Search

கொலை விமர்சனம்

விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை.

பிரபல மாடலும் பாடகியுமான லைலா என்னும் பெண் பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அவளை கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தான் இந்தக் கொலை.

இயக்குநர் பாலாஜி K. குமாரின் முந்தைய படமான ‘விடியும் முன்’ திரைப்படமே அது உருவாக்கப்பட்ட விதத்திலும், அதில் பயன்படுத்தப்பட்ட ஒளிக் கீற்றுகள், வண்ணங்கள் ஆகியவற்றின் பலத்தினாலும் இந்திய வரைவியலுக்கு உட்பட்ட கதைக்களமான நிலத்தை ஹாலிவுட் காட்சியமைப்போடு காட்டி மிரட்டியதற்காக வெகுவாக பாராட்டும் வரவேற்பும் பெற்றது.

அது போல் தான் கொலை திரைப்படமும். படத்தின் ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையில் வரும் காட்சி பிம்பங்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரைப்படத்தின் ஒளிப்பதிவும், படத்தில் இடம் பெற்றிருக்கும் இடங்களும் கதைப்படி 1920 ஆம் ஆண்டு காலகட்ட சென்னை நகரம் என்று கூறப்பட்டாலும் கூட, ஏதோ நியூயார்க் நகர வீதிகளைப் பார்ப்பது போல் தோற்றமளித்து ஒரு ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்கியது

காட்சியமைப்பில் மட்டுமின்றி கதை சொல்லப்படும் விதத்திலும், படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் விதத்திலும் இப்படம் வழமையான தமிழ்த் திரைப்படங்களுக்குள் அடங்காமல் சற்று விலகி நின்று நம்மை புருவத்தை உயர்த்தச் செய்கின்றது. தொழில்நுட்ப ரீதியாக வியந்தோதும் வகையில் உருவாகியிருக்கும் கொலை திரைப்படம் திரைக்கதையிலும் சில மாயவித்தைகளைச் செய்து காட்டியிருக்கிறது.

விசாரணை தொடங்கும் ஆரம்பப் புள்ளியில் இருந்து காட்டப்படும் சின்னச் சின்ன காட்சிகள் கூட முதலில் காட்டப்படும் போது ஒரு விதமான புரிதலையும், துப்பறியும் அதிகாரி விநாயக்காக வரும் விஜய் ஆண்டனி பார்வையில் அவை விளக்கப்படும் போது வேறொரு விதமான புரிதலையும் கொடுத்து ஒரு மிரட்டலான காட்சி அனுபவத்தினைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இறந்த மாடலின் வீட்டிற்குள் ஃப்ரிட்ஜின் ஃபீரிசரில் வைக்கப்பட்டுக் காணாமல் போயிருக்கும் ஒரு ஐஸ் க்யூப், கொலை செய்யப்பட்ட மாடலின் மேனேஜர் என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒரு கதாபாத்திரம், ‘அவள் வீட்டில் இல்லை’ என்று செக்யூரிட்டியின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டும் கூடப் போய் காலிங் பெல் அடித்துவிட்டுத் திரும்பிச் செல்வது, தன் காதலனுடன் வெளியில் போய் வந்த லைலா தன் காதலன் செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பப் போகும் சில நொடியில் அலறத் துவங்குவது, காதலனும் செக்யூரிட்டியும் வந்து என்னவென்று கேட்கும் போது கதவைத் திறக்காமல் உள்ளிருந்தபடியே பதில் அளிப்பது, உள்ளிருந்து அவர்கள் பேசும் போது அவரின் குரலில் ஏதோ வித்தியாசம் இருந்தது என்று செக்யூரிட்டி கூறுவது என இவை எல்லாமே விநாயக் பார்வையில் விளக்கப்படும் போது வேறொரு பரிமாணம் அடைவதைத் திரைக்கதையில் காண முடிகிறது. இங்குக் கொடுக்கப்பட்டவை எல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. இது போன்ற சுவாரசியமான விடயங்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

