Search
Karnan 2021 review

கர்ணன் விமர்சனம்

Karnan 2021 review

“என்னத்துக்கு பழங்கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு? முன்பு இப்படியான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கும். இப்போ அப்படியில்லை தானே? அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன?” என்ற கேள்வியைக் கடக்காமல், இந்தப் படத்தைப் பார்க்கச் சுற்றம் சூழத் திரையரங்கிற்குச் செல்பவர்கள் பாக்கியசாலிகள்.

ஏன் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்? நாம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் என்பதை நினைவுப்படுத்தி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவா? இல்லை. எதேச்சதிகாரம், காலனிய ஆட்சியின் அடக்குமுறை, சுதந்திரத் தாகம், சுதந்திரத்துக்காகப் போராடிய மக்களின் எழுச்சி, அவர்களின் வீரம் என சுதந்திர தினம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை.

முன்னோர் பெருமையைப் பழங்கதையாகப் புறக்கணிக்காமல், வாட்ஸ்-அப்பில் ஃபார்வேர்ட் செய்து மகிழ்ச்சியடையும் ஒரு சமூகத்திற்கு, முன்னோர்கள் அனுஷ்டித்த சமூக அநீதியைப் பற்றித் தெரிந்து கொள்வதும் மிக அவசியம். இரண்டாம் உலகப் போர் 1945 இல் முடிந்திருந்தாலும், அப்போரினால் பாதிக்கப்படும் போலந்து நாட்டு யூத அகதிகளின் அவலத்தை, அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் விதமாக, 1993 இல் வெளியான ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படம் எடுக்கப்பட்டிருக்கும். இன்று பிறந்து, நாளை துளிர்விடும் ஒரு பதின் பருவத்தவர் அப்படத்தைப் பார்த்தால் கூட, போரின் கோர முகத்தை அறிந்து ஸ்தம்பிப்பது உறுதி.

‘நாஜிக்கள் எப்பொழுதோ இனவெறியால் யூதர்களைக் கொன்று குவித்தார்கள். அதையே எத்தனை காலம் பேசிக் கொண்டே இருக்கப் போகிறோம்?’ என்ற கேள்வி எவரேனும் எழுப்பினால், ஆஷ்விட்ச் வதைமுகாம்களில் நடந்த படுகொலைகளும், நமது கண் முன் ஈழத்தில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் ஒன்று என்பதே அதற்கான பதில். அதாவது மனிதன், பழங்கதைகளை, அவை எதுவாகினும் அவற்றைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பான். அதனால் மனிதனுக்குப் போர் பற்றியும், அதன் பாதிப்பு பற்றியும், இனவெறி குறித்தும், இன ஒழிப்பு குறித்தும், சாதி பற்றியும், அதன் கொடுமைகளைப் பற்றியும் நினைவுறுத்திக் கொண்டே இருப்பது அவசியமாகிறது. மனிதனை, மனிதாபிமானுள்ள மனிதனாகவே வைத்துக் கொள்ள கலை உதவுகிறது.

இன அழிப்பு நடக்கவே இல்லை என இலங்கை அரசு, உலக நாடுகளை நம்ப வைக்கத் துடிக்கிறது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகளைப் பற்றிப் பேசுவதும், அதைக் கலைவடிவத்தில் கொண்டு வருவதும் மிக முக்கியம். ஆனால், ‘இப்ப எங்க சார் இன அழிப்பு நடக்குது?’ எனக் கடந்து போகும் அலட்சியம் எவ்வளவு ஆபத்தானாதோ, அதை விட ஆபத்தானது, ‘இப்ப ஏன் ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் இந்த மாதிரி படம் எடுக்கிறாங்க?’ என்ற கேள்வியும்.

சாதி பேதமற்ற (!?) இன்றைய தமிழ்நாட்டில் (UTOPIA) பிறக்கும் குழந்தைகளுக்கு, ‘ஐயோ, சாதியின் பெயரால் இவ்ளோ கொடுமை இங்கே நிகழ்த்தப்பட்டிருக்கா?’ எனத் தெரியப்படுத்தி, இனி வரும் தலைமுறைகளில், வாட்ஸ்-அப் ஆண்டப்பெருமை கட்டுக்கதைகளை நம்பி, சாதிக் கொடுமைகளை மீண்டுமொரு முறை நிகழ்த்த எவரும் நினைத்துக் கூடப் பார்க்காதபடி செய்யவேண்டும். அதற்கு, இத்தகைய படங்கள் அவசியமாகிறது.

அசுரன் தனுஷும், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜும் இணைவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. போதாக்குறைக்கு, பற்றியெரியும் ஆவலில் பெட்ரோலை ஊத்தியது போல், சந்தோஷ் நாராயணின் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடலும் தன் பங்கிற்கு எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தில், குறியீடுகளாகப் பலவற்றைப் பார்த்துப் பார்த்து மாரி செல்வராஜ் செதுக்கியிருந்தாலும், அவர் தனது முதற்படத்தில் நிகழ்த்திய மேஜிக்கைத் தவற விட்டுள்ளார். சின்னசாமியும் பரியனும் பார்வையாளர்களுடன் கலந்தது போல், கர்ணன் இணையாமல் சற்று ஒதுங்கியே நிற்கிறார். சாதி பின்னகர்ந்து, ஈகோவால் (சாதித்திமிர் – குறியீடு) சீண்டப்படும் அதிகாரம் முன்னகர்ந்து, மையச்சரடு தடம் புரண்டுவிடுவதால், மாரி செல்வராஜின் குறி இலக்கை ஊடுருவாமல் உரசி மட்டுமே செல்கிறது.

பார்வையாளர்களைத் தன்னுள் இழுக்காத திரைக்கதையும், கர்ணனைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்காத ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்தின் மைனஸ். தனுஷுக்குமே, பிரத்தியேகமாய் தன் நடிப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் தருணம் என்பது படத்தில் வாய்க்கவேயில்லை. ஆனால், ஒரு பாட்டியின் முந்தானையில் இருந்து பணத்தைத் திருடும் ஏமராஜாவாக நடித்திருக்கும் லாலுக்கு, அக்காட்சியில் அது வாய்த்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தருணத்தைக் கொண்ட காட்சிகளில் ஒன்று அது. இன்னொரு முறை படத்தைப் பார்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமளவு பிரமாதப்படுத்தியுள்ளார் லால். அவர் பாடும் ‘மஞ்சனத்தி’ எனும் பண்டாரத்திப் புராணப் பாட்டில் காதலும் புரட்சியும் அனல் பறக்கிறது. லால் ஏற்றிருக்கும் ‘ஏமராஜா’ என்ற பாத்திரத்தையே படத்திற்குத் தலைப்பாக வைத்திருக்கலாம்.

கர்ணனைச் சகித்துக் கொள்ளும் பாசமிகு ஏமராஜாவிற்காகக் கர்ணன் அளிக்கும் ஏமாற்றத்தை நாமும் சகித்துக் கொள்ளலாம்.