
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு. படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம், படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை. அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது. இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது. மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது, சிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் படத்தின் இரண்டாம் பாதியான அலைபாயுதேவைப் பார்க்கும் போது, குஷியாகத் தான் இருக்கிறது.
பூஜை, புணஸ்காரங்கள், சாஸ்திரம் ஜோதிடம் போன்றவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் திருச்செந்தூர் வீரசைவ சொற்பொழிவாளரின் மகள் திருவளர் செல்வி ஆராத்யா (சமந்தா), அதே போல் சென்னையில் சாஸ்திர சம்பிரதாயங்களைச் சாடி, அனைத்தும் அறிவியலே என்று சாதித்து பகுத்தறிவிற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் அறிவியலாளரின் மகன் திருவளர் செல்வன் விப்லவ். இரு அப்பாக்களும் தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து மாடு போல் முட்டிக் கொண்டு திரிய, கன்றுக்குட்டிகளோ காதல் வயப்படுகின்றன. அவர்களின் திருமணத்திலும் சடங்கு சம்பிரதாயங்கள் ஊதுவத்தி கொளுத்த, காதல் ஜோடி பெற்றோரைப் பிரிந்து பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து அவர்களின் இல்லற வாழ்க்கையில் இயல்பாகத் தோன்றும் பிரச்சனைகளும் பூதாகரமாக வெடிக்க, அந்தப் பிரச்சனைகளுக்கு சுபமாக முடிவு சொல்வதே இந்த “குஷீ” திரைப்படம்.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒரு இருபது நிமிடம் நம் பொறுமையை சோதிக்கும் பகுதி. காதல் காட்சிகளானாலும் சரி, படத்தின் ஆணிவேரான அந்த கருத்து மோதல் காட்சிகளானாலும் சரி, இரண்டும் அழுத்தமே இல்லாமல் நம்மை பெரிதும் சோதிக்கின்றன. காதல் காட்சிகளில் தேறுவது சமந்தா கூட்டணி சாதுர்யமாகச் சொன்ன ஒரு பொய்யை நம்பி ஊரில் சுற்றும் அநாதை சிறுவர்களை எல்லாம் அழைத்து வர, அதில் ஒருவன் உண்மையாகவே தன் குடும்பத்தை தொலைத்து தேடிக் கொண்டு இருக்கும் சிறுவனாக இருக்க, அவன் தன் தாயோடு சேரும் காட்சி தான் உயிர்ப்பானது. மற்ற காதல் காட்சிகளில் கற்பனையும் இல்லை, காதலும் இல்லை, இதனால் நம்மால் காட்சிகளோடு ஒன்றவும் முடிவதில்லை.
மீண்டும் சமந்தா, பேகம் என்னும் முஸ்லீம் பெண் அல்ல (கொஞ்சம் உயிரே திரைப்படத்தின் சாயல்); அவர் ஆராத்யா என்னும் பெயர் கொண்ட ஒரு பிராமணப் பெண் என்பது தெரியும் இடத்தில் இருந்து தான் கதையே துவங்குகிறது. குடும்ப உறுப்பினர்களில் அதிகமாகக் கவர்வது நடிகை லட்சுமியும் சரண்யா பொன்வண்ணனும் தான். இந்த காதலை கல்யாணத்தில் கைகூட வைப்பது ஒவ்வொருவர் வீட்டிலும் இவர்கள் நகர்த்தும் காய் தான். அதிலும் குறிப்பாக சரண்யா பொன்வண்ணன் கடவுள் பக்தி கொண்ட பெண்ணாக இருந்து கொண்டு, நாத்திகவாதியான தன் கணவனை சமாளிக்கப் படும் பாடுகள் சிரிப்பை வரவழைக்கின்றன.
நாத்திகவாதியாக வரும் சச்சின் கண்டேல்கர், ஆன்மீகவாதி சதுரங்கம் சீனிவாசராவ் ஆக வரும் முரளி ஷர்மா ஆகியோர் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பாகப் பொருந்திப் போகிறார்கள். ரோகிணி மற்றும் ஜெயராம் ஜோடி படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களா…? என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் கதை எதிர்பார்த்த தாக்கத்தைக் திரைக்கதையில் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
படத்தை மொத்தமாக தாங்கிப் பிடிப்பது கதையோ திரைக்கதையோ இல்லை. அந்தப் பணியை தங்கள் தோளில் எடுத்துக் கொண்டு அதை சுமந்திருப்பவர்கள் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் நாயகி சமந்தாவும் தான். சாதாரணமான காட்சிகளைக் கூட இவர்களின் இயல்பான நடிப்பும் இருவரின் துறுதுறுப்பும் பாஸ் மார்க் வாங்க செய்துவிடுகின்றன. அதிலும் குறிப்பாக சமந்தா ஒவ்வொரு காட்சிகளிலும் அவரது ஸ்பெஷலான முக பாவனைகளைக் கொடுத்து, ஒவ்வொரு சிணுங்கல்களிலும் செஞ்சுரி அடிக்கிறார். முகத்தில் அறைந்தார் போல் கதவைச் சாத்தி வெளியே தள்ளிய அப்பாவைப் பகைத்துக் கொண்டு தன் காதலனோடு அழுகையுடன் கதைக்கும் அவரை ஆண்கள் அத்தனை பேரும் வாரி அணைத்துக் கொள்ள, எதிர்புறம் சமந்தாவை உருகி உருகி காதலித்து அவரையே கல்யாணமும் செய்து கொண்டு, இயல்பான கோபங்களை வெளிப்படுத்தும் போது கூட அது சண்டையாக உருவெடுப்பதைப் பார்த்து உரு குலையும், பெண்களை பொத்தாம் பொதுவாக விரக்தியில் உதாசீனப்படுத்திப் பேசும் விப்லவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டாவை கன்னிகள் கண்ணில் நிறைந்து வழியும் காதலோடு பார்த்து ஏங்கும் அதிசயம் இங்கும் நடப்பதே இப்படத்தின் வெற்றி.
பகுத்தறிவா…? பஞ்சாங்கமா…? என்கின்ற கத்தி மேல் நடப்பது போன்ற கேள்வி எந்தச் சார்பு எடுத்துப் பேசினாலும் கத்தி குத்தும் என்பதை உணர்ந்த இயக்குநர், இரண்டுக்கும் சாத்தியம் உண்டு என்பதால் ஒரு Diplomatic விடையை கதையின் க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்திருப்பதன் மூலம் தான் புத்திசாலி என்பதை நிருபிக்கிறார்.
ஹேசம் அப்துல் வஹாப் இசையில் ஆராத்யா என் ஆராத்யா பாடல் வசீகரிக்க, அவரின் பின்னணி இசை படத்திற்குத் தேவையான இளமையையும் துள்ளலையும் கொடுக்கிறது. முரளி. ஜி-யின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. பிரவீன் புடியின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க சிவ நிர்வானா இயக்கி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் கதை திரைக்கதையில் கவனம் குவித்திருந்தால் “குஷீ” உண்மையாகவே எல்லா காட்சிகளிலும் குஷிப்படுத்தி இருக்கும்.
இருப்பினும் மேற்சொன்னவாறு விஜய்தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் ஆங்காங்கே வெளிப்படும் இளமைத் துள்ளலுக்காகவும், இயல்பான நடிப்பிற்காக மட்டும், குஷீ ஓகே.