இது போன்ற துப்பறியும் கதைகளுக்குப் பலமே விசாரணை வளையத்தின் மூலம் மர்மங்களும் குழப்பங்களும் ஒவ்வொன்றாகக் கூடிக் கொண்டே செல்வதும் ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் குழப்பங்களும் மர்மங்களும் ஒவ்வொன்றாக விலகி ஒரு தெளிவான திடமான புரிதலும் கொலை இப்படித்தான் நடந்திருக்கும் என்பதான ஒரு கற்பனையான காட்சி அமைப்பும் பார்வையாளனுக்குப் படம் முடிவதற்கு முன்பே உருவாகி, அதை அவன் சரிபார்த்துக் கொள்வதற்கான மன உந்துதலையும் அடைவான். அதனைக் ‘கொலை’ திரைப்படம் செவ்வனே நிகழ்த்திக் காட்டுகிறது.

கொலை செய்யப்பட்ட லைலாவான மீனாக்ஷி சேஷாத்ரியைக் கடைசியாக உயிரோடு பார்த்த காதலன் சித்தார்த் சங்கர், அவள் பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து பேசுவதைக் கேட்ட செக்யூரிட்டி மற்றும் காதலன், அவளை முதன் முறையாக மாடலிங் துறைக்கு தன் வசீகரமான புகைப்படத்தின் மூலம் கூட்டி வந்த புகைப்படக் கலைஞன் அர்ஜூன் சிதம்பரம், அந்தப் புகைப்படக் கலைஞனுக்கும் லைலாவிற்கும் ஏற்பட்ட பூசல், தன்னை லைலாவின் மேனேஜர் என்று தன்னிச்சையாகச் சொல்லிக் கொண்டு திரியும் கிஷோர் குமார் கதாபாத்திரம், அவளை மாடலிங் துறையில் ஈடுபடுத்தி சம்பாதிக்க முனையும் முரளி சர்மா கதாபாத்திரம், முரளி சர்மாவின் தலைமையாக வரும் ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சேஷாத்ரியுடன் நட்பாகப் பழகிய மன வளர்ச்சி குன்றிய சிறுவன் கதாபாத்திரம், காதலன் சித்தார்த் சங்கர் போதையின் போது உளறிய “யாமினி” என்னும் ஒற்றை வார்த்தை, பிறை நிலா, சூரியன் மற்றும் நட்சத்திரம் அடங்கிய டாட்டூ, அதே வடிவமைப்பில் இருக்கும் ப்ரேஸ்லட் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரம் மட்டுமின்றி ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களும் கூடக் கதைக்கும் திரைக்கதைக்கும் பக்கபலமாக இருந்து பார்வையாளனுக்கு மிகச் சிறந்த த்ரில்லர் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்னும் காட்சி அனுபவத்தைக் கொடுக்கிறது.

மிகமிக மெதுவான ஆரம்பக் காட்சிகள், அவற்றில் தொற்றிக் கொண்டு இருக்கும் நாடகத்தன்மை, திரைப்படமோ திரைக்கதையோ உணர்வலைகளோடு உறவாடாதது, திரைப்படம் என்ன சொல்ல வருகிறது என்பதான மையக்குவிப்பு இது போன்ற விடயங்களில் திரைப்படம் சற்று சறுக்கி இருந்தாலும் கூட, சிவக்குமார் விஜயனின் பிரமிப்பூட்டும் காட்சி அமைப்பிலும், வித்தியாசமான கதை சொல்லலிலும், விறுவிறுப்பூட்டும் படத்தொகுப்பிலும் த்ரில்லர் வகைமை திரைப்படத்திற்கே தேவையான எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் ஒவ்வொன்றாய்க் கசியவிடும் தருணத்தினாலும், இந்தக் கொலையை மனம் மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்க முனைகிறது. அதுவே இப்படத்தின் வெற்றிக்கும் சாட்சியாக நிற்கிறது.

– இன்பராஜா ராஜலிங்கம்