Shadow

சென்சாரில் ”60 – கட் கொடுத்தார்கள்” – ‘ரா ரா சரசுக்கு ராரா’ பட இயக்குநர் பேச்சு

ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஏ. ஜெயலட்சுமி தயாரித்து, கேசவ் தெபுர் இயக்கியிருக்கும் திரைப்படம் “ரா ரா சரசுக்கு ரா ரா”. ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு பணிகளை கையாள, ஜி.கே.வி இசையமைத்துள்ளார். 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம்  வரும் நவம்பர் 3-ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி பேசும்போது, “தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே.ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம்  சந்தோஷமாக இருக்க வேண்டும், தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படத்தை  நாங்கள் எடுத்துள்ளோம்.இப்பொழுது  கத்தி, வெட்டு குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும்படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது  வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்படியாக இருக்கும். 

படத்தை எடுக்கும்போது நாங்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். இதன் படப்பிடிப்பு  வேலூரில் நடந்த போது போலீஸ் தொல்லைகள் தினம் தினம் இருந்தன. சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர், கமிஷனர் வரை எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக ஆதரவாக காட்பாடி ராஜன் அவர்கள் இருந்தார். அவருக்கு எங்கள் படக்குழு சார்பாக நன்றிகள்.. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது..”  என்று பேசினார்.

படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசும்போது, “என்னிடம் இந்தத் தலைப்பை பார்த்து  படம் கிளுகிளுப்பாக இருக்குமா..? என்று கேட்டார்கள். நீங்கள் நினைப்பது போன்ற கிளுகிளுப்பு இருக்காது ; சந்தோஷமான கிளுகிளுப்பாக இருக்கும் என்றேன். நான் சிறு வயது முதல் தலைவர் ரஜினி அவர்களின் ரசிகன். அவர் படங்களில் நடனக் கலைஞராகவும், நடன உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து இருக்கிறேன்.

இந்தத் தலைப்பு பற்றி நான் தயங்கிய போதுகூட, தயாரிப்பாளர்தான், இந்த தலைப்பை மாற்றக்கூடாது என்று உறுதியாக இருந்தார்கள். ‘சந்திரமுகி’ படத்தில் இருந்து அந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டேன். சரசு என்றால் மோகம் மட்டுமல்ல சந்தோஷம் என்றும் குறிக்கும். இந்தப் படத்தை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் எடுத்தோம் .தினசரி ஒரு பிரச்சினை வரும். அப்படி 45 நாட்களும் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போதுதான் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும்.

ஆனால், உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது எங்களுக்கு அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள் .இப்படி முதல் நாள் 300 நடனக் கலைஞர்களுடன் நாங்கள் தயாராகி விட்டோம் .அனுமதி வேண்டும் என்று எங்களுக்குத் தொந்தரவு கொடுத்தார்கள். இப்படிப் படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களிலும் தொல்லைகள் தொடர்ந்தன. ஆனால் அப்போதெல்லாம் தயாரிப்பாளர் தைரியமாக அதை எதிர்கொண்டு சமாளித்தார்.

படத்தில் 60 கட்கள் சென்சாரில் கொடுத்தார்கள். அதனால் என்னை ’60 கட் டைரக்டர்’ என்று கூறுகிறார்கள்.  நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள்.

“படத்திற்கு நாங்கள் யூ சர்டிபிகேட் கேட்கவில்லை.ஏ சர்டிபிகேட்தான் வேண்டும்” என்று கேட்கிறோம். “இது அடல்ட் படம்” என்றுதான் கூறினோம். ஆனால்,  சென்சாரில் எதுவுமே முடியாது என்று கைவிட்டுவிட்டார்கள். “நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டி  செல்லுங்கள் .இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்லுங்கள்..” என்றார்கள். ரிவைசிங் கமிட்டிக்கு சென்றோம். அங்கே நடிகை கௌதமிதான் தலைவராக இருந்தார். “இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்ல போகிறீர்கள்?” என்றார். “லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன அப்படி நடக்க கூடாது என்று நாங்கள் சொல்கிறோம்” என்றோம்.

அவர்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை. நான்கு பக்கம் அளவில் குறிப்பிட்டு நீக்கச் சொன்னார்கள். “நக்மா என்று பெயர் இருக்கக் கூடாது” என்றார்கள் . “லலிதா” என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள். அந்தப் பெயர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்ல சாதாரணமாக இருக்கக் கூடியதுதான். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு அவமதித்தார்கள்.  விளக்கிப் பேசும்போது  கையைக்  காட்டிப்  பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி “மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுங்கள்” என்றார்கள்.  ஒரு  காட்சியில்,  கதாநாயகன், கதாநாயகியை கீழேயிருந்து மேலே பார்க்கிறான். “அந்தக் காட்சியைத் தூக்குங்கள்” என்றார்கள். நாங்கள் விளக்கம் சொன்னால் எதுவும் பேசக் கூடாது. வெளியே போங்கள் என்று சொன்னார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கே எங்களை மோசமாக நடத்தினார்கள் .

சென்சார் விதிகள் எல்லாம் 1952-ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும் வாழ்க்கை முறையும், கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால், அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள். 5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார் விதிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும். இவர்கள் அப்படிப் பெயர்களை எடுக்கச் சொன்னதால் டப்பிங் எல்லாம் மாற்ற வேண்டி இருந்ததால் தயாரிப்பாளருக்கு கூடுதலாக ஆறு லட்சம் செலவானது. ஒரு புதிய சிறிய தயாரிப்பாளருக்கு இதெல்லாம் அநியாய செலவுதான்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு என்று நேரடிப் படம் போலவே எடுத்துள்ளோம். இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.  ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு ஐந்தாறு ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் அலைய வேண்டி உள்ளது. இப்படி பலரும் சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் நினைத்து நான் கண் கலங்கி அழுதிருக்கிறேன். நம்மை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் காப்பாற்றுவது நமது கடமை அல்லவா? தயாரிப்பாளர் தந்தை போன்றவர். அப்படித் தந்தை ஸ்தானத்தில் உள்ளவருக்கு நான் துரோகம் செய்ய முடியுமா? ஏமாற்ற முடியுமா? படத்தில் நாங்கள் கருத்து சொல்லவில்லை. ஒரு அடல்ட் காமெடி படம்தான் எடுத்துள்ளோம்” என்றார்.

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசும்போது, “இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை. அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் .அந்த நாலு பேருக்கும் நன்றி!

புதிதாக  இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும். இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 250 முதல் 300 படங்கள்  வெளியிட முடியாமல் உள்ளன. ஏனென்றால் கியூபுக்கு 15 முதல் 20 லட்சம் கட்ட வேண்டும். விளம்பர செலவுகள் 50 லட்சம் ஆகும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. சிறிய தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படம் எடுக்கிறார்கள்.

இந்தப் படத்தை வெளியிடும்  விநியோகஸ்தரும்  தைரியமாக நவம்பர் 3 ஆம் தேதி வெளியீடு என்று அறிவிப்பு  செய்துள்ளார்கள்.

இது  ஒரு  அடல்ட் படம். இது இப்படித்தான் இருக்கும். இதை  ரசிப்பதற்கும் மக்கள் இருக்கிறார்கள். இதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதற்காக ஒரு படம் எடுப்பது தவறில்லை .பல கோடி ரூபாய் வசூல் செய்யும் பெரிய ஹீரோ  படத்தில் நடித்த நடிகையை இதைவிட மோசமாக காட்டியுள்ளார்கள்.

இயக்குநர் கேசவை நான் பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். அவர் இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்? இந்தக் கதையைப் பார்த்து இப்படி நாட்டில் நடக்குமா? என்று கேட்பார்கள். இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு மரியாதை கொடுங்கள் நம் பண்பாட்டை மறந்து விடக்கூடாது என்கிறார்.

இப்போது  பெரிய கதாநாயக நடிகர்களே மோசமாக வசனம் பேசுகிறார்கள். தலைமுடியைக் காட்டி வசனம்  பேசுகிறார்கள்.இப்போது வருகிற படங்கள் எல்லாமே பழிவாங்கும் கதைகள். எதற்கெடுத்தாலும் துப்பாக்கி.. எதற்கெடுத்தாலும்  கத்தி.. என்று உள்ளது. சமூகத்தில் 18 வயது பையன் கத்தி தூக்கி கொண்டு திரிகிறான். இப்போது இருக்கிற படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.  பெரிய கதாநாயகர்களை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது.  அப்படி இருக்கும்போது இப்படி அதிக வன்முறைகள் வெட்டு குத்து என்று நடிப்பது சிகரெட் புகைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பெரிய கதாநாயகன் செய்யும்போது அதைப் பின்பற்றி ஒரு கூட்டமும் அதையே செய்யும் .

அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும்போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம்.  அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25ஆயிரம் ரூபாய்  லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது.இதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒரு முறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும்  பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.

நான் 2004 இல் இதே தலைப்பை என் படத்திற்கு வைத்தேன். ஆனால் அப்போது எதிர்ப்புகள் இருந்ததால் நான் பின் வாங்கி விட்டு விட்டேன். ஆனால், இந்தத் தயாரிப்பாளர் போராடி அதே தலைப்பை வாங்கி இருக்கிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

இப்போது கூட இருப்பவர்களே உதவியாக இருப்பதில்லை. அவர்களே பெரிய பிரச்சினையாக இருக்கிறார்கள். நிலைமை மாறும் போது எல்லாவற்றையும் போட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். இதுதான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இயக்குநர் தயாரிப்பாளர் உடன் இருப்பதும் அவரது நிலைமை புரிந்திருப்பதும் பாராட்டுக்குரியது. இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” என்றார் கே ராஜன்.

விழாவில் விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன், படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வி., எழுத்தாளர் பொன். முருகன், கலை இயக்குநர் ராமச்சந்திரன், சண்டை இயக்குநர் ராஜாசாமி, பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம்,   படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா, படக் குழுவினருக்கு நெருக்கமான நண்பர்கள் வேலூர் வெங்கடேசன், அண்ணாமலை, சின்னையா, தாமு, காளிராஜன், காத்து கருப்பு கலை, தயாரிப்பாளர் சுப்பிரமணியன் மலைச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்

 9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் வரும் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.