Shadow

கட்டில் விமர்சனம்

மூன்று தலைமுறையாக வசித்து வரும் வீட்டை விற்றுவிட்டு கிடைக்கும் காசு பணத்தைக் கொண்டு, வியாபாரம் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நாயகனின் அண்ணன்கள் மற்றும் அக்காமார். நாயகன் தன் தாய், தன் மனைவி மற்றும் மகனோடு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்து வருகிறான். நாயகனும் அவன் மனைவியும், நாயகனின் தாயும் அந்த வீட்டை விற்கும் முயற்சியை கைவிடச் செய்ய முயற்சி செய்கிறார்கள். அது முடியாமல் போகும்பட்சத்தில், தங்கள் பரம்பரையில் ஒவ்வொரு குழந்தையும் பிறந்து தவழ்ந்த பூர்விக கட்டிலையாவது காப்பாற்ற முனைகிறார்கள். அதை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா..? என்பதே “கட்டில்” திரைப்படம்.

ஒரு இயல்பான யதார்த்தமான கதை. அந்த கதையின் போக்கில் ஒரு சிக்கல், அந்த சிக்கலுக்கு தீர்வு காணும் க்ளைமாக்ஸ் என எளிய முறையில் பயணிக்கும் திரைக்கதையை எடுத்துக் கொண்டு, அதில் இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. வீட்டை காப்பாற்ற முடியாது என்பது தெரிந்துவிடுகிறது. கட்டிலையாவது காப்பாற்றுவோம் என்று களத்தில் இறங்குகிறார்கள். வீட்டை வாங்க இருக்கும் முதலாளி கட்டிலுக்கும் பெரும் தொகை கொடுக்கிறேன். எனக்கே விற்றுவிடுங்கள் என்று ஆசை காட்டுகிறான். நாயகனின் சகோதர சகோதரிகள் யோசிக்க, நாயகன் புத்திசாலித்தனமாக தனக்கு வரும் பங்கு காசில் கட்டிலுக்கான விலையை பிடித்தம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல அந்தப் பிரச்சனையும் தீர்கிறது.  பிறகு ஒரு சிக்கல் புதிதாக வருகிறது. அது என்ன சிக்கல்..?வீட்டை காலி செய்தபின்னர் நாயகன் குடிபோக இருக்கும் புதிய வீடு கட்டிலை வைக்கும் அளவிற்கு பெரியதாக இருக்க வேண்டும்.  அவ்வளவு பெரிய கட்டிலை வைப்பதற்கு ஏற்றார்  போன்ற வீடு கிடைக்க வேண்டும்…?  நாயகனும் தான் பார்க்கும் புது வீட்டின் வாசல்களை எல்லாம் டேப் கொண்டு அளந்து பார்க்கிறான். கட்டிலை உள்ளே கொண்டு வர முடியுமா…? முடியாதா…? என்று. இந்தக் காட்சியிலும் இந்தச் சிக்கலிலும் தான் ஒட்டுமொத்த படமும் ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது.

கையில் 75 இலட்சம் ரூபாய்கான செக் இருக்கிறது. இவனோ சொந்த வீடு வாங்கப் போகிறான். நான் ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த கையோடு வீடு காலி செய்ய வேண்டும் என்றால், என் பங்கு பணம் எனக்கு முதலிலேயே கொடுத்து விட வேண்டும். அதில் தான் நான் வீடு வாங்க வேண்டும், அப்படி கொடுக்க விருப்பமில்லை என்றால் என்னால் கையெழுத்துப் போட முடியாது என்று சொன்னால் கண்டிப்பாக அவனுக்கான பணத்தைக் கொடுக்கத்தான் போகிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு புது வீடு வாங்கி, கட்டில் உள்ளே செல்வதற்கு ஏதுவாக வீட்டின் வாசலை அகலப்படுத்தி கூட வீட்டை ரெடி பண்ணிவிட முடியுமே.. இப்படி கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு வேலையை முடிக்காமல், கட்டில் வைப்பது போல் வீடு கிடைக்கவில்லை என்று அலைந்து கொண்டே இருப்பதும், ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்தப் பின்னரும் அதே வீட்டின் மூலையில் அனுமதி பெற்று குடியிருந்து அவமானப்படுவதும் வலிய திணிக்கப்பட்ட காட்சிகளாகத்தான் இருக்கின்றன.

மேலும் பாரம்பரிய கட்டில், அதன் மீது அத்தனைப் பிரியம் என்கிறார்கள்.  அதற்கான காட்சித் தொகுப்புகள் படத்தில் இல்லவே இல்லை. சிறுவயது விதார்த் ஆக வரும் சிறுவன் நிதிஷ் அந்தக் கட்டிலை தேடிப் போய் அதன் மீது ஏறி படுத்துக் கொண்டு தூங்கும் காட்சி மட்டுமே ஒற்றைக் காட்சியாய் அந்த உணர்ச்சிக்கு உயிர் கொடுக்கிறது. ஆனால் அதுவும் போதுமானதாக இல்லை. இப்படி கதையை இஷ்டத்துக்கு வளைத்துக் கொண்டு தேவைப்படாத எமோஷனல் காட்சிகளை வலிய துணிக்கத் துவங்குவதால், படத்தின் மீது இயல்பாக எழும் பிரியம் ஏனோ எழாமல் போகிறது. இதை காலதாமதமாக உணர்ந்து கொள்ளும் இயக்குநர், கட்டிலிலும் கட்டிலுக்கான சிக்கலிலும் உயிர் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, செம்மலர் அன்னம் கதாபாத்திரத்தை புதிதாக அறிமுகப்படுத்தி, நாயகனின் மனைவி தனமாக வரும் சிருஷ்டி டாங்கேவிற்கும் பிரச்சனையை ஏற்படுத்தி மீண்டும் பச்சாதாபத்தை வரவழைக்கப் பார்க்கிறார்.

செம்மலர் அன்னமும், சிருஷ்டியும் நிறைமாத கர்ப்பிணிகளாக ஒரே ஆட்டோவில் பயணிக்கும் இடத்தில் இருந்து அவர்கள் படும் துயரைக் கண்டு நம் இயல்பாகவே இளகத் துவங்குகிறது. இப்படி மையக்கதையை விட படத்தின் கிளைக்கதையாக வரும் கதை ஒரு வசீகரமான சிறுகதையைப் போல் நம்மை ஈர்க்கிறது. ஆனாலும் அது மையக்கதையோடு பொருந்தாமல் விலகித்தான் நிற்கிறது. “கட்டில்” என்னும் கருப்பொருளை மையப்படுத்தி அதுவரை கதை சொல்லிவிட்டு இறுதிக்காட்சியை மட்டும் வேறொரு தொனியில் முடித்திருப்பது நெஞ்சை கணக்கச் செய்தாலும் ஏற்புடையதாக தெரியவில்லை. இதில் வரும் தொழிலாளர் போராட்டங்கள், இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மதநல்லிணக்கக் காட்சிகள் என்று கதை காதறுந்த பட்டம் காற்றில் பயணிப்பது போல் இஷ்டத்துக்கு பயணித்து ஒருவழியாக முடிந்தும் போகிறது.

இ.வி.கணேஷ்பாபு மூன்று வெவ்வேறுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, இப்படத்தை தயாரித்து இயக்கியும் இருக்கிறார். தயாரிப்பில் சிறு பட்ஜெட் படம் என்பது ஒவ்வொரு ப்ரேமிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. அதிலும் பரம்பரை வீடு தொடர்பான காட்சிகளிலும் இட்டு நிரப்புவதற்கான பொருட்கள் இல்லாமல் எல்லா ப்ரேமும் காலியாகத் தெரிகிறது. இயக்குநராக படத்தின் கதையின் மையத்தை விட்டுவிட்டு வேறு எதிலோ கவனத்தை செலுத்தி இருப்பது தெரிகிறது. நடிப்பாகப் பார்த்தால் சிறுவன் யுதீஷின் அப்பாவாக வரும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இயலாமை, வறுமை, கோபம், நிராசை ஆகிய உணர்வுகளை சிறப்பாக கடத்தி நடித்து  இருக்கிறார். மனைவியாக வரும் சிருஷ்டி டாங்கேவிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கூட க்ளைமாக்ஸ் காட்சிகளில் நம் கண்ணை கலங்கச் செய்கிறார்.  செம்மலர் அன்னம் சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் தன் சீரிய நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.  விதார்த் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வந்து போகிறார்.

தொன்மை பொருட்களை சேகரிக்கும் வர்த்தகர் கதாபாத்திரத்தில் இந்திரா செளந்தர்ராஜன் சிறப்பாக நடித்திருக்கிறார். பாட்டியாக வரும் கீதா கைலாசம் தன் கணவனோடு வாழ்ந்த வீட்டையும்  அந்தப் பரம்பரைக் கட்டிலையும் பிரியும் தவிப்பை கண்கள் மற்றும் உடல்மொழியின் மூலம் நம் உள்ளத்துக்கு கடத்துகிறார்.

வைட் ஆங்கிள் ரவியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கனகச்சிதம். ஒளியையும் காட்சி சட்டகங்களையும் கதைக்கான புரிதலோடு கையாண்டிப்பது கண்கூடாகத் தெரிகிறது.  ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அந்த ஒப்பாரிப் பாடல் உயிரை உருக்குகிறது.  க்ளைமாக்ஸ் காட்சிகளில் பின்னணி இசை அந்த வீட்டிற்கே நம்மை கூட்டிச் செல்கிறது.

தேசிய விருது பெற்ற எடிட்டர் லெனின் இப்படத்திற்கு எடிட்டிங் செய்திருப்பதோடு, கதை திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதி இருக்கிறார்.  இயக்கத்தை மட்டும் இ.வி.கணேஷ்பாபு மேற்கொண்டிருக்கிறார்.

கதையாக மிக எளிமையான இயல்பான கதை. அதை கையாண்ட விதத்திலும், திரைக்கதை அமைத்த விதத்திலும் அந்த இயல்புத்தன்மையோ யதார்த்தமோ இல்லாதது பெருங்குறை. மையக்கதையைவிட கிளைக்கதை சிறப்பாக இருக்கிறது.  மொத்த கதையும் கர்ப்பிணிப் பெண் வீடு காலி செய்து போகக்கூடாது என்கின்ற மூடத்தனத்தை பறைசாற்றத்தான் எடுக்கப்பட்டதோ என்கின்ற கேள்வியும் மேல் எழுகிறது.

மொத்தத்தில் “கட்டில்”  வெளிப்பார்வைக்கு பாரம்பரியம் மற்றும் பூர்வீகம் நிறைந்த  படைப்பாக தெரிந்தாலும் நம்மோடு உறவாடாத, நம் உணர்வு சமநிலைக்கோ அறிவு சமநிலைக்கோ உதவாத ஒரு படைப்பாகவே குறுகிவிடுகிறது.