Shadow

ஹிட்லர் விமர்சனம்

படைவீரன் (2018), வானம் கொட்டட்டும் (2020) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் SA தனாவின் மூன்றாவது படம். ‘வானம் கொட்டட்டும்’ எனக் கதைக்குப் பொருந்தும் கவித்துவமான தலைப்பை வைத்தவர், இப்படத்திற்கு ‘ஹிட்லர்’ எனும் பொருந்தாத தலைப்பை வைத்திருக்கும் வாய்ப்புக் குறைவாகவுள்ளது. ‘பிச்சைக்காரன்’ எனும் எதிர் தலைப்பு ஈட்டிக் கொடுத்த வெற்றியினால் உந்தி, ‘சைத்தான் (2016)’, ‘எமன் (2016)’, ‘திமிரு பிடிச்சவன் (2018)’, ‘கொலைகாரன் (2019)’ என எதிர் தலைப்புகள் வைப்பதில் ஆர்வம் காட்டினார் விஜய் ஆண்டனி. அதன் தொடர்ச்சியாக ‘ஹிட்லர்’ எனும் தலைப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார் எனப் படுகிறது. மற்ற தலைப்புகளில் இல்லாத அரசியல் பிழைத்தனம் ‘ஹிட்லர்’ எனும் தலைப்பில் உள்ளது. நாயகனை ஹிட்லர் என அழைத்து, அம்மனிதகுல விரோதியை மகிமைப்படுத்துவது பெருங்குற்றத்தில் வரும். இயக்குநர், வில்லனின் சர்வாதிகாரத்தன போக்கைக் குறிக்கும் விதமாக இத்தலைப்பு சூட்டப்பட்டுள்ளது எனச் சொல்லியுள்ளார். ஆனால் படத்தில் வில்லன், சர்வாதிகாரி போக்கு நிரம்பிய பெரும் வில்லத்தனம் நிரம்பியவரும் இல்லை. பொதுச்சமூகத்தால், ‘இதெல்லாம் சகஜம்’ என ஏற்றுக் கொள்ளப்பட்ட லஞ்ச லாவண்யத்தில் ஊறித் திளைக்கும் ஊழல் அரசியல்வாதியான பொதுப்பணித்துறை அமைச்சர்தான் படத்தின் வில்லன்.

ஜென்டில்மேன் (1993) படத்தின் கருவை நினைவுறுத்தும்படியாக உள்ளது இப்படத்தின் அடிநாதம். அப்படத்தில், பெரிய தொகையை வாய்ப்புக் கிடைக்குமிடத்தில் எல்லாம் திருடுவார் நாயகன். இந்தப் படத்தில், சுமார முன்னூற்று சொச்சம் கொடி கருப்புப் பணத்தை வில்லனிடம் இருந்து மட்டுமே திருடுகிறார் நாயகன். அதற்கான காரணத்தையும் படக்குழு வெளியிட்டுள்ள ஸ்னீக் பீக்கில் இருந்து யூகித்துவிடலாம்.

மணிரத்னம் படத்தில் வரும் நாயகிகளைப் போல், இப்படத்து நாயகியை உருவாக்க முயன்றுள்ளார் தனா. பெரிய அறிமுகம் இல்லாத ஆணுடன் அமர்ந்து ‘ரெட் வைன்’ அருந்தும் நவீன நாயகி. வேலை நிமித்தமாகத் தன் திறமையை அப்டேட் செய்து கொள்ள விரும்பாத, அதனால் குற்றவுணர்ச்சி கொள்ளாத, அழகு பதுமையாக மட்டும் சுருங்கி விடுகிறார் ரியா. சுதந்திரமான மனோபாவத்தை வெளிப்படுத்தும் ஃப்ரீக்கி கேர்ளாகக் கதாநாயகியைக்
கட்டமைக்கத் திணறியுள்ளார்.

சென்னைக்குள் புதிதாய் ஒலிக்கும் ரஷ்யத் தயாரிப்பு துப்பாக்கி முழுக்கத்தைத் தடுக்க முனைப்புடன் செயற்படும் காவல்துறை உயரதிகாரியாக கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். ட்ரெயினில் இருந்து, அடியாட்களை அடித்துப் போட்டு தொலைக்காட்சி பெட்டிகளில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் எந்த ஸ்டேஷனில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டியுடன் இறங்குகின்றனர் எனும் முதல் கொள்ளையின் பொழுது நிகழும் சிறு விஷயத்தையே, இரண்டாம் கொள்ளை நடந்த பிறகே கண்டுபிடிக்கிறார். ஜெண்டில்மேன் படத்தில், கெளதம் வாசுதேவை விட பெட்டராகத் துப்புத் துலக்குவார் சரண்ராஜ்.

இப்படத்தின் வில்லனாக சரண்ராஜ் நடித்துள்ளார். ‘என்ன பண்ணுவியோ தெரியாது. எனக்குப் பணம் வேணும்’ என கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்லும் பரிதாபத்தற்குரிய வில்லனாக இருக்கிறார். சரண் ராஜிற்கான வசனங்களையாவது கவனத்துடன் ரசிக்கும்படிக்குத் தனித்துவமாக அமைத்திருக்கலாம். சரண்ராஜின் தம்பியாக டாணாக்காரன் இயக்குநர் தமிழ் நடித்திருக்கிறார். ‘சிறுசு’ எனும் கதாபாத்திரமும், அதை ஏற்று நடித்தவரும் ரசிக்க வைக்கின்றனர்.

கெளதம் வாசுதேவ் மேனனுக்குக் கொடுத்த பில்டப் அளவிற்குக் கூட இல்லாமல் மிகச் சாதாரணமாய் அறிமுகமாகிறார் விஜய் ஆண்டனி. கெட்டப்பையும் செட்டப்பையும் மாற்றியதோடு மட்டுமல்லாமல், விஜய் ஆண்டனி வசனம் பேசும் தொனியையும் மாற்ற முயற்சி செய்துள்ளார். அந்த மாற்றத்தின் ஆயுசு, “ஹை மாப்பி” என அறிமுக காட்சியில் ரெடின் கிங்ஸ்லியிடம் உரையாடும் காட்சியோடு மறைந்து விடுகிறது. அழகாக இயக்குநரின் கை பிடித்து, தனது வழக்கமான கம்ஃபோர்ட் ஜோன்க்கு அழைத்துச் சென்றுவிடுகிறார் விஜய் ஆண்டனி.

மொபைலில் காணும்போதே பதற்றத்தை ஏற்படுத்தும் அசத்தலான ஸ்னீக் பீக்கின் விஷுவல், பெரிய திரையில் மிரட்டும்விதமாக உள்ளது. அந்தப் பதற்றத்திற்காகத்தான் இந்தக் கொள்ளை என்பதை யூகிக்க அத்தனை சிரமப்படுவார்களா என்ன பார்வையாளர்கள்? க்ளைமேக்ஸில், நாயகனும் வில்லனும் நேருக்கு நேர் சந்தித்த பின் கூட பார்வையாளர்கள் யூகித்துவிடும் விஷயத்தைப் போட்டு உடைக்காமல், அந்த இடத்தில் டீஸர் கட் போல் எடிட் செய்து பொறுமையைச் சோதிக்கின்றனர். அந்த ஸ்னீக் பீக் காட்சியைத் தவிர்த்து, மறந்தும் கூட கதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் காட்சிகள் அமைந்துவிடக் கூடாது என நினைத்துவிட்டார் போலும் படத்தொகுப்பாளர் சங்கத்தமிழன்.