினோத் ராஜேந்திரன். சமூகத்திற்கு தேவையான விவாதிக்கப்பட வேண்டிய கதைக்களனை எடுத்துக் கொண்டு அதை எந்தளவிற்கு சுவாரஸ்யமாகக் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். விசாரணை தொடர்பான காட்சிகள் தான் அதிகமாக இருப்பதால் நடிப்பு பெரிதாக மைனஸாகவும் இல்லாமல் ப்ளஸாகவும் இல்லாமல் இருக்கிறது.
தாரிணி ரெட்டி முதன்மை பெண் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கவுன்சிலர் மனைவியை மிரட்டி வழக்கு விசாரணைக்கு துணைபுரியச் செய்யும் இடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி, கோபிநாத் சங்கர் மற்றும் நாசர் அலி மூவரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பேபி ஆண்டனியின் ஒளிப்பதிவு சென்னை உயர்நீதிமன்றம், பழவேற்காடு ஏரி, மீனவக் குப்பம் என கதைக்களனோடு சேர்ந்து இயல்பாக இயங்கி இருக்கிறது. சூர்ய பிரசாத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான புதிர்தன்மையை சிறப்பாக கடத்தியிருக்கிறது.
திரைப்பட்த்தின் முதல்பாதி விசாரணை, அதில் இருக்கும் மர்மங்கள், முடிச்சுகள் என ஜெட் வேகத்தில் பறக்கிறது. இரண்டாம் பாதியில் இன்கம்டேக்ஸ் ரெய்டு, சாமியார், பணப் பிரச்சனை என்று சற்று பழகிய பாதையில் பயணிக்கத் துவங்குகிறது. கவுன்சிலரின் சடலம் கிடைக்காததன் பின்னணியில் இருக்கும் மர்மம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.
சமூகத்திற்கு தேவையான கதைக்களனை எடுத்துக் கொண்டு, அதை சுவாரஸ்யமிக்க படைப்பாக மாற்றுவதில் ஃபைண்டர் படக்குழுவினர் அறுபது சதவீத்த்திற்கும் அதிகமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மிகச் சிறப்பான முதல் பாதியும், சராசரியான இரண்டாம் பாதியும் ஃபைண்டர் திரைப்படம் எந்த தியேட்டரில் ஓடுகிறது என்பதை ஃபைண்ட் செய்து பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தகுதியுடைய படமாக மாற்றி இருக்கிறது.
ஃபைண்டர் அத்தியாயம் – 1 : சமூகத்தின் தேவை